ஐந்து மாநில தேர்தலில் கறுப்பு பண ஆதிக்கம்: ரூ.32
புதுடில்லி : சமீபத்தில் நடந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், பண பலம், புகுந்து விளையாடி உள்ளது அம்பலமாகி உள்ளது. அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில், கணக்கில் காட்டப்படாத, 32 கோடி ரூபாய், அரசியல் கட்சியினரிடமிருந்து, பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறியதாவது: கண்காணிப்பு குழுக்கள்: தேர்தல்களில், அரசியல் கட்சியினரால், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படும் போக்கு, சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த பண பலத்தை கட்டுப்படுத்துவதற்கு, தேர்தல் கமிஷன், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தேர்தல்களின் போது, இதற்காகவே, தனியாக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படுகின்றன.இந்நிலையில், சமீபத்தில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டில்லி, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில், சட்டசபை தேர்தல்கள் நடந்தன. இதில், பண பலத்தை தடுப்பதற்காக, தேர்தல் கமிஷன், அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தது.ஆனாலும், அதையும் மீறி, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் நடைமுறை, பல்வேறு இடங்களில், ஜோராக அரங்கேறியது. இந்த, ஐந்து மாநிலங்களிலும், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த, கணக்கில் காட்டப்பட்டாத, 32 கோடி ரூபாய், கறுப்பு பணம், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களிடம் இருந்து, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இநத பட்டியலில், ராஜஸ்தான், முதலிடத்தில் உள்ளது. இங்கு மட்டும், 13 கோடி ரூபாய், கைப்பற்றப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில், ஒன்பது கோடி ரூபாயும், சத்தீஸ்கரில், எட்டு கோடி ரூபாயும் கைப்பற்றப்பட்டுள்ளன.டில்லியில், இரண்டு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. வட கிழக்கு மாநிலமான, மிசோரமில், 18 லட்சம் ரூபாய் மட்டுமே, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.