Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, September 11, 2015

பாரதியும் பாடலும்

Image result for bharathiyar images

செப்டம்பர் 11 மகாகவி பாரதி நினைவு நாள் 
மகாகவி பாரதியார் தமதுபாடலை அவரே நன்றாகப்பாடுவார். அவருக்கு நல்ல இசையறிவுஉண்டு. எட்டயபுரத்தில் பிறந்த தமிழறிஞரும் பாரதியாரின் நண்பருமான நாவலர் சோமசுந்தர பாரதியார் சுப்ரமணிய பாரதியாரைப் பற்றி இப்படிக் கூறினார்: “பாரதியார் சங்கீதத்திலும் நல்ல ஞானம்உள்ளவர்.”“ஆசிரியன் தன்னுடைய கம்பீரமான குரலில் பாடினதைக் கேட்ட ஒவ்வொருவரும் இந்நூலில் உள்ள பாட்டுக்களை மாணிக்கங்களாக மதிப்பர்” - என்றார் தேசபக்தர் வ.வே.சு.அய்யர். இவர் ஆசிரியன் என்று குறிப்பிட்டது பாரதியாரை.

பாரதியார் கிராமப்புற உழைக்கும் மக்களிடமும் பிறரிடமும் பிறக்கும் பாடல்களின் ரசிகராகவும் இருந்துள்ளார்.“ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்கும்கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்சுண்ணம் இடிப்பார்தம் சுவைமிகுந்த பண்களிலும்பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாம்ஒலிக்ககொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர்வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவிநாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்”-என்று, ஏற்றம் இறைப்பவர், உரலில் இட்டு சுண்ணாம்பு இடிப்பவர், காட்டில் பணிசெய்பவர் முதலான உழைப்போர், தம் களைப்பை மறக்க பாடும் பாடல்களையும், விசேஷ காலங்களில் கூடி வட்டமிட்டுப் பெண்கள் கைகள்கொட்டிப் பாடும் கும்மிப் பாடல்களையும் ரசித்து மனதைப் பறிகொடுத்திருக்கிறார் பாரதியார்.

பாரதியார் சென்னையில் வசித்த காலத்தில் பலருக்கு நடுவே தாம் பாடுவதற்கான பொதுவெளியாக கடற்கரையைப் பயன்படுத்துவார். இதுபற்றி எழுத்தாளரும் இலக்கிய ஆய்வாளருமான தொ.மு.சி.ரகுநாதன் “பாரதி: காலமும் கருத்தும்” என்ற தமது நூலில் கூறுவதாவது:“சென்னையில் பாரதியாரின் நண்பரான எஸ்.நாராயண அய்யங்கார் இவ்வாறு எழுதியுள்ளார்: ‘பாரதியார் சென்னையில் பல நண்பர்களைப் பெற்றுள்ளார்.... காலை வேளைகளில் கல்லூரிமாணவர்களின் கூட்டம் அவர் வீட்டில் நிறைந்திருக்கும். மாலை வேளைகளிலும் அப்படியே. அநேகமாகப் பிரதி தினமும் கடற்கரைக்குப் போவதுவழக்கம். பாரதி கடற்கரை மணலில் உட்கார்ந்ததும் அவரைச் சுற்றி மாணவர்கள் கூட்டமாக உட்கார்ந்துவிடுவார்கள். சில மாணவர்கள் பாரதியாரைத் தேசியகீதங்கள் பாடும்படி வேண்டிக் கொள்வார்கள். அவரே பாடும்போது அவரது பாட்டுக்கள் மிகவும் உருக்கமாக இருக்கும். கடற்கரையிலிருந்து இரவுஏழரை மணிக்குத்தான் திரும்புவோம்.’ 

ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சி விருத்தம், அறுசீர் விருத்தம், கலித்துறை, தரவு கொச்சகக் கலிப்பா, எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என யாப்பிலக்கண மரபு வடிவிலான கவிதைகளும், காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து, கும்மி, தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு, பண்டாரப் பாட்டு, வண்டிப் பாட்டு என நாட்டுப்புறப் பாடல் வடிவிலான பாடல்களும்படைத்தவர் பாரதியார். கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திர கீர்த்தனைகளின் இசைவடிவத்தையும் தம் பாடலுக்குப் பயன்படுத்தியுள்ளார். அத்துடன், கவிதைக்கு வசன வடிவத்தையும் பயன்படுத்தினார் பாரதி. 

ஜப்பானின் மூன்றுஅடிக் குறுங் கவிதையான ‘ஹைக்கூ’வையும் வியந்தவர் பாரதி. பாரதி மரபுக் கவிதை வடிவங்களைவிட எளிய நாட்டுப்புறப் பாடல் வடிவங்களை அதிகமாகப் பயன்படுத்தியுள்ளார். தமது பாஞ்சாலி சபதம் படைப்பின் முதற்பாகமே நாட்டுப்புறத்தின் நொண்டிச் சிந்து வடிவம்தான். பாஞ்சாலி சபதம் காவியத்தையும், கண்ணன் பாட்டையும் பெரும்பாலும் இசைப்பா வகையைச் சேர்ந்த சிந்துவிலேயே இயற்றியுள்ளார். மேலும் பல பாடல்களையும் சிந்துவிலேயே எழுதியுள்ளார். அதனால்தான் பாவேந்தர் பாரதிதாசனும் பாரதியை அவனொரு “செந்தமிழ்த் தேனீ “என்று போற்றியதோடு “சிந்துக்குத் தந்தை” என்றார். 

“கும்மிப் பாட்டு,பல்லிப் பாட்டு, நலங்குப் பாட்டு, பள்ளியறைப் பாட்டு, அம்மானைப் பாட்டு, தாலாட்டுப் பாட்டு முதலிய பெண்களுடைய பாட்டெல்லாம் மிகவும் இன்பமான வர்ண மெட்டு. தமிழர்களின் தாய், அக்காள், தங்கை, காதலி முதலிய இவர்கள் பாடும்பாட்டு மறக்கக் கூடிய இன்பமா? தமிழ்ப்பெண்களின் பாட்டைக் கையெடுத்து வணங்குகிறோம்” என கிராமப்புறப் பெண்களின் பாடல்களில் மனம் லயித்துப் போற்றினார் பாரதி. பாஞ்சாலி சபதத்தில் சம்பவச் சூழலுக்கு ஏற்பப் பல வடிவங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.நெஞ்சு பொறுக்குதில்லையே-இந்தநிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்என்று தொடங்கும் பாடல் நொண்டிச் சிந்து வடிவமென்றால்,பொழுதெல்லாமெங்கள் செல்வங்கொள்ளை கொண்டுபோகவோ?-நாங்கள் சாகவோ?என்ற வரிகள் உள்ள பாடல் கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திர கீர்த்தனையைத் தழுவியதாகும். கோபாலகிருஷ்ண பாரதியின் பாடல் வர்ண மெட்டில் பாரதியார் பல பாடல்கள் இயற்றியுள்ளார். ‘பட்டங்காள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்-பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்-எட்டும்அறிவினில் ஆணுக்கிங்கே பெண்-இளைப்பில்லை காணென்று கும்மியடி’ என்பது கும்மிப் பாடல் வடிவம். 

‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்று தொடங்கும் பாடல் பண்டாரப் பாட்டு வடிவமாகும். வாழிய செந்தமிழ்! ‘வாழிய நற்றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு எனத் தொடங்குவது ஆசிரியப்பா வடிவமென்றால், இதந்தரு மனையி னீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும்‘ என்பது அறுசீர் விருத்தமாகும். பல்லவி, அனுபல்லவி, சரணங்கள் ஆகிய இசைக் குறிப்புகள் வைத்து பாரதி எழுதிய பாடல்கள் பல உள்ளன.இவ்வாறு, “எமக்குத் தொழில் கவிதை” என்று ஏராளமாய்க் கவிதைகளும் இசைப்பாடல்களும் இயற்றி நமக்கு வழங்கிய பாரதி, 1921-ஆம் ஆண்டு தாம் இறப்பதற்கு முன் கடைசியாக சென்னைக் கடற்கரையில், கூடியிருப்போர் நடுவே இருந்து பாடியது எனச் சொல்லப்படும் பாடல் “பாரதசமுதாயம்” பாடலாகும். 

தொ.மு.சி.ரகுநாதன் ‘பாரதி: காலமும் கருத்தும்’ என்ற தமது நூலில் பாரதியின் இறுதிப்பாடலாக பாரத சமுதாயம் பாடலையே குறிப்பிடுகிறார்: “1911 முதல் அவன் அமரனான ஆண்டான 1921 வரை, அதாவது அவன் எழுதிவிட்டுச் சென்ற இறுதிப் பாடல் எனக் கூறப்படும் ‘பாரதசமுதாயம்’ என்ற பாட்டில்,” என்று தொடர்ந்து சொல்லுகிறார் தொ.மு.சி.பாரதியின் அந்தப் பாடல் இப்படித் துவங்குகிறது: “பாரத சமுதாயம் வாழ்கவே - வாழ்க வாழ்கபாரத சமுதாயம் வாழ்கவே - ஜய ஜய ஜய (பாரத)முப்பது கோடி ஜனங்களின் சங்கம்முழுமைக்கும்பொது உடைமைஒப்பிலாத சமுதாயம்உலகத் துக்கொரு புதுமை-வாழ்க (பாரத)”யுகப் புரட்சி என்று ரஷ்ய சோஷலிசப் புரட்சியை வாழ்த்திப் பாடியபாரதியார், தமது இறுதிக் காலத்தில் இந்திய சமுதாயம் குறித்த தமது கனவாகப் பொதுவுடைமை இலட்சியத்தை முன்நிறுத்திப் பாடினார்.

 அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலைபெற்ற பின் சுதந்திர பாரதம் எப்படியிருக்கும் என்பதை அதே பாடலின் இறுதியில் முத்தாய்ப்பாக அவர் கூறுகிறார்:எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓர்இனம்எல்லாரும் இந்திய மக்கள்எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலைஎல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்எல்லாரும் இந்நாட்டு மன்னர்- வாழ்க (பாரத)-என்று, சமத்துவமும் சகோதரத்துவமும் ஒருமைப்பாடும் நிலவும் தேசமாக தமது உள்ளத்து இலட்சியக் கனவை பாட்டில் உரைக்கிறார் பாரதி. பாரதியின் வார்த்தைகளில் சொல்வதென்றால் - முற்போக்கான இலட்சியம் கொண்ட அந்த மகாகவியின் மகத்தான பாடல்கள் “எளிய பதங்கள்,எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு” இவற்றால் படைக்கப்பட்டவையாகும்.