மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியை முன்னிறுத்திய நாட்டின் பெருமுதலாளிகள் இப்போது அவரிடம் வேலைவாங்கத் துவங்கி விட் டனர். மோடி தலைமையில் அமைச்சரவை கூடுகிறது என்று செய்தி வந்தாலே எந்தத் துறைக்கு வேட்டு வைப்பார்களோ என்று மனம் பதறுகிறது. ஏற்கெனவே காப்பீட்டுத்துறையில் 26 சதவீத மாக இருந்த அந்நிய முதலீட்டு உச்சவரம்பை 49சதவீதமாக உயர்த்த இருவாரங்களுக்கு முன்பு மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை முடிவு செய்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாத நிலையில், காங்கிரஸ் கட்சி யின் தயவுடன் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயன்று வருகிறது.
இந்த நிலையில் புதனன்று கூடிய மத்திய அமைச்சரவை பாதுகாப்புத்துறையில் அந்நிய முதலீட்டை 49சதவீதமாகவும், ரயில்வே கட்டமைப்புத் துறையில் 100சதவீத அளவுக்கு அந்நிய நிறுவனங்களை அனுமதிப்பது என்றும் முடிவு செய்துள்ளது.பாதுகாப்பு மற்றும் ரயில்வேத்துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கு வழக்கமான, முற்றிலும் பொருத்தமற்ற, ஏற்கெனவே பொய்த்துப் போன காரணத்தையே மோடி அரசு கூறி வரு கிறது. அதாவது, அந்நிய முதலீட்டு வரம்பை அதிகரிப்பதால் இந்தத் துறைகளில் முதலீடு வந்து கொட்டும் என்பதுதான் மோடி அரசின் வாதம். அந்நிய முதலீட்டு வரம்பை உயர்த்த ஏற் கெனவே அனுமதிக்கப்பட்ட துறைகளில் முதலீடு அதிகரிக்கவில்லை என்பதுதான் நடை முறை அனுபவம்.
மாறாக, அந்தத் துறைகளை அந்நியர்கள் கபளீகரம் செய்து வருகின்றனர். ஏற்கெனவே உள்நாட்டு விமானப் போக்கு வரத்து துறையை தனியாருக்கு திறந்து விட்டன மத்திய அரசுகள். இதனால் அந்தத் துறை வளர்ந்துவிடவில்லை. மாறாக தேய்ந்து வருகிறது. பயணிகள் கொள்ளையடிக்கப்படுகிறார்கள்.உலகின் மிகப்பெரிய பொதுத்துறைகளில் ஒன்றாக ரயில்வே துறை நிமிர்ந்து நிற்கிறது. பல லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் இந்தத் துறையின் சேவையால் கோடிக்கணக் கான பயணிகள் பலன் பெற்று வருகின்றனர்.
இந்தத் துறையை அந்நியர்களிடம் ஒப்படைத்து கட்டமைப்பை மேம்படுத்தப்போகிறார்களாம்.ஏற்கெனவே நாற்கர சாலைகள் அமைக்கும் பணி உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ஆங்காங்கே சுங்கச்சாவடி போட்டு கொள்ளையடித்து வரு கின்றனர். முதலீடு செய்த தொகையை விட பலமடங்கு பகல்கொள்ளை அடித்த பிறகும் அவர்கள் அடங்கவில்லை. அதே நிலைதான் ரயில்வே துறைக்கும் ஏற்படும். நாட்டின் பாதுகாப்பை பற்றி கவலைப்படும் ஒரே கட்சி நாங்கள்தான் என்று கூறிக்கொண்டு பாஜக பாதுகாப்புத்துறையில் கூட அந்நிய முதலீட்டை அனுமதிக்கத் துணிந்துவிட்டது.
பாஜக தலைமையிலான தொழிற்சங்கம் கூட பாதுகாப்புத்துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக்கூடாது என்று கூறியுள்ளது. ஆனால் பெருமுதலாளித்துவ விசுவாசத்துடன் செயல்படும் இவர்களது கையில் நாடு பாதுகாப்பாக இருக்காது என்பது உறுதி. மரபணு மாற்ற பயிர்களை மேலும் அதிகரிக்கவும் மோடி அரசு முடிவு செய்துவிட்டது. மொத்தத்தில் அனைத்து வகையிலும் நாட்டை கூறுபோட்டு விற்கத் துணிந்துவிட்ட இவர்களை எதிர்த்து அனைத்துப் பகுதி மக்களும் களம் காண்பதை தவிர வேறு வழியில்லை.