இந்தியாவின் சமகால ஆட்சியாளர்களின் தனியார்மய வேட்கையை அக்குஅக்காகப் பிரிக்கிறார் இந்தியத் தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) பொதுச் செயலரான தபன் சென்.
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது தொடர்பான மோடி அரசின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மத்திய அரசுக்கான நிதி ஆதாரத்தைத் திரட்டுவதில் அரசுத் துறை நிறுவனப் பங்குகளின் விற்பனையை முக்கியமான கருவியாகப் பயன்படுத்த மோடி அரசு திட்டமிட்டிருக்கிறது. அதற்கேற்பவே இலக்கை நிர்ணயித்திருக்கிறது. லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களையும்கூட அது குறிவைத்திருக்கிறது.
நிதி ஆதாரங்களைத் திரட்டுவது என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களை விற்பது சரியான அணுகுமுறைதானா?
நிதியைத் திரட்ட நிறுவனப் பங்குகளை விற்கிறேன் என்பது ஊழலான நடைமுறை. அரசு நிறுவனத்தின் சொத்துகளை ஒரேயடியாக விற்று ஆண்டு வருமானத்தைத் திரட்டும் செயல்தான் இது. பங்குச் சந்தையில் ஒரு நிறுவனத்துக்கு உள்ள மதிப்பு எவ்வளவோ அந்த விலைக்கு அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்படுகின்றன. உண்மையில், அந்த அரசு நிறுவனத்தின் நிலம் உள்ளிட்ட சொத்துகளின் மதிப்பு, அதன் கொள்திறன், அதன் முழு உற்பத்தித் திறன், சர்வதேசச் சந்தையில் அதற்குள்ள உண்மையான மதிப்பு ஆகியவற்றைக் கணக்கிட்டால் அடிமாட்டு விலைக்கு அதன் பங்குகள் விற்கப்படுவது புலனாகும்.
மோடி அரசில் பொருளாதாரத்துக்கு உத்வேகம் அளிக்க உண்மையாகவே வேறு ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா?
ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். நல்ல லாபம் கிடைக்கும் என்றால்தான் முதலீடுகள் வரும். தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் காரணமாக நம்முடைய உருக்கு, உலோகத் தொழில் துறை உள்ளிட்டவை பெரும் இழப்பைச் சந்தித்துவருகின்றன. இதை இந்த அரசால் தடுக்க முடியவில்லை. உள்நாட்டு உலோகத் தொழில்துறையினர் ஏராளமான புகார்களைக் கூறுகின்றனர்.
ஒடிசாவின் பாராதீப் மற்றும் குஜராத் துறைமுகங்களைத் தவிர, பிற துறைமுகங்கள் நல்ல வருமானத்தை ஈட்டவில்லை. இவற்றுக்கெல்லாம் இந்த அரசால் ஆக்கபூர்வமான பதில் நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை.
- © ஃப்ரண்ட்லைன்