நேரடி அந்நிய முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்தும் விபரீதம் !
மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தும் நாசகர முடிவுக்கு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வியாழனன்று ஒப்புதல் அளித்தது.
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு நரேந்திர மோடி தலைமையில் கூடி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தின் நடப்புக்கூட்டத்தொடரிலேயே இந்த மசோதாவைத் தாக்கல் செய்ய மோடி அரசு முடிவு செய்துள்ளது. மத்திய பட்ஜெட் உரையில் அருண் ஜெட்லி காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை உயர்த்த முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். இதற்கு தற்போது செயல்வடிவம் கொடுக்கதுவங்கியுள்ளனர். அந்நிய முதலீட்டு வரம்பு உயர்த்தப்பட்டாலும் நிர்வாகம் இந்தியர்களின் கையில் இருக்க வகை செய்யப்படும் என்று மோடி அரசு கூறியுள்ளது.
எனினும் ஒரு சதவீதஅளவுக்கு அந்நிய முதலீடு உயர்த்தப்பட்டாலும் பிரம்மாண்டமான காப்பீட்டுத்துறை அந்நியர்களின் கைக்கு சென்றுவிடும். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்திலேயே இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. எனினும், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த மசோதாவை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டுள்ளது. பாஜக அரசு கொண்டுவரும் இந்த மசோதாவை வரவேற்பதாகவும், ஆதரித்து வாக்களிப்போம் என்றும் காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே கூறியுள்ளது. பொதுத்துறையாக காப்பீட் டுத்துறை கம்பீரமாக இயங்கி வரும் நிலையில், அந்நியர் ஆதிக்கத்தை அந்தத்துறையில் திணிக்கமோடி அரசு மேற்கொண் டுள்ள முயற்சியை இடதுசாரிக் கட்சிகளும் தேசபக்தஉணர்வுள்ள தொழிற்சங்கங் களும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. மோடி அரசின் இந்த முயற் சியை எதிர்த்து இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறது.
வேலைநிறுத்தம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களுக்கும் தொழிற்சங்கங்கள் திட்டமிட் டுள்ளன.காப்பீட்டுத்துறையை தங்களது கோரப்பசிக்கு திறந்துவிடுமாறு அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு முதலாளிகளும், உலக வங்கி போன்ற அமைப்புகளும் தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்து வருகின்றன. இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் 1999 சட்டத்தின்படி 2000 ஆண்டில் இன்சூரன்ஸ் துறை தனியாருக்கு திறந்துவிடப்பட்டது. 26 சதவீத நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 49 சதவீதமாக உயர்த்தமோடி அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவின் மூலம் 25 ஆயிரம் கோடி அளவுக்கு காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீடு வரும் என்று மோடி அரசு கூறுகிறது. இந்த முடிவை இந்திய முதலாளிகள் அமைப்புகள் வழக்கம்போல் வரவேற்றுள்ளன
காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை உயர்த்தும் மசோதா நிறைவேற்றிய பிறகு இதே கோட்பாட்டின் அடிப்படையில் ஓய்வூதியத்துறையில் அந்நிய முதலீட்டுவரம்பை அதிகரிப்பதற்கான மசோதாவும் நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது 24க்கும் மேற்பட்ட தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஆயுள் மற்றும் பொதுக்காப்பீட்டு நிறுவனங்களில் செயல்பட்டு வருகின்றன. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுடன் போட்டிபோட முடியாமல் இந்த நிறுவனங்கள் அந்நிய முதலீட்டு வரம்பை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.