ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
பொதுத்துறை வங்கிகளிடம் 85 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பாக்கி வைத்துள்ள 57 வரி ஏய்ப்போர்களின் பெயர்களை ஏன் வெளியிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம், இந்திய ரிசர்வ் வங்கியிடம் கேள்வி எழுப்பியுள்ளது.‘‘யார் இந்த கோமான்கள்? வங்கிகளிடம் கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் யார்? இவர்களை மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டுக் காட்டத் தயங்குவது ஏன்?’’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் கேள்வி எழுப்பினார். கடன் பெற்றுவிட்டுத் திருப்பிச் செலுத்தாதவர்களின் பெயர்களை தகவல் அறியும் விண்ணப்பங்களின் மூலமாக பொது மக்கள் பார்வைக்குக் இந்திய ரிசர்வ் வங்கி, கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கூறினார்.‘‘ஒரு நபர் வங்கியிடம் எந்த அளவிற்குக் கடன் வாங்கியிருக்கிறார்’’ அதில் எந்த அளவிற்குத் திருப்பிச் செலுத்தியிருக்கிறார்? என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். அதனை ஏன் மறைத்து வைக்கிறீர்கள்’’ என்று அவர் வங்கிகளின் வழக்கறிஞரைக் கேட்டார்.
கடன் ஏய்ப்பு தொடர்பான பொது நல வழக்கின் விசாரணையிலேயே இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டன.நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூடன் மற்றும் எல்.என்.ராவ் ஆகியோரும் கொண்ட பெஞ்ச் முன்பு நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது. தற்போது நாட்டிலுள்ள சட்டங்களின்படி, வங்கிகளிடம், பணம் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாதவர்களின் பெயர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர முடியாது என்று வங்கிகளின் வழக்கறிஞர் பதிலளித்தார்.உடன், தலைமை நீதிபதி தாக்குர், ‘‘நீங்கள் வங்கிகளின் நலன்களைப் பாதுகாப்பதுடன், நாட்டின் நலன்களையும் பாதுகாத்திட, வேலை செய்ய வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.
இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜரானார்.உச்சநீதிமன்ற நீதிபதி, வரும் அக்டோபர் 28 க்கு முன்பாக, கடன் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாதவர்களின் பெயர்களை அறிவிக்கக்கூடிய விதத்தில் வரத் தயாராகுங்கள் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தினார்.
இந்தக் கட்டளையை வங்கிகளுக்குப் பிறப்பிக்கும் போது ‘‘ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை கடனாகப் பெறுகிறவர்கள், அவற்றைத் திருப்பிச் செலுத்தாமல் தங்கள் கம்பெனி திவாலாகிவிட்டது என்று கூறித் தப்பித்துக் கொண்டு ஓடிவிடுகிறார்கள். ஆனால், 15 ஆயிரம் ரூபாய், 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிய விவசாயி கஷ்டப்படுகிறான்’’ என்றும் நீதிபதி விமர்சித்தார்.