Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, August 3, 2014

இன்சூரன்ஸில் அந்நிய முதலீடு ! மோடியிடம் 30 கேள்விகள்?

க.சுவாமிநாதன் பொதுச் செயலாளர், தென்மண்டல இன்சூரன்ஸ்ஊழியர் கூட்டமைப்பு


இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதாவை மாநிலங்களவை யில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்போவதாக நரேந்திர மோடியின் அரசு அறிவித்திருக்கிறது. புதிய அரசு பதவியேற்று இரண்டு மாதங்களே முடிந்துள்ள நிலையில் அவசர அவசரமாக இம்மசோதா விவாதிக்கப்பட இருக்கிறது. “நல்ல நிர்வாகம் வாயிலாக வளர்ச்சி” என்ற முழக்கத்தை மக்களி டம் வெற்றிகரமாக விற்பனை செய்து ஆட்சியில் அமர்ந்துள்ள மோடியிடம் 30 கேள்விகள்.
1. மே மாதம் 2014 வரை காங்கிரஸ் அரசு கொண்டு வந்த இன்சூரன்ஸ் அந்நிய முதலீட்டு மசோதாவை உங்களின் பிஜேபி எதிர்த்து வந்தது. 2008ல் தாக்கலான மசோதா ஆறு ஆண்டுகளாக நிறைவேறவில்லை. ஆனால் ஆட்சியில் அமர்ந்த60 நாட்களில் என்ன ஒளிவட்டம் புதிய ஞானோ தயத்தை தந்திருக்கிறது மோடி அவர்களே?
2. 1999ல் 26 சதவீத அந்நிய முதலீட்டை இன்சூரன்ஸ் துறையில் அனுமதித்த வாஜ்பாய் அரசில் நிதித்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்காவின் தலைமையிலான நாடாளுமன்ற நிதியமைச் சக நிதிக்குழுவே ஒருமித்த குரலில் அந்நிய முத லீட்டை 49 சதவீதத்திற்கு உயர்த்தக் கூடாதென 2011 ல் அறிக்கை அளித்ததே! உங்கள் கட்சியை சார்ந்த அனுபவசாலித் தலைவரின் ஆலோ சனையைக்கூட ஏன் கேட்கவில்லை?
பூங்கொத்தா?
3. அமெரிக்காவிற்கு செப்டம்பர் 2014ல் விசிட்அடித்து பாரக் ஒபாமாவை சந்திக்கப் போகிறீர்களே, அதற்குள்ளாக இன்சூரன்ஸ் அந்நிய முதலீட்டு மசோதாவை நிறைவேற்றிவிட்டு போக வேண்டு மென என்ன நிர்ப்பந்தம்! இந்திய இன்சூரன்ஸ் துறை என்ன பூங்கொத்தா?
4. அமெரிக்காவுக்கு போகப் போகிற மோடி அவர்களே பாரக் ஒபாமாவை சந்திக்கும் போது 2008ல் இருந்து அலைக்கழித்த உலக நிதி நெருக்கடியால் ஏன் பெரும் பெரும் பன்னாட்டு இன் சூரன்ஸ் நிறுவனங்களும், 500க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகளும் திவாலானது என்று கேட் பீர்களா?
5. இந்தியாவில் ஆயுள் இன்சூரன்ஸ் தேசியமயமாக்கப்பட்டு 57 ஆண்டுகளாகவும், பொது இன்சூரன்ஸ் தேசியமயமாக்கப்பட்டு 41 ஆண்டுகளாக வும் திவால் என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றனவே. உங்கள் நாட்டின் மிகப் பெரும் ஏஐஜி இன்சூரன்ஸ் நிறுவனத்தைக் காப்பாற்ற அதன் 80 சதவீதப் பங்குகளை அமெரிக்க அரசே வாங்க வேண்டி வந்தது ஏன் என ஒபாமாவை கேட்பீர்களா?
6. 2000க்குப் பிறகு இந்தியாவிற்குள் டாடா வோடு கைகோர்த்து இணைவினையில் அனுமதிக்கப்பட்ட ஏஐஜி இந்தியாவைவிட்டு வெளியேறியது ஏன்? ஆஸ்திரேலியாவிலிருந்து வந்து சன்மாரோடு கைகோர்த்த ஏஎம்பி இந்திய இன்சூரன்ஸ் துறையைவிட்டு வெளியே சென்றது ஏன்? பத்தாண்டுகள் கூட தொழிலில் நீடிக்காத பன்னாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எப்படி பாலிசிதாரர்களுக்கு தரக்கூடிய உத்தரவாதத்தை ஒழுங்காக காப்பாற்றுவார்கள்?
7. இந்திய இன்சூரன்ஸ் சந்தையை விரிவாக்கி சாதாரண மக்களுக்கு அப்பயனை கிடைக்கச் செய்வதே அந்நிய முதலீட்டு உயர்வின் நோக்கம் என்கிறீர்களே, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் சராசரி பிரீமியத் தொகை ரூ.12018. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சராசரி பிரீமியத் தொகை ரூ. 30184. மோடி அவர்களே. சாதாரண மக்களுக்கு இன்சூரன்ஸ் பயனை கொண்டு போய் சேர்ப்பது யார்? சராசரி பிரீமியம் குறைவாக உள்ளது என்றால் சராசரி மனிதனை எட்டுவது எல்ஐசி என்றுதானே அர்த்தம்?
8. இந்தியாவிற்கு பன்னாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வருவது நமது நாட்டின் தேவைக் காகவா! அல்லது அவர்களின் வணிக வாய்ப்பு களுக்காகவா! வடஅமெரிக்காவில் இன்சூரன்ஸ் சந்தையின் வளர்ச்சி மைனஸ் 2.9 சதவீதம். ஐரோப்பிய நாடுகளில் மைனஸ் 0.6 சதவீதம் என்று கூறுகிற “சிக்மா” அறிக்கை மார்ச் 2014 ஐ நீங்கள் பார்க்கவில்லையா? அங்கே குளம் வற்றிப் போனதால் இங்கு இரை தேடி அவர்கள் வருகிறார்கள் என்பதுதானே உண்மை?
9. இந்தியாவிலுள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு முதலீடுகள் அதிகம் தேவைப்படுகிறது என்பதால் அந்நிய முதலீட்டை வரவழைப்பதாக உங்கள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகிறரே. ஆனால் இன்சூரன்ஸ் துறை மூலதனத்தை அதிகம் சார்ந்ததல்ல (Not Capital Intensive)பலநாடுகளில் பல நிறுவனங் களில் துவக்க மூலதனம் இந்தியாவை விட மிகக்குறைவாக உள்ளதே. எனவே Solvency Margin என்ற பெயரில் முதலீடுகள் அதிகம் தேவையெனச் சொல்வது அந்நிய முதலீடு தேவைஎன்கிற கருத்தை உருவாக்குகிற உத்தியே யாகும். இப்படிப் பட்ட கருத்துக்களை இத்துறையில் பெரும் நிபுணத்துவம் கொண்ட ஆர்.இராம கிருஷ்ணன் போன்றோர் வெளியிட்டுள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியாதா?
முரண்பாடில்லையா?
10. இன்சூரன்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ள பெரும் தொழிலகங்களான டாடா, பிர்லா, அம்பானி போன்றோர் பன்னாட்டுச் சந்தையில் மிகப்பெரும் முதலீடுகளை செய்பவர்கள். இப்படி அந்நியச் சந்தைகளுக்கு 2010-2013ல் வெளியேறியுள்ள இந்திய முதலீடுகள் ரூ.2லட்சத்து 12ஆயிரத்து 556 கோடிகள். உண்மை இவ்வாறு இருக்கும்போது இப்பெரும் தொழிலகங்களுக்கு அந்நிய முதலீடு தேவைப்படுகிறதென வாதாடுவது பிரபல வழக் கறிஞர் அருண் ஜெட்லிக்கு முரண்பாடாகத் தெரிய வில்லையா ?
11. ‘அதிக முதலீடு வந்தால் அதிக வணிகம், அதனால் இன்சூரன்ஸ் பெருக்கம்’ என்பது அருண்ஜெட்லியின் வாதம். ஆனால் மூலதனத்திற்கும் வணிகத்திற்கும் இன்சூரன்ஸ் துறையில் சம்பந்தமே இல்லை. எல்ஐசி 100 கோடி மூல தனத்தைக் கொண்டு ரூ.2,08,000 கோடி பிரீமிய வருமானத்தை திரட்டியுள்ளது. HDFC Standard Life Insurance கம்பெனி ரூ.2ஆயிரத்து 204 கோடி மூலதனத் தைக் கொண்டு 11ஆயிரத்து 373 கோடியை பிரீமிய வருமானமாக திரட்டி யுள்ளது. இதைவிட அதிகமான மூலதனத்தை ரூ.4ஆயிரத்து 844 கோடி கொண்ட பஜாஜ் அலையன்ஸ் 6ஆயிரத்து893 கோடி பிரீமியத்தையே திரட்டியுள்ளது. மோடி அவர்களே இன்சூரன்ஸ் வணிகத்தின் அச்சாணியே நம்பகத்தன்மைதானே தவிர அதிகமுதலீடு அல்ல என்பது உங்களுக்குத் தெரியாதா?
12. உலகப் பொருளாதார அமைப்பு (World Economic Forum) இன்சூரன்ஸ் வணிகப் பெருக்கத் தில் இந்தியாவுக்கு ஆயுள் இன்சூரன்ஸில் முத லிடத்தையும், பொது இன்சூரன்ஸில் மூன்றாவது இடத்தையும் தந்துள்ளது. ஆனால் உங்களின் நிதியமைச்சர்களும், கொள்கைப் பிரச்சாரகர்களும் ஏதோ இந்தியா ரொம்ப இன்சூரன்ஸ் பெருக்கத்தில் பின்தங்கியுள்ளதாகச் சித்தரிப்பது எதற்காக?
13. அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இந்தியாவிற்குள் வந்தால் சந்தை வளருமென நிதியமைச்சக நிபுணர்கள் கூறுகிறார்கள். 1999ல் முன்வைத்த அதே சொத்தை வாதம். அந்நிய முதலீடு எங்கேயும், எதையும் வளர்ப்பதற்காக போவதில்லை. மாறாக சந்தை வளர்வதற்கான முதிர்ச்சி ஏற்பட்டவுடன் அறுவடைக்கு வந்து விடுவார்கள் என்பதுதான் உண்மை. எல்ஐசி மட்டுமே வணிகம் செய்து வந்த 1990 களில் அதன்ஆண்டு குவிவு வளர்ச்சி விகிதம் (CAGR - Compounded Annual Growth Rate) 19.5 சதமாகஇருந்தது. அதே விகிதம் 2013-14 வரை தொடர்ந் திருந்தாலே எல்ஐசியின் மொத்த பிரீமியம் 3,37,526 கோடிகளாக இருக்கும். இன்று எல்ஐசியும், 24 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் சேர்ந்து திரட்டியுள்ள மொத்த பிரீமியத் தொகையும் இதுவே யாகும். மோடி அவர்களே இதற்கு என்ன அர்த்தம்! வளர்ந்த சந்தையில் பங்கு போட்டுள்ளார்கள் என்பதுதானே. மண்ணைப் பண்படுத்தி, உழுது, விதைத்து, நீர் பாய்ச்சி, உரம் போட்டு வளர்த்த பயிரை களவாடிப்போகிற வேலையைத்தானே அந்நிய முதலீடு செய்துள்ளது!14. அந்நிய முதலீடுகள் வந்தால் இந்தியப் பொருளாதாரம் பயன் பெறும் என்பது உங்கள் அரசின் வாதம். 2000 லிருந்து 13 ஆண்டுகளில் இந்திய ஆயுள் இன்சூரன்ஸ் துளையில் வந்துள்ள அந்நிய முதலீடுகள் ரூ.6300 கோடிகள். ஆனால் எல்ஐசி 11வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் மட்டும் ரூ.7,04,000 கோடிகளை அரசின் திட்டங் களுக்காகத் தந்துள்ளது. இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு. ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு நிதியாதாரம் வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்? அந்நிய முதலீட்டிற்கு கதவு திறப் பதா? எல்ஐசியைப் பலப்படுத்துவதா?
15. நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன்பு சாட்சியமளித்த ஐசிஐசிஐ-லொம்பார்டு போன்ற தனியார் இன்சூரன்ஸ் நிறுவனப் பிரதிநிதிகளே அந்நிய முதலீட்டு உயர்வு வேண்டாமெனக் கூறி யுள்ளார்களே! காரணம் என்ன? 49 சதவீதமாக அந்நிய முதலீட்டு வரம்பை உயர்த்தினால் அந்நியநிறுவனங்கள் இந்திய இணைவினைகளை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடாதா?
16. இந்திய நாட்டின் ஆதாரத் தொழில் வளர்ச் சிக்கு கடந்த 13 ஆண்டுகளாக இந்தியத் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பெரிதாக எதையும் செய்து விடவில்லை என்பது அரசின் பொருளாதார ஆய்வறிக்கைகளே தந்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் இல்லையா? அப்புறம் எப்படி உங்களுக்கு மட்டும் அந்த நம்பிக்கை வருகிறது? ஏதாவது சூடம் வளர்த்து அடித்துச் சத்தியம் செய்திருக்கிறார்களா?
பரிதவிப்பு கேட்கலையா?
17. இந்திய இன்சூரன்ஸ் துறையைப் பாரம்பரியக் காப்பீட்டு வணிகத்தை விட்டு பங்குச் சந்தையின் சூதாட்டத்திற்குள் தள்ளிவிட்டதே 10 ஆண்டுகால தனியார்துறையின் அனுபவம் என் பது உங்களுக்குத் தெரியாதா? பங்குச் சந்தை சரிந்த வுடன் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களின் பரிதவித்த குரல் உங்கள் காதுகளில் கேட்கவில்லையா?
18. அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் புதியபுதிய பாலிசி திட்டங்களை இந்தியாவிற்கு அறிமுகம் செய்வார்கள் எனக் கூறப்பட்டது. அப்படிஏதும் புதிய திட்டங்கள் இந்திய இன்சூரன்ஸ் சந்தைக்கு கிடைக்கவில்லை என நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்விலேயே வெளிப்பட்டிருப் பது உங்களுக்கு தெரியாதா?
19. நீங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக ‘விஜய காந்த்’ பாணி வசனம் பேசுபவர். மும்பை தாஜ் ஓட்டல் மீதான தாக்குதலில் தீரத்தோடு போராடி உயிர் நீத்த தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரேவின் பாலிசி உரிமத்தை எல்ஐசி வீடு தேடி 24 மணி நேரத்திற்குள்ளாக காசோலை மூலம் வழங்கியது உங்களுக்குத் தெரியாதா?
20. அதே ஹேமந்த் கர்கரே பாலிசி எடுத்திருந்த தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி எங்களின் பாலிசி விதிமுறைகளில் ‘தீவிரவாதத் தாக்குதல்கள் உள்ளடங்கவில்லை’ என்றும் ‘உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தே அவர் அப்பணியில் ஈடுபட்டார்’ என்று கூறியும் உரிமத்தைத் தர மறுத்தது உங்களுக்குத் தெரியாதா?
21. இன்சூரன்ஸ் தொழிலின் நேர்மையே பாலிசிஉரிமப் பட்டுவாடாவில்தான் உள்ளது. எல்ஐசி 99.5 சதவித உரிமங்களை ஒழுங்காகத் தருவது உலக சாதனை. ஆனால் சில தனியார் நிறுவனங்கள் 60 சதவீத உரிமங்களைக் கூட வழங்காமலிருப்பது இன்சூரன்ஸ் கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் புள்ளி விவரம். இதுவெல்லாம் உங்கள் மேசைக்கு வரும் கோப்புகளில் அதிகாரிகளால் எழுதப்படாதா?
22. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். மக்களின் வாங்கும் சக்தி அரிக்கப்பட்டதால் நிதிச் சேமிப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில்தான் எல்ஐசி 2013-14ல் 3 கோடியே 45 லட்சம் பாலிசிகளை விற்பனை செய்துள் ளது. தனியார் நிறுவனங்களும் சேர்ந்து விற்ற மொத்தபாலிசிகளில் 85 சதவீதம். உங்களின் கொள்கைகள்சட்டியைக் காலியாக்கும் போதும் அகப்பையில் வருகிறதென்றால் அதுதான் எல்ஐசி மீது மக்க ளுக்கு உள்ள நம்பிக்கை. மோடி அவர்களே கடைசிமனிதனையும் இன்சூரன்ஸ் தொட வேண்டுமென் றால் அதற்கு அந்நிய முதலீட்டு உயர்வு உதவாது. இந்த அனுபவம் நீங்கள் அறியாததா?
சேவை வரி நீக்கலாமே?
23. கிராமங்களை நோக்கி இன்சூரன்ஸ் நகர்வதற்கு பன்னாட்டு இன்சூரன்ஸ் நிறு வனங்களோ, தனியாரோ நகர்ந்துள்ளார்களா? எத்தனை கிராமங்களில் அவர்கள் அலுவலகம் திறந்துள்ளார்கள் என்ற பட்டியல் தரமுடியுமா?24. கடந்த ஓராண்டில் எல்ஐசி மினி அலுவலகங்களைக் கிராமங்களில் திறந்துள்ளது. முன் னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொந்த ஊர்கண்டனுhரில் கூட எல்ஐசிதான் மினி அலுவல கத்தை திறந்துள்ளதே தவிர வேறு எந்த தனியார் நிறுவனமும் திறக்கவில்லை. மோடி அவர்களே உங்கள் ஊரில் எப்படி? அருண்ஜெட்லி ஊரில் என்ன?
25. இன்சூரன்ஸ் அந்நிய முதலீட்டில் இப்படித் தலைகீழாகப் பேசுகிற நீங்கள் எந்த மாற்றத்தை மக்களுக்குத் தரப் போகிறீர்கள்?
27. இன்றைக்கு இன்சூரன்ஸ். நாளை சில்லரை வர்த்தகத்தைக் குறி வைக்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?
28. வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைக் கிற நீங்கள் அந்த இரும்பு மனதை அந்நிய முத லீட்டிற்கு எதிராகக் காட்டாமல், இந்தியச் சாமானி யமக்களிடம் காட்டுவது ஏன்?
29. இன்சூரன்ஸ் விரிவாக்கம் பற்றி இவ்வளவு கவலைப்படும் நீங்கள் ஆயுள் இன்சூரன்ஸ் மீதானசேவை வரியை நீக்கினால் சாமானிய மக்கள் பயன்படுவார்களே?
30. அறுதிப் பெரும்பான்மையை நாடாளு மன்றத்தில் தனிக்கட்சியாகப் பெற்றுவிட்ட துணிச்சலில் மக்களின் கருத்தை மதிக்காமல் மசோதாவின் தூசியைத் தட்டுகிறீர்கள். ஆனால் இந்திய மக்களின் 31 சதவீதம் மட்டுமே உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள் என்ற மக்கள் மன்றக் கணக்கு நினைவில் உள்ளதா?மோடி அவர்களே இந்தக் கேள்விகள் காதுகளில் விழுகிறதா? கார்ப்பரேட் ஊடகங்களின் இரைச்சலும், பன்னாட்டு மூலதனத்தின் பாராட்டுக்களும் மட்டுமே கேட்கிற இயர்ஃபோனைக் கொஞ்சம் கழட்டுவீர்களா?