சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதம்தோறும் ரூ.5 உயர்த்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதேபோல் மண்ணெண்ணெய் விலையை மாதம்தோறும் 50 காசுகள் முதல் ரூ.1 வரை உயர்த்தவும் மத்திய அரசு பரிசீலிக்கிறது. மண்ணெண்ணெய், சமையல் எரிவாயுவுக்கு ரூ. 80 ஆயிரம் கோடி மானியம் வழங்குகிறது மத்திய அரசு. மானியத்தை முழுமையாக ரத்து செய்யும் நோக்கில் மாதம்தோறும் விலையை உயர்த்த மத்திய அரசு பரிசீலிக்கிறது.
மாதந்தோறும் ரூ.10 என ஒரே ஆண்டில் ரூ.120 உயர்த்திட மோடி அரசு திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ரயில் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால், சமையல் எரிவாயு விலையை ரூ.10 என்பதற்கு பதிலாக ரூ.5 என உயர்த்தலாம் எனப் பரிசீலித்துவருவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், மண்ணெண்ணெய் விலையையும் மாதாமாதம் உயர்த்த திட்டமிடுகிறது.இவ்வாறு மாதம்தோறும் ரூ.5 விலை உயர்ந்தால் சமையல் எரிவாயுவுக்கான மானியம் 7 ஆண்டுகளில் ரத்தாகும்.