மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் அரசுத் துறையாக இருக்கும் தொலைத் தொடர்பு துறை மத்திய அரசாங்கங்கள் கொண்டு வந்த தாராளமயக் கொள்கைகள் காரணமாக 01.10.2000 முதல் பிஎஸ்என்எல் எனும் பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டது. அதற்கு முன்னரே தில்லி மற்றும் மும்பை பகுதிகளில் இருந்த சேவைகள் மகாநகர் டெலிகாம் நிகாம் (எம்டிஎன்எல்) என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டது.
பின்னர் அயல் நாட்டு சேவைகளை தந்து கொண்டிருந்ததை தனி நிறுவனமாக விதேஷ் சஞ்சார் நிகாம் (விஎஸ்என்எல்) என மாற்றி அவற்றின் பங்குகளை விற்கிறேன் என்று சொல்லி டாடா நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது. அதே போல தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கத்தோடுதான் பிஎஸ்என்எல் நிறுவனமும் வாஜ்பாய் தலைமையில் செயல்பட்ட பாஜக கூட்டணி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது.
மெல்லக் கொல்லும் விஷமாக...
பிஎஸ்என்எல் நிறுவனம் உருவாக்கப்பட்ட நாள் முதலாகவே அந்த நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய வேண்டும், தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் மத்திய அரசாங்கங்கள் முயற்சித்து வந்தன.
தனியாருக்கு இந்த நிறுவனத்தை தாரைவார்க்க வசதியாக பிஎஸ்என்எல்லில் உள்ள ஊழியர்கள் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க பல முயற்சிகளை அரசாங்கங்கள் மேற்கொண்டன. மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகள் என்ற பெயரில் தொலைத் தொடர்பு சேவையில் மொபைல் சேவைகள் தருவதற்கான அனுமதியை பல தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்த மத்திய அரசாங்கம், பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத்துறைகளுக்கு அதற்கான அனுமதியைத் தரவில்லை. நீதிமன்ற வழக்கின் காரணமாகவே. தனியார் நிறுவனங்கள் சேவை கொடுக்க ஆரம்பித்து ஐந்து வருடங்கள் கழித்த பின்னரே, 2002ல் தான் அதற்கான அனுமதியை அரசாங்கம் கொடுத்தது.
மக்களின் பேராதரவோடு பிஎஸ்என்எல்லின் மொபைல் சேவைகள் மிகப்பெரிய அளவில் வளர்ந்ததைக் கண்டு அஞ்சிய ஆட்சியாளர்கள் அதன் விஸ்தரிப்புகளை பல்வேறு சொத்தைக் காரணங்களைச் சொல்லித் தடுத்தன. மக்களுக்கு தரமான சேவைகளைத் தருவதற்கு தேவையான கருவிகளையும் உபகரணங்களையும் வாங்குவதற்கும் நிதி ஒதுக்கவில்லை. பொதுத்துறை நிறுவனங்களின் சேவை என்று சொன்னால் அது மோசமாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு அரசாங்கங்கள் தொடர்ந்து முயற்சித்தன.
பீனிக்ஸ் பறவையாய்...
அரசாங்கம் எத்தகைய கெடு முயற்சிகளை எடுத்தாலும் அவற்றைப் பின்னுக்கு தள்ளும் ஆற்றல் மக்களுக்கும் ஊழியர்களுக்கும் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் - 2004ஆம் ஆண்டு டிசம்பரில் பிஎஸ்என்எல் ஊழியர்களின் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக பிஎஸ்என்எல்ஊழியர் சங்கம் அங்கீகாரம் பெற்ற பின்னர் பிஎஸ்என்எல்லில் அனைத்து ஊழியர் சங்கங்களையும், அதிகாரிகள் சங்கங்களையும் ஒரே குடையின் கீழ் ஒன்று திரட்டியது. பிஎஸ்என்எல் நிறுவனத்தை அரசு முடக்க ஆலோசித்த ஒவ்வொரு திட்டத்தையும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலமாக முறியடித்தது.
தனது விஸ்தரிப்புகளுக்காக 45 மில்லியன் (450 லட்சம்) மொபைல் தொலைபேசி இணைப்புகளுக்கான டெண்டரை இறுதி செய்யும் தருவாயில், இத்துறைக்குப் பொறுப்பாக வந்த மத்திய அமைச்சர் ஆ.ராசா அதனை ரத்து செய்த போது, அதனை எதிர்த்து பிஎஸ்என்எல்லில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் அனைத்தும் சேர்ந்து 11.07.2007ல் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ததின் விளைவாக 22.5 மில்லியன் இணைப்புகளுக்கான கருவிகளைப் பெற முடிந்தது.
அதனைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் தனது விஸ்தரிப்புகளுக்கு அனுமதிக்கப்பட வேண்டும். அதற்கு தேவையான நிதியாதாரங்களை அரசாங்கம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல வேலை நிறுத்தங்கள் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்திய சங்கம் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம். அதிலும் குறிப்பாக அரசாங்கங்களின் திட்டங்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் 50 லட்சத்திற்கும் மேலான கையெழுத்துக்களை இயக்கமாக பெற்று அரசாங்கத்திடம் கொடுத்தது.
பணிக்கலாச்சாரத்தை மேம்படுத்த...
அரசின் கொள்கைகளுக்கு எதிராகப் போராடி வரக்கூடிய அதே நேரத்தில், தங்களது ஊழியர்களின் பணிக்கலாச்சாரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களை ஒன்று திரட்டி வாடிக்கையாளர் மகிழ்விப்பு வாரம், மாதம், வருடம் என இயக்கமாக நடத்திய சங்கம் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம். அது மட்டுமல்லாமல் அனைத்து ஊழியர்களும் வாடிக்கையாளர்களிடம் உறவை மேம்படுத்தும் வகையில் புன்னகையுடன் கூடிய சேவை என்கின்ற திட்டத்தை வகுத்து ஊழியர்களின் மன நிலையிலும் மாற்றத்தை உருவாக்கியது.
மேலும், பிஎஸ்என்எல் கொண்டு வரும் நல்ல பல சேவைத் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு மக்கள் மத்தியில் ஊர்வலங்களை நடத்துவதும், தொடர்ந்து சங்கங்களின் சார்பாகவே வீதிகளில் இறங்கி விற்பனை இயக்கத்தை மேளாக்களாக நடத்தி வருகிறது. மேலும், பிஎஸ்என்எல்லின் பில்லர்கள் உள்ளிட்ட கருவிகளை சுத்தம் செய்து ஒழுங்குபடுத்துவதும், சேவைகளில் பழுது ஏற்பட்டால் உடனடியாக அதனைச் சரி செய்வதும் அவசியம் என்ற சங்கங்களின் வேண்டுகோள் அனைத்துப் பகுதி ஊழியர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட காரணத்தால் இன்று சேவைகளில் நல்ல பல முன்னேற்றங்களை கொண்டு வர முடிந்துள்ளது.
அரசின் மோசமான கொள்கைகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை 691 கோடி ரூபாய்கள் செயல்பாட்டு நஷ்டத்தில் இயங்கி வந்த பிஎஸ்என்எல் நிறுவனம் 2014-15ல் 672 கோடி ரூபாய்களையும், 2015-16ல் 3880 கோடி ரூபாய்களையும் செயல்பாட்டு லாபமாக பெற்றுள்ளது. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் நிகர லாபமீட்டும் நிறுவனமாக மாறிவிடும். அரசின் கொள்கைகளால் சரிந்து வந்த நிறுவனத்தை நிமிரச் செய்த சாதனைக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கமே முழு முதற் காரணம் என அனைத்துப் பகுதி ஊழியர்களும் பாராட்டி வருகின்றனர்.
மக்கள் பணிகளில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்
பிஎஸ்என்எல்லில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதிய உயர்விற்காகவும், நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் மிகச்சிறப்பான பங்கினை ஆற்றி வரும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், இன்றைக்கு மக்கள் பணிகளிலும் தனது முத்திரையை பதித்து வருகின்றது.
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற தத்துவத்தை உயர்த்தி பிடித்துவந்த நம் தேசத்தில் சாதி, மத, இன, மொழி வேற்றுமைகளை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் பெற பல சக்திகள் முயற்சி செய்து வரும் இன்றைய சூழலில் மக்கள் ஒற்றுமையைப் பேணிக் காக்கவும், மத நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்குமான முயற்சிகளை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.
தனது அனைத்து விதமான பிரச்சாரங்களிலும் மத வேற்றுமையைக் கடந்து தொழிலாளி வர்க்கம் ஒன்றாக இணைய வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றது.சாதி ஆதிக்க வெறியர்களால் இளவரசன் – திவ்யா திருமணத்தை ஒட்டி சூறையாடப்பட்ட நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டாம்பட்டி தலித் மக்களின் வழக்கு நிதியாக ரூபாய் ஒரு லட்சத்தை ஊழியர்களிடம் திரட்டி கொடுத்தது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்.
அன்று முதல் செப்டம்பர் 2016ல் சிவகங்கை மாவட்டம் அரசனூரில் நடைபெற்ற தலித் மக்களின் மீதான தாக்குதல் வரை தொடர்ந்து பாதிக்கப்படும் தலித் மக்களின் உரிமைக்குரலுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம். சாதிக்கொடுமைக்கு எதிராக இன்று அனைத்து பகுதி மக்களையும் ஒரே குடையின் கீழ் இணைத்து போராடி வரும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் இணைந்து செயல்பட்டு வருகின்றது.
இயற்கைச் சீற்றத்தின் துயர் துடைக்க...
2015ல் நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்ட போது உதவிக்கரம் நீட்டியது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம். அப்போது கடுமையாக பாதிக்கப்பட்ட காடம்புலியூர், பெரியகாட்டுபாளையம் மற்றும் விசூர் ஆகிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று ஒரு லட்ச ரூபாய்க்கான நிவாரணப் பொருட்களை கொடுத்தது.
அதையடுத்து டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட வடசென்னை, அரசூர், குமாரமங்கலம், நல்லான்குப்பம், திருவெற்றியூர் அருகில் உள்ள கார்கில்நகர், மாலிக்கம்பட்டு மற்றும் பாண்டிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கும், பிஎஸ்என்எல்லில் பணியாற்றி வருகின்ற ஒப்பந்த ஊழியர்களுக்கும், சைதாபேட்டையில் இயங்கி வரும் கருணை இல்லத்திற்கும் சுமார் 15 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப்பொருட்களை வழங்கியது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்.
தூய்மைப் பணியிலும்….
கடுமையான மழையால் பாதிக்கப்பட்டு குப்பை மேடாகக் கிடந்த சென்னை நகரை தூய்மைப்படுத்துவதில் தனது பங்காக சென்னை எம்எம்டிஏ காலனியில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் இதர இடங்களை தூய்மைப்படுத்த 250க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் இணைந்து பணியாற்றினார்கள்.
பண மதிப்பின்மைக்கு எதிராக…
மத்திய பாஜக அரசாங்கம் 500 மற்றும் 1000 ரூபாய்களை செல்லாது எனச் சொல்லி ஏழை எளிய நடுத்தர மக்களை வீதிகளில் வங்கிகளின் முன்னால் தவமிருக்க செய்தது. சாதாரண ஏழை மக்கள் தங்களின் ஊதியத்தைக் கூட பெற முடியாத அவல நிலை ஏற்பட்டது. இதற்கு எதிராக டிசம்பர் 12 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களை ஒன்று திரட்டி பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்.
துணை டவர் நிறுவனத்தை எதிர்த்து…
பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க அதிகாரிகளும், ஊழியர்களும் ஒன்றாக இணைந்து கடினமாக உழைத்து வரும் வேளையில், பிஎஸ்என்எல்லில் உள்ள 65,000 டவர்களை தனியாக பிரித்து துணை டவர் நிறுவனம் அமைக்கும் முயற்சியினை அரசு எடுத்து வருகின்றது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உயிர் நாடியாக திகழும் மொபைல் டவர்களை பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து பிரித்து தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சியே இது. இதனை அனுமதிக்க முடியாது என டிசம்பர் 15ஆம் தேதி நாடு முழுவதும் பிஎஸ்என்எல்லில் பணி புரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களை ஒன்று திரட்டி ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தியது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்.
சென்னையில் அகில இந்திய மாநாடு…
இவ்வாறு தொழிலாளி வர்க்கப் பாதையில், தொழிலாளர்களின் நலன்காக்கவும், கேந்திரமான பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்ஐ பாதுகாக்கவும், மக்கள் ஒற்றுமைக்காகவும், பாதிக்கப்படும் மக்களின் துயர் துடைக்கவும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வரும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி 3 வரை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.இந்த மாநாட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் அனுபம் ஸ்ரீவாஸ்தவா உள்ளிட்ட அதிகாரிகளும், சிஐடியுவின் அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாதன் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்களும், பிஎஸ்என்எல் அனைத்து சங்க தலைவர்களும், குமரி முதல் இமயம் வரை உள்ள பிஎஸ்என்எல் ஊழியர்களின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாடு 2017 ஜனவரி 1 முதல் பிஎஸ்என்எல்லில் நடைபெற உள்ள ஊதிய மாற்றம், பிஎஸ்என்எல்லின் பாதுகாப்பு, ஒப்பந்த ஊழியர்களின் வாழ்க்கை நிலை மற்றும் மக்கள் ஒற்றுமை உள்ளிட்ட பல பிரச்சனைகளை விவாதிக்க உள்ளது. இந்த மாநாடு பொதுத்துறை நிறுவனங்களின் பாதுகாப்பிற்கான நல்ல பல முடிவுகளை எடுக்கும் என்பது நிச்சயம்.
ஏ.பாபு ராதாகிருஷ்ணன்
கட்டுரையாளர் : பொதுச் செயலாளர், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் 8வது அகில இந்திய மாநாட்டு வரவேற்புக் குழு.