Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, December 9, 2014

தொழிலாளர்களுக்காக வாதாடுவது யார்?




தொழிலாளர் நலச்சட்டங்களா; முதலாளிகள் நலச் சட்டங்களா? என்ற தலைப்பிலான டி.கே.ரங்கராஜன் எம்.பி.யின் மாநிலங்களவை உரையைப் படித்தேன். நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவு, உண்மையில் இந்திய தொழிலாளி வர்க்கத் திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு என்பதையே அவரின் உரை உணர்த்தியது.

இனிமேல் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தத் தேவையில்லை; தற்காலிகத் தொழிலாளர்கள், கேசுவல் தொழிலாளர்கள், அப்ரண் டீசுகள், பயிற்சி பெறுபவர்கள் என்ற பெயரிலேயே காலம் முழுக்க தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டலாம் என்று மோடி சட்டம் கொண்டு வந்திருக்கிறார். நிரந்தரப்படுத்த தேவையில்லை என்றால், உரிய சம்பளம், போனஸ், பணிக்கொடை, இழப்பீடு போன்ற சட்ட உரிமைகள் ஆகியவற்றையும் வழங்கத் தேவையில்லை. இந்த கொடுமையை எதிர்த்து டி.கே.ரங்கராஜன் மிகவும் வருத்தத்துடன் பேசியிருக்கிறார். அந்த சட்டத்தை எதிர்த்தும், திருத்தங்களை முன்மொழிந்தும் பேசியிருக்கிறார். ஆனால், தனிப்பெரும்பான்மை கொண்ட - முதலாளிகளுக்கான மோடி அரசை தடுத்து விட முடியுமா? ஆனாலும், இடதுசாரிகள் தரப்பில் டி.கே.ரங்கராஜன் போராடியிருக்கிறார்.

இப்படி ஒரு முக்கியமான பிரச்சனையை அவர் பேசும்போது, முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசோ, 37 எம்.பி.க்கள் மூலம் மூன்றாவது பெரிய கட்சியாக மாறியுள்ள அதிமுகவோ, ஏன் திமுகவோ கூட அவையில் இல்லை என்ற செய்தி பேரவலம்.நாட்டின் பெரும்பான்மை மக்களான தொழிலாளர் வர்க்கத்திற்காக வாதாடவும், போராடவும் இடதுசாரிகளை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? ஆனால், அவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பாததால், ஆட்சியாளர்கள் கொண்டுவரும் தொழிலாளர் விரோதச் சட்டங்களை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை இந்திய தொழிலாளர்கள் உணர வேண்டும்.

- மு.சஞ்சீவி, சேலம்