Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, August 3, 2014

ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகளால் பாஜகவின் திட்டம் தகரும் வாய்ப்பு !






இன்சூரன்ஸ் திருத்தச் சட்டமுன்வடிவை நிறைவேற்ற முடியாமல் பாஜகதலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளிடம் அடிவாங்கக்கூடும் எனத் தெரிகிறது. நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றுவதில் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐமுகூ அரசாங்கத்திற்கும், பாஜக தலைமையிலான தேஜகூ அரசாங்கத்திற்கும் பெரிய அளவில் வித்தியாசம் எதுவும் இல்லை. இருப்பினும் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டின் உச்சவரம்பை 26 சதவீதத்திலிந்து 49 சதவீதமாக உயர்த்திடுவதற்காக திங்கள் அன்று மாநிலங்களவையில் கொண்டுவர விருக்கும் இன்சூரன்ஸ் திருத்தச் சட்டமுன்வடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி , சமாஜ்வாதிக் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, திமுக,ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம்ஆகிய கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு காங்கிரசும் எதிர்த்திட முன்வந்திருக்கிறது.
இன்சூரன்ஸ் திருத்தச் சட்டமுன்வடிவை தெரிவுக் குழுவுக்கு அனுப்பிட வேண்டும் என்று கோரி இக்கட்சிகள் அனைத்தும் இணைந்து கையெழுத்திட்டு அறிவிப்பு ஒன்றை மாநிலங்களவைத் தலைவரிடம் சமர்ப்பித்திருக்கின்றன. அதன் அடிப்படையில் திங்கள் அன்று இன்சூரன்ஸ் திருத்தச் சட்டமுன்வடிவைத் தெரிவுக் குழுவிற்கு அனுப்ப வேண்டுமா என்பது குறித்த தீர்மானம் கொண்டுவரப்படவிருக்கிறது. தீர்மானம் வெற்றி பெற்றால் மேற்படி சட்டமுன்வடிவை அடுத்த ஆறு மாத காலத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது. இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதில் பாஜகவிற்கும் காங்கிரசுக்கும் இடையே வித்தியாசம் எதுவும் இல்லை. எனினும் கொண்டுவரும் விதம் குறித்து காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் இடையே வித்தியாசம் இருப்பதுபோல் தெரிகிறது. “அந்நிய நேரடி முதலீட்டை இன்சூரன்ஸ் போன்று ஒரு முக்கியமான துறையில் அதிகரிக்கக்கூடிய நிலையில் ஏராளமான விஷயங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும். எனவே அவை குறித்து விவாதங்கள் எதுவும் செய்யாமல் இதனை நிறைவேற்றக்கூடாது’’ என்று காங்கிரஸ் கட்சித் தரப்பில் அதன் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தெரிவிக்கிறார்.
“எனவேதான் இந்தச் சட்டமுன்வடிவு தெரிவுக்குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,’’ என்று அவர் மேலும் கூறுகிறார்.எனவே திங்கள் அன்று இந்தச் சட்டமுன்வடிவு மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டால் தேஜகூ அரசாங்கம் முதன்முறையாக மிகப்பெரிய அளவிலான தோல்வியைச் சந்திக்கும் என்று தெரிகிறது. மாநிலங்களவையில் காங்கிரசுக்கு 69 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பாஜகவிற்கு வெறும் 42 உறுப்பினர்கள் மட்டுமே. பாஜகவினை அஇஅதிமுகவைச் சேர்ந்த 11 உறுப்பினர்களும், பிஜூ ஜனதா தளத்தைச் சேர்ந்த 7 உறுப்பினர்களும் ஆதரித்தாலும்கூட அதனால் பெரும்பான்மையைப் பெற முடியாது. சிபிஐ வழக்குகளை எதிர்கொண்டுள்ள சமாஜ்வாதி கட்சி (10 உறுப்பினர்கள்) , பிஎஸ்பி (14 உறுப்பினர்கள்) மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் (12 உறுப்பினர்கள்) ஆகியவற்றை மிரட்டிப் பணிய வைத்திடலாம் என்று அரசுத்தரப்பில் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஒருவேளை மாநிலங்களவையில் தேஜகூ அரசாங்கம் தோற்கடிக்கப்படுவது உறுதி எனத்தெரியவந்தால், கூட்டு நாடாளுமன்ற அமர்வு மூலம் நிறைவேற்றிடவும் அரசு பரிசீலித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. திங்கள் கிழமையன்று பாஜகவின் உண்மையான பலம் என்னவென்று தெரிந்துவிடும்