Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, August 30, 2016

இடதுசாரி இயக்கத்தின் மகத்தான இசைஞன் தோழர் திருவுடையான் அகால மரணம்

Image result for தோழர் திருவுடையான்

BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் கண்ணீர் அஞ்சலி 


தமிழக உழைப்பாளி மக்களின் உள்ளம் கவர்ந்த மகத்தான கலைஞனும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மேடைகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளிலும் தனது அற்புதமான குரல் வளத்தால் வசப்படுத்தி கூட்டத்தினரை தனது செங்கீதங்களால் எழுச்சிகொள்ளச் செய்த சிறந்த பாடகருமான தோழர் திருவுடையான் அகால மரணமடைந்தார். அவருக்கு வயது 49.தமுஎகசவின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக பணியாற்றி வரும் தோழர் திருவுடையான், ஞாயிறன்று இரவு சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில்பங்கேற்றுவிட்டு தனது சொந்த ஊரான சங்கரன்கோவில் நோக்கி கார் மூலம் சென்று கொண்டிருந்தார்.

அவருடன் அவரது சகோதரர் தண்டபாணி பயணித்தார். காரை டிரைவர் தங்கப்பாண்டியன் ஓட்டி வந்தார். இவர்களது கார் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்தஅய்யங்கோட்டை அருகே வந்த போது சாலையில்நின்றுகொண்டிருந்த லாரி மீது கண் இமைக்கும் நேரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவஇடத்திலேயே தோழர் திருவுடையான் மரண மடைந்தார்.அவரது சகோதரர் தண்டபாணி, டிரைவர் தங்கப்பாண்டியன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தோழர்கள் அதிர்ச்சி - கண்ணீர் அஞ்சலி

மரணமடைந்த தோழர் திருவுடையானின் உடல் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினரால் கொண்டுசெல்லப்பட்டு, உடற்கூறாய்வு செய்யப்பட்டது.தோழர் திருவுடையான் மரணச்செய்தி அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமுஎகச தலைவர்கள், தோழர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வாடிப்பட்டி மருத்துவமனைக்கு ஏராளமானோர் விரைந்தனர்.

வாடிப்பட்டி மருத்துவமனையில் தோழர் திருவுடையானின் உடலுக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.இதன்பின்னர் தோழர் திருவுடையானின் உடல் அவரது சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அஞ்சலிக்குப் பின்னர் திருவுடையான் உடல் திங்களன்று மாலை தகனம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வீ.பழனி தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் சிபிஎம், சிபிஐ, அதிமுக, திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாஜக, முஸ்லிம் ஜமாத் அமைப்புகள் உள்ளிட்ட இயக்கங்களின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து பேசினர்.

பல்வேறு அமைப்புகள் இரங்கல்

தோழர் திருவுடையான் மறைவுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, வாலிபர் சங்கத் தலைவர்கள் எம்.செந்தில், எஸ்.பாலா, மாணவர் சங்கத் தலைவர்கள் வீ.மாரியப்பன், பி.உச்சிமாகாளி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலும், அஞ்சலியும் தெரிவித்துள்ளனர்.

ஒரே நேரத்தில் இசைக்கருவியை இசைத்துக்கொண்டே தனது இனிய குரலால் பாடவும் செய்கிற தமிழகத்தின் மிகச்சிறந்த இசைஞன் தோழர் திருவுடையான்"

செங்கொடியை உயர்த்திப் பிடித்த கானக்குயிலுக்கு, BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் கண்ணீர் அஞ்சலி. 

வருத்தங்குளுடன் 
E . கோபால்,
மாவட்ட செயலர்