சிலர் வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்; சிலருக்கு வரலாறே இடம் அளிக்கிறது. இரண்டாவது கூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவர் மாமேதை கார்ல் மார்க்ஸ். நூறு பக்கங்களில் உலக வரலாறு எழுதப்படுகிறது என்றாலும்கூட, இவருக்கு அதில் ஒரு பக்கம் ஒதுக்கித்தான் ஆகவேண்டும். இது தவிர்க்க முடியாத ஒன்று. கார்ல் மார்க்ஸ் பெயர் நினைவிருக்கும் வரை, வறுமையின் காரணமாக தன் ரத்தத்தையே தன் குழந்தைகளுக்குப் பாலாகவும் அறிவாகவும் கொடுத்த மார்க்ஸின் மனைவி ஜென்னியின் பெயரும் நிச்சயம் நினைவிருக்கும். ‘நாமெல்லாம் உழைக்க மட்டுமே பிறந்தவர்கள்’ என்று நினைத்திருந்த தொழிலாளிகளை முதலாளிகளாக்கியவர் மார்க்ஸ். ‘மூலதனம்’ என்ற புத்தகத்தின் மூலம் உலகத்துக்கே பொருளாதார பாதையை ஏற்படுத்திக் கொடுத்த கார்ல் மார்க்ஸின் குடும்பம், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தன் குழந்தைகளையே வறுமைக்கு பலிகொடுக்க நேர்ந்ததை என்னவென்று சொல்வது. மார்க்ஸக்கு உறுதுணையாக மனைவி ஜென்னியும், நண்பர் ஏங்கெல்சும் இல்லை எனில் மார்க்ஸம் ஒரு சாதாரண மனிதராகத்தான் இறந்திருக்கக் கூடும். இதனை மார்க்ஸே ஏற்றுக்கொள்கிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்க ஒன்று. உழைக்கும் தொழிலாளர்களை எல்லாம் ஒன்று திரட்டி ‘கம்யூனிஸ்ட்’ அமைத்து, முதன்முதலில் மன்னராட்சிக்கு எதிராக மக்களாட்சி அமைத்தவர் கார்ல் மார்க்ஸ். இதன் காரணமாக, அதிகார மையத்திலிருந்து பாய்ந்து வந்த துன்பங்களை தன் குடும்பத்தோடு அனுபவித்தவர். பலமுறை நாடு கடத்தப்பட்டவர். முதலாளித்துவத்துக்கு எதிராக பனிப்பிரதேசத்திலும் கொழுந்துவிட்டு எரிந்தவர். மார்க்ஸின் வாழ்க்கையைப் படிக்கும்போது, படிப்பவர்களுக்கு ஓர் உறுத்தல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. மார்க்ஸின் நினைவை போற்றுவோம்.