Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, October 18, 2014

பொது துறைகளால் ஆதாயம் அடைந்தவர்கள் முதலாளிகளே!- யெச்சூரி M.P


காங்கிரஸ் தலைமையிலான அரசுகள் 1990களி லிருந்து பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து வந்திருக்கின்றன. இன்றைய நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அதை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது. இத்தகையதொரு சூழலில் இதுகுறித்த பிரச்சனை மீண்டும் முன் னுக்கு வந்துள்ளது. இடதுசாரிக் கட்சிகள் இத்த கைய நடவடிக்கையை ஆட்சேபிக்கின்றன என்பதுஅனைவரும் நன்கு அறிந்ததே. எனினும், வர்த்தகம் மற்றும் நிதித்துறை ஆகிய கேந்திர மான அமைச்சகங்களின் தலைவர்கள் மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகள் உட்பட பல தரப்புகளி லிருந்து இதுகுறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. பொதுத்துறை குறித்த கொள்கை என்பது காலா வதியாகிப்போன, சோசலிச, தொழிற்சங்க சார்புடைய கருத்து என்பதே இவர்கள் முன்வைக்கும் வாதம் ஆகும். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்படுவதனை முன்பு எதிர்த்தவர் களால் கூட இந்த வாதம் இன்றைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறதே ....
இந்திய நாட்டில் பொதுத்துறை நிறுவனங்களின் உருவாக்கத்திற்கு தேசிய இயக்கம், இடதுசாரிக் கட்சிகள் அல்லது தொழிற்சங்க இயக்கம் மட்டுமே கார ணம் அல்ல; பெருமளவில் தனியார் முதலாளிகளும் காரணமாக இருந்தனர் என்பதனைப் புரிந்து கொள்தல் அவசியம். இன்னும் சொல்லப் போனால், “பம்பாய் திட்டம்”எனப் பிரபலமாக அழைக்கப்படும் அன் றைய இந்திய முதலாளிகளின் திட்டத்தில் தான், இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்படுவது குறித்த ஆலோசனை முதன் முதலாக முன் வைக்கப்பட்டது. டாட்டாக்கள், பிர்லாக்கள் உட்பட அக்காலகட்டத்தில் இருந்த கார்ப் பரேட் நிறுவனங்களாலேயே இந்த பம்பாய் திட்டம் தயாரிக்கப்பட்டது. மக்களின் கைகளிலே அவர்களது செலவுகள் போக மீதம் இருக்கும் உபரித் தொகைகளை அரசு திரட்ட வேண்டும், இவ்வாறு திரட்டிய தொகையை கட்டமைப்புப் பணிகளுக்குத் தேவையான முதலீடாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே அப்போது அவர் களது கருத்தாகவும் இருந்தது. எஃகு மற்றும் இரும்புத் தாது உள்ளிட்ட அனைத்துபிரதானமான துறைகளிலும் இத்தகைய கட்டமைப்பினை உருவாக்க வேண்டியிருந்தது. இதற்குத் தேவையான மூலதனம் அப்போது இந்திய தனியார் முத லாளிகள் வசம் இருந்திடவில்லை. இவ்வாறாக, தனியார் முதலாளிகள் முன்வைத்த கருத்துக்களின் அடிப்படை யிலேயே பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டன. தனி யார் முதலாளிகளின் இயலாமையும் பல வீனமுமே பொதுத்துறை நிறுவனங்களின் உருவாக்கத்திற்கான பின்புலமாக அமைந்தன.
இதனையே எளிமையாகச் சொல் வதானால், இந்திய பொருளாதார கட்டமைப்பிற்கான அடித்தளத்தை பொதுத் துறை நிறுவனங்கள் உருவாக்கித் தர வேண்டும் என்ற ஆலோசனை முத லாளித்துவ வர்க்கத்திடமிருந்தே வெளிப் பட்டது. மேலும், தனியார் முதலாளிகளின் உற்பத்தி வளர்ச்சிக்குத் தேவைப்பட்ட அத்தியாவசியமான கச்சாப் பொருட்களை பொதுத்துறை உற்பத்தி செய்தது. எனவே, பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து மிக அதிக அளவில் ஆதாயம் பெற்றது இந்திய தனியார் மூலதனமே என்பது நினைவில் கொள்ளப்படுவது அவசியமாகும். உண்மை இவ்வாறாக இருக்க, தொழிலாளர் களின் உரிமைகளுக்காக அல்லது சோசலிச தத்துவத்தின் மீது உள்ள பற்றின்காரணமாகவே பொதுத்துறை நிறுவனங் களுக்கு ஆதரவு அளிக்கப்படுவதாக இப்போது சிலர் கூறுகிறார்கள். இது வரலாற்றுப் பூர்வமான ஒரு அம்சத்திற்குக் கொடுக்கும் தவறான விளக்கம் ஆகும்.
சுருங்கச் சொன்னால், இந்திய முதலாளித்துவ வர்க்க மானது தங்களுக்குத் தேவைப்பட்டபோது பொதுத்துறைக்குச் சாதகமான வாதங்களை முன்வைத்தது. ஆனால் இன்றைக்கு, தங்களது எதிர்காலமும், லாபத்தைப் பெருக்கிக் கொள்வதற்கான வாய்ப்பும் அந்நியமூலதனத்துடன், குறிப்பாக அந்நிய நிதி மூலதனத்துடன் பின்னிப்பிணைந்துள்ள நிலைமையில், பொதுத்துறையில் உள்ள அரசு மூலதனம் வெளியேற வேண்டும் என இவர்கள் கருதுகின்றனர். எங் களைப் பொறுத்தவரை, அந்நிய மூலதனத்தை நம்பிச் சார்ந்து நிற்கும் நிலையினை பொதுத்துறை பெருமளவில் குறைக்கிறது என்பதுடன், அந்த அளவிற்கு இந்தியா வின் பொருளாதார இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும், சுய சார்பு நிலையை பாதுகாப்பதற்கும் அது உதவுகிறது. அந்த அடிப்படையில் தான் பொதுத்துறை நிறுவ னங்களை இடதுசாரியினர் ஆதரித்து வருகின்றனர்.
நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங் களின் பங்குகள் விற்கப்படுவதற்கு எந்த எதிர்ப்பும் இருக்கக் கூடாது என்று ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. இடதுசாரிக் கட்சிகள் ஒட்டுமொத்த மாக பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற் பனையை எதிர்க்கிறார்களா அல்லது லாபம் ஈட் டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற் பனையை மட்டும் எதிர்க்கிறார்களா?
பொதுத்துறை நிறுவனங்களை லாப மீட்டுபவை, நஷ்டத்தில் இயங்குபவை என்று எந்த பாகுபாட்டோடும் நாங்கள் பார்ப்பதில்லை. அதே நேரத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் என்பவை நஷ்டத் தில்தான் இயங்கிட வேண்டும் என்பதும் எங்களது வாதமல்ல. நஷ்டத்தில் இயங் கிடும் பொதுத்துறை நிறுவனங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதனையே பொதுத்துறை நிறுவனங் களின் பங்கு விற்பனைக்கான குழு உருவாக்கப்பட்ட காலம் துவங்கி, முதலாவது மற்றும் இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுகளின் காலத்திலும், அதற்கு முந்தைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் காலத்திலும் தொடர்ச்சியாக நாங்கள் கூறி வருகிறோம். நஷ்டம் என்பது எதனால் ஏற்படுகிறது? இத்தகைய நிலைமையை மாற்றிட இயலாதா? இத்தகைய நிறுவனங்கள் குறித்து விரிவாக பரிசீல னை செய்யுங்கள். இதற்கெல்லாம் எந்தவாய்ப்பும் இல்லை என்கிற நிலையில் மட்டுமே பங்கு விற்பனை குறித்த கேள்வி எழவேண்டும்.
விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இது நஷ்டத்தில் இயங்கி வந்த ஓரு பொதுத்துறை நிறுவனமாகும். ஆனால், நமது கிழக்கு கப்பற்படையின் தலைமையகமாக விசாகப்பட்டினம் அமைந்திருக்கிறது என்ற முக்கியமான காரணங்களால் அந்நிறுவனத்தை தனி யார் துறைக்கு தாரைவார்ப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. எனவே, எச்எஸ்எல் நிறுவனத்தை நமது பாதுகாப்புத்துறையே எடுத்து நடத்திட வேண்டும் என்ற ஆலோசனையை நாங்கள் முன் வைத்தோம். கப்பல் கட்டும் தொழிலில் தனியார் துறை ஊக்குவிக்கப்பட்டு வந்ததால் முன்பெல்லாம் எச்எஸ்எல் நிறுவனத்திற்கு இத்தகைய பணிகள்கிடைக்கவில்லை.
ஆனால், இந்நிறு வனத்தை பாதுகாப்புத் துறையே எடுத்து நடத்திடத் துவங்கிய பின்னர் இத்தகைய பணிகள் எச்எஸ்எல் நிறுவனத்திற்கு கிடைக்கத் துவங்கியது.அதோடு, கூட்டாகச் சேர்ந்து இயங்கிடு வதற்கு வாய்ப்புள்ள இதர பொதுத்துறை நிறுவனங்களுடன் எச்எஸ்எல் நிறு வனம் இணைக்கப்படுவதற்கான ஆலோசனையையும் நாங்கள் முன் வைத்தோம். இதுவும் முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் முன்னுக்கு வந்தது. அதன் பிறகு எச்எஸ்எல் நிறுவனத்தில் பெருத்த மாற்றம் வந்துள்ளது. போதுமான கவனத்தை செலுத்தினால் தொடர்ந்து செயல்படச் செய்வதோடுமட்டுமின்றி அவற்றை லாபமீட்டுபவை யாகவும் மாற்றிட இயலும் என்பதற்கு எச்எஸ்எல் நிறுவனம் தற்போது முன்னு தாரணமாகத் திகழ்கிறது.
மிக முக்கியமான திட்டங்களுக்கான மூலதனத்தை உருவாக்கிட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது தேவை என்ற பிரதானமான வாதத்தை இக்கொள்கையை ஆதரிப்பவர்கள்முன்வைக்கின்றனர். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்திடுவதற்கான உச்சவரம்பு என்பது1990களிலிருந்து பெருமளவில் அதிகரித்திருப் பதற்கு இத்தகையதொரு வாதமும் கூட ஒரு காரணமாகும். இத்தகைய தொரு வாதத்தில் பெருமளவில் நியாயம் இருப்பதாக பல்வேறு பொருளாதார நிபுணர்கள் மற்றும் கொள்கை வகுப்பவர்கள் கருதும் போது, இடதுசாரிகள் இதனை எவ்வாறு எதிர்கொள்கின்றனர்?
தற்போதைய நிலையில், இது ஓர் பொருத்தமற்ற வாதமாகும். ஆரம்ப கட்டமாக, மூலதன உருவாக்கம் என்ற ஒற்றைக் கொள்கைக்காக சொத்து ஒன்று விற்கப்படுகிறது. ஆனால், பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் வாயிலாக ஈட்டப்பட்ட வருமானத்தைக் கொண்டு இதுவரை எந்த மூலதனமும் உருவாக்கப்படவில்லை. அல்லது எந்த ஒரு சமூக நலத்திட்டமும் செயல்படுத்தப் படவில்லை. மாறாக, விற்பனையின் வாயிலாகக் கிடைத்த தொகை எல்லாம் உடனடி செலவுகளை ஈடுகட்டிடவே பயன் பட்டுள்ளன. நாளது தேதி வரையிலான தகவல் இதுவேயாகும். இத்தகைய நடைமுறையை மாற்றிடுவது குறித்து ஒவ் வொரு அரசும் பேசுகிறது. ஆனால், இதற் கான நடவடிக்கை எதுவும் எவராலும் மேற்கொள்ளப்படவில்லை.
இருப்பினும், தற்போது வரை எதிர்ப்புக் குரல்கள் ஒடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னர் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையை எதிர்த்து வந்த பாரதீய மஜ்தூர் சங் போன்ற சக்திகள் கூட மௌனமாகவே உள்ளன.
இத்தகைய சக்திகளால் மிக நீண்ட தொரு காலத்திற்கு மௌனமாக இருக்க இயலும் என நான் நினைக்கவில்லை. சமூகத்திலும், பல அமைப்புகளுக்கு உள்ளேயும் கூட சில மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனுடைய தாக்கங்கள் மிக விரை வில் வெளிப்படும். ஆயினும், நாளதுதேதி வரையிலான இன்றைய அரசின்செயல்பாடு என்பது பிரதமர் அலுவலகத்தை மையமாகக் கொண்டே உள்ளது என்பதும், அதனால் மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்பதுமே உண்மையாகும். ஒவ்வொரு அமைச்சக மும் தனது அதிகாரத்திற்குட்பட்ட விஷயங்களை கையாள்வதற்கு அளிக்கப் படுகின்ற குறைந்தபட்ச உரிமை கூட தற்போது அவற்றிற்கு இருப்பதாகத் தெரியவில்லை. இப்போதே இது குறித்து ஒரு முடிவுக்கு வருவது சரியல்ல என இந்த அரசில் இடம் பெற்றுள்ள அரசியல் தலை வர்கள் கூறி வருகின்றனர்.
எனவே, இதனை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.ஆனால், இந்த அரசு குறித்த மற்றொரு சுவாரசியமான விநோதமும் உள்ளது. இதுகுறித்து பல நாளிதழ்கள் பல்வேறுவார்த்தைகளில் அதைக் குறிப்பிட்டுள் ளன. இந்த அரசின் கீழ் அமைச்சர்கள் பதவி ஏற்ற பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து அமைச்சர்கள் குறித்துவெளியிடப்பட்ட சிறு குறிப்பில் இந்த கூடுதல் சுவாரசியமான தகவல் இடம்பெற்றிருந்தது. கொள்கை பூர்வமான முடிவெடுக்கும் அனைத்து விஷயங் களுக்கும் பிரதமரே பொறுப்பாக இருப்பார் என அக்குறிப்பு தெரிவித்தது. தற்போது காணப்படும் இந்த போக்கானது கடந்த பல ஆண்டுகளாக இருந்த பல்வேறு அரசு களில் நான் கண்டிராத ஒன்றாகும்.
இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் தருணத்தில் மூலதன உருவாக்கம் மற்றும் சமூகத் துறை சார்ந்த செலவினங்கள் ஆகியனவற்றை சமன் செய்வது குறித்த கேள்வியும் எழுகிறது. மூலதன உருவாக்கத்திற்கு பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்ய வேண்டிய தேவையுள்ளது என்ற வாதத்தின் நீட்சியே இது. இதற்கு மாற்றாக சர்வதேச அளவிலான அனுபவத்தில் ஏதேனும் சிறப்பான முன்னுதாரணம் உள்ளதா?
தென் அமெரிக்க கண்டத்தின் ஒட்டுமொத்த அனுபவம், இன்று நமது நாட்டில் எத்தகைய வாதம் முன்வைக்கப்படு கிறதோ அதற்கு நேர்மாறானதாக உள்ளது. வெனிசுலா, பொலிவியா மற்றும் ஈக்வடார் போன்ற நாடுகள் எண்ணெய் உள்ளிட்ட அவர்களது இயற்கை வளங்களை நாட்டு டைமையாக்கி உள்ளனர். இவ்வாறு நாட்டுடைமையாக்கப்பட்ட இயற்கைவளங் களின் வாயிலாக ஈட்டப்படும் வரு மானமே நிலச்சீர்திருத்தம், கல்வி மற்றும் சமூக மற்றும் மேம்பாட்டுக் குறியீடுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குத் தேவையான நிதியை உருவாக்குகின்றன. அது மட்டுமின்றி, சமூக மேம்பாட்டுக்குறியீடுகளின் வியக்கத்தக்க முன்னேற் றத்திற்கும் இவை வழிகோலியுள்ளன.இதற்கு நேர்மாறான அனுபவத்தை முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளில் காண முடிகிறது.
உதாரணத்திற்கு, ரஷ்யாவை எடுத்துக் கொள்ளுங்கள். எண் ணெய் உள்ளிட்ட இந்நாட்டினுடைய இயற்கைவளங்களை எல்லாம் பெருமளவில் தனியார்மயமாக்கிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்ட இயற்கை வளங்களின் வாயிலாக கிடைத்த வருமானத்திலிருந்துஎதுவும் எவ்விதத்திலும் நாட்டின் மேம்பாட்டிற்காகத் திரும்பக் கிடைக்க வில்லை. அந்நாட்டி னுடைய பொருளாதார அல்லது சமூகக் குறியீடுகளில் எவ்வித முன்னேற்றத்திற்கும் இத்தகைய நடவடிக்கைகள் உதவவில்லை. பொது மக்களுக்கு சொந்தமான நிதியையும், நிறுவனங்களையும் காவு கொடுத்து தனியார் துறையை வலுப்படுத்தச் செல விடப்படும் தொகை என்பதிலிருந்து பெயரளவில் ஏதேனும் ஓர் சிறிய தொகை திரும்பக் கிடைக்கலாமேயன்றி, அத்தொகை எவ்விதத்திலும் முழுமையாக திரும்பக் கிடைத்திடாது என்பதே வரலாற் றுப்பூர்வமான அனுபவம்; சமகால அனுபவங்களும் அதனையே உறுதி செய்கின்றன.