மனுதர்ம சாத்திரமும்
மாற்று மதங்களின் வேதங்களும்
மகளிர்தம்மை
மதிக்காமல் ஒதுக்கி,
ஆணாதிக்கம் தலைதூக்க
அடிமைப்பட்டக் காலத்தில்...
மார்தட்டி எழுந்த மகளிர்தம்
மனவெழுச்சியின் அடையாளம்
மார்ச் எட்டு!
இல்லற இன்ப நுகர்வுக்கும்
இல்லப் பணிகளுக்குமே
இறைவனின் படைப்பென
இகழப்பட்ட மகளிர் குலம்
ஓரணியாய்த் திரண்டெழுந்து
உலகையே விழிக்கவைத்த
உன்னத நாள் மார்ச் எட்டு!
உற்றத் தோழியாய்
உயர்குடும்பத் தலைவியாய்
நற்றமிழ்ச் செல்வியாய்
நலம்பாடும் சகோதரியாய்
உற்றதுரைக்கும் உயர்கனிமொழியாய்
கற்றதனைத்தும் கடைப்பிடித்து
கடமையாற்றும் காரிகையாய்
வாட்டம் போக்குகின்ற
வண்ணப் புதுமலராய்
காட்சியில் திகழும்
கனகத் திரளாய்
விளங்கும் புதுமைப் பெண்களை
வாழ்த்திப் போற்றுவோம்
மகளிர் நன்னாளில்!
உலகுக்குத் தெரியாமல்
உயர்ந்த சாதனைகள் படைக்கும்
உலக மங்கையர் அனைவரையும்
உளமாற வாழ்த்தி நம்
உளங்களிப்போம் மகளிர் நாளில்!
விடுதலையின் வெற்றி சுதந்திரதினம்
வியர்வையின் வெற்றி மே தினம்
அன்பின் வெற்றி அன்னையர் தினம்
அகில உலக மங்கையரின் வெற்றி...
அகம் மகிழும் இந்த மகளிர் தினம்!
மகளிர் தின நல் வாழ்த்துக்களுடன்
E கோபால்,
மாவட்ட செயலர்