இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் நிகரற்ற வீரராகத் திகழ்ந்தவர்தோழர் சுர்ஜித். படிக்கும் போது பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட, பத்தாண்டுகள் சிறைவாசம், நான்காண்டுகள் தலைமறைவு வாழ்க்கை, திருமணம்முடிந்த நாளன்றே தனது வீட்டுக்குள் நுழையும் முன்பே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது, ஒளியும் காற்றும் கூடப்புகாத தனிமைச்சிறையில் நான்கு மாதங்கள் சித்திரவதை என அவர் எதிர்கொண்ட தியாகங்கள் எண்ணற்றவை. நமது நாட்டில் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் அணிதிரட்டுவது அடிப்படையான வர்க்கக் கடமை என்பதை நன்குணர்ந்த அவர், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமைப் பொறுப்பேற்று பல்லாண்டுகள் அயராது பணியாற்றினார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கி வளர்த்திட வழிகாட்டினார்.1947ல் நாட்டுப் பிரிவினை ஏற்படுத்திய வகுப்புக் கலவரங்களில் மிகுந்ததுணிவுடன் தலையிட்டு மக்கள் ஒற்றுமை காப்பதில் உறுதியாகப் பாடுபட்டவர்.
அதேபோன்று பிரிவினைவாதம், தீவிரவாதம், வகுப்புவாதம் போன்றவை நாட்டில் தலைதூக்கிய போதெல்லாம் அவற்றுக்கு எதிராக உறுதியாகப் போராடி நாட்டு ஒற்றுமையைப் பாதுகாக்க துணை நின்றதில் அவருடைய பங்கு மகத்தானது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் 1953ம் ஆண்டில் அரசியல் தலைமைக் குழுவுக்குத் தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் 1992ல் நடந்த 14வது மாநாட்டில் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.நாட்டு ஒற்றுமை, ஏகாதிபத்திய - எதிர்ப்பு, சோசலிசத்தை மேலும் மேலும்வெற்றி பெறச் செய்வது என்பவை இவர் சிந்தனையில் வாழ்நாள் முழுவதும் நிறைந்து நின்றவை. எந்த லட்சியத்தை அடைய அவர் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டாரோ அதை நாம் நிச்சயம் அடைந்தே தீருவோம்.அந்தக் கடமை கடினமானது. அதற்குக் காலம் பிடிக்கும். போராட்டங்களும் இயக்கங்களும் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அந்த லட்சியத்தை அடைந்தே தீருவோம் என்று நாம் நம்புகிறோம். பொறுமையுடனும், நேர்மையுடனும் பணியாற்றவேண்டுமென்பதை அவருடைய வாழ்விலிருந்து நாம் கற்க வேண்டும்.
ஆகஸ்ட் 1 தோழர். ஹர் கிஷன் சிங் சுர்ஜித் நினைவு நாள் (1916-2008)