உரிமை கோராத தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட எளிய மக்களின் சேமிப்புகளை சூறையாடுவதற்கான மெகாசதித் திட்டம் ஒன்றை மோடி அரசு செயல்படுத்த முயற்சித்து வருகிறது.உரிமை கோரப்படாத தொழிலாளர் வைப்பு நிதி, பொது வைப்பு நிதி மற்றும் அஞ்சலகங்களில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களின் சேமிப்பு நிதி மற்றும் ஏழு ஆண்டுகள் நிலுவையில் இருக்கும் கணக்குகளில் உள்ள நிதி ஆகியவற்றை மூத்த குடிமக்கள் நல நிதிக்கு மாற்றி விடுவதாக புதிய அறிவிப்பினை மத்திய நிதித்துறை அமைச்சகம் மார்ச் 12ல் அறிவித்துள்ளது.
“மூத்த குடிமக்கள் நல நிதி” என்ற அமைப்பை நிறுவுவதாக மத்திய பாஜக அரசுகடந்த பட்ஜெட் கூட்டத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர் வைப்புநிதிக்கான மத்திய அறங்காவல் வாரியம், தொழிலாளர்களின் வைப்பு நிதியை தொழிலாளர்களின் அனுமதியில்லாமல் வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என விமர்சித்துள்ளது.இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஒருவரும் தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பின் அறங்காவலர்கள் இருவரும் கொண்ட குழுவும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.உரிமை கோரப்படாத வைப்பு நிதியை, தொழிலாளர்களின் விருப்பத்திற்கு மாறாகவும் வேறு எந்த நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த முடியாது என்று தொழிலாளர் வைப்புநிதி திட்டம் 1952 கூறுகிறது.தொழிலாளர் வைப்பு நிதிக்கான மத்திய அறங்காவல்வாரியம்தான் அதிகபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த அமைப்பு ஆகும்.1995ல் கொண்டுவரப்பட்ட ஓய்வூதியம் திட்டத்திலோ, தொழிலாளர் வைப்பு நிதியிலோ அரசிற்கு எவ்வித பங்களிப்பும் இல்லை.
ஏழு ஆண்டுகளாக கோரப்படாத தொழிலாளர்களின் நிதியை, கைவைப்பதற்கு - திருடுவதற்கு அரசிற்கு எந்த உரிமையும் இல்லை என ஐஎன்டியுசி மூத்த தலைவரும் தொழிலாளர் வைப்புநிதி மத்திய அறங்காவலர் வாரியத்தின் உறுப்பினருமான ராமன் பாந்தே செய்தியாளர்களிடம் கூறினார்.மத்திய அறங்காவலர் வாரியத்திற்கு தலைமை தாங்கும் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, தொழிலாளர்கள் அனைவரும் அரசின் பிரதிநிதிகள் என்றும், தொழிலாளர் வைப்பு நிதியைவேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த அரசுக்கு உரிமைஇருக்கிறது என்றும் கூறி வருகிறார்.ஏழு வருட காலமாக கோரப்படாத தொழிலாளர் வைப்பு நிதி மற்றும் பொது வைப்புநல நிதி மற்றும் சிறிய அளவிலான சேமிப்புதிட்டங்கள், குறிப்பாக அஞ்சலக சேமிப்பு கணக்குகள், நீண்டகால சேமிப்பு திட்டங்களின் அடிப்படையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்ற வைப்பு நிதிகள் அனைத்தும் அரசு புதிதாக அறிவித்துள்ள மூத்த குடிமக்கள் நலநிதிக்கு திருப்பிவிடப் போவதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் கடந்த மார்ச் 18ல் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மூலமாக, நாடு முழுவதும் சேமிப்புவைத்திருப்பவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தொடர்பு கொண்டு எழுத்துப்பூர்வமான அறிவிப்பின் மூலமாகவோ, இ-மெயில் மூலமாகவோ, தொலைத்தொடர்பு மூலமாகவோ குறைந்தபட்சம் 60 நாட்களுக்குள் தொடர்பு கொண்டு சேமிப்பு நிதி மூத்த குடி மக்கள் நல நிதிக்கு மாற்றம் குறித்த அனுமதியினை பெறவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த 2011ல் இதுபோன்று தொழிலாளர் வைப்பு நிதி கணக்கீடுகளின் மீதான வட்டிவரவை வேறு வகையான பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டுமென அரசால் மேற்கொள்ளப்பட்ட முடிவை வாரியம் தடுத்துநிறுத்தியது.ஆனால், தற்போது தொழிலாளர் வைப்பு நிதியை கபளீகரம் செய்யும் நோக்கில், சட்டத்திருத்தத்திற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து முயற்சித்து வருவதாகவும் அதன் மூலம் மூத்த குடிமக்கள் நல நிதிக்கு கோரப்படாத நிதி மாற்றப்படுவது உறுதி என்றும் மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் இதுகுறித்த நிதிச் சட்டத்தின் மூலம் சிறிய சேமிப்பு திட்டங்கள், செயல்படாத கணக்குகள், பொது வைப்பு நிதி, தொழிலாளர் வைப்பு நிதி மற்றும் சேமிப்பு திட்ட கணக்குகள் என அனைத்தையும் மாற்றுவதற்கு பரிந்துரை செய்யப்படும்.கடந்த மூன்று வருடங்களில் தொழிலாளர் வைப்பு நிதி கணக்குகளில் உரிமை கோரப்படாத நபர்களின் நிலுவை பாக்கி தொகை2,650 கோடியும் 2014-15ல் 6,400 கோடியும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.இந்த நிதியில் வேலையளிப்பவர் அளித்திடும் பங்குத் தொகையும் கூட ஊழியர்களின் ஊதியத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதியேஆகும். அவை ஊழியர்களின் சொந்த வாழ்நாள் சமூகப் பாதுகாப்பு சேமிப்புக்கானதாகும். இதில் கை வைக்க அரசுக்கு எந்த உரிமையும் இல்லை; உடனடியாக இந்த நடவடிக்கை திரும்ப பெறப்பட வேண்டும் எனவும் சிஐடியுவின் பொதுச் செயலாளர் தபன்சென் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளார்.