Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, March 3, 2016

இந்திராகாந்தியை ராஜினாமா செய்ய வைத்த மாணவர் தலைவர் யெச்சூரி!


தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள், இந்திராகாந்திக்கு முன்னால் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பேசுகிறார். 

(1977 செப்டம்பர் 5ம் தேதிய இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் வெளிவந்த படம் இது.)




போராட்டத்தில் புதிய சரித்திரம் படைக்கும் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பழைய போராட்டக் காலம் பற்றிய இந்தப் புகைப்படம் சமூக ஊடகத்தில் பார்ப்போர் கவனத்தை ஈர்க்கிறது. நாட்டில் அவசரநிலைக் காலம் ஒழிந்த பிறகு 1977ல் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் காங்கிரஸ்கட்சி படுதோல்வியடைந்தது; பிரதமர் இந்திராகாந்தியும் தோற்றார். இந்திராகாந்தி பிரதமர் பதவி முதல் தாம் வகித்த மற்ற பதவிகளிலிருந்தும் வெளியேறினார். ஆனால், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியைவிட்டு மட்டும் அவர் விலகவில்லை. இதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் படம்தான் இது.இந்திராகாந்தியின் இல்லம் நோக்கி ஜேஎன்யு (தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்)மாணவர்கள் ஊர்வலமாக அணிவகுத்துச் சென்றனர். அன்று அந்தப் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக இருந்த - இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள தோழர் சீத்தாராம் யெச்சூரிதான் அந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்திற்குத் தலைமை வகித்தார்.

ஊர்வலமாகத் தமது இல்லத்தை வந்தடைந்த மாணவர்களிடம் வந்த இந்திராகாந்தியின் முன்னால் யெச்சூரி கண்டனத் தீர்மானம் வாசிக்கிற இந்தப் படம் 1977 செப்டம்பர் 5ஆம் தேதிய இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் வெளிவந்த படமாகும்.பல ஆய்வு நூல்களின் படைப்பாளியும் ஜேஎன்யுவில் மாணவராக இருந்து பிறகு அதன் ஆசிரியராக ஆனவருமான பேராசிரியர் சமன்லால் அன்றைய சம்பவம் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “சீத்தாராம் யெச்சூரி ஜேஎன்யு மாணவர்சங்கத் தலைவராக இருந்த காலத்தில் அவர் மிகவும் பிரபலமானது 1977 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவி போய்விட்டாலும் பல்கலைக்கழக வேந்தர் பதவியில் நீடிக்கிற இந்திராகாந்தியை அதிலிருந்து ராஜினாமா செய்யவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கிய போராட்டத்தின் மூலம்தான். ஜேஎன்யு துணைவேந்தராக இருந்த டாக்டர் பி.டி. நாக்சௌதரியையும் ராஜினாமா செய்யவைக்க மாணவர்களாகிய எங்களால் முடிந்தது.

ஜேஎன்யுவிலிருந்து சீத்தாராம் யெச்சூரியின் தலைமையில் 500 மாணவர்கள் இந்திராகாந்தியின் இல்லத்தை நோக்கி ஊர்வலமாக நடந்தே சென்றோம். வீட்டுக்கு வெளியே கூடிநின்றவாறு முழக்கமிட்டோம். அவசரநிலையைப் பயன்படுத்திக் குற்றச்செயல் புரிந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக அந்த முழக்கம் இருந்தது.பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு இந்திராகாந்தி தனது இல்லத்திலிருந்து வெளியே வந்தார். அவசரநிலைக் காலத்தில் மிகவும் கெட்ட பெயரெடுத்த உள்துறை அமைச்சராக இருந்த ஓம் மேத்தாவும் மற்ற இருவரும் அவருடன் இருந்தனர். இந்திராவிடம் அதிகார தோரணை இருந்தபோதிலும் மெல்லிய புன்னகையுடன் இருந்தது அவரது தோற்றம். மாணவர்களின் முழக்கங்களுக்கு அவர் சிரித்தபடியே பதிலளித்தார். அப்போது யெச்சூரி ஜேஎன்யு மாணவர் சங்கம் முன்வைக்கும் கோரிக்கைகளை வாசிக்க ஆரம்பித்தார். அழகான ஆங்கிலத்திலும், மிகப் பாராட்டுப் பெற்ற தனது பாணியிலுமாக இருந்தது யெச்சூரியின் வாசிப்பு உரை.அவசரநிலைக் காலத்தில் மக்களுக்கு எதிராக இந்திராகாந்தி அரசு நடத்திய கொடும் அடக்குமுறைகளைக் குறித்து ஆரம்பத்திலேயே விவரித்துப் பேசினார் யெச்சூரி.

அப்போது சில நிமிடங்களில் இந்திராவின் சிரிப்பு மறைந்தது. மாணவர்களின் விண்ணப்பத்தை யெச்சூரி வாசிப்பதை முழுவதையும் கேட்க மனமின்றி - வாசிப்பை முடிக்கும் முன்பே இந்திரா கோபத்துடன் வீட்டுக்குள் சென்றுவிட்டார்.இதற்குப் பிறகு மாணவர்களின் முழக்கம் தொடர்ந்தது. அங்கே உரையும் நிகழ்த்தப்பட்டது. பின்னர் மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குத் திரும்பினர். மறுநாளே இந்திராகாந்தி தனது வேந்தர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்