உலக மகளிர் தினம் எல்லா நாடுகளிலும், எல்லா அமைப்புகள் சார்பாகவும், மார்ச் 8 அன்று கொண்டாடப் படுகிறது. ஏதோ பெண்களுக்கான சில சலுகைகள், அவர்களைச் சார்ந்த சில வர்த்தக ஏற்பாடுகள் என்று தான் உலக மகளிர் தினத்தைப் பலர் பார்க்கின்றனர். ஆனால் உலக மகளிர் தினத்தின் நோக்கம் என்பது வேறு.
உலக மகளிர் தினத்தின் உள்ளடக்கம் புரட்சிகரமானது.1917 மார்ச் 8 அன்று ரஷ்யாவில் பெண்கள் தொடங்கிய பெரும் புரட்சிதான்,மார்ச் 8 அன்று மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கு உண்மையான மூலகாரணம் ஆகும்.1917 மார்ச் 8 ல் ஏற்பட்ட எழுச்சி ரஷ்யாவின் முதற்கட்ட புரட்சி. அதே ஆண்டு, அக்டோபர் மாதத்தில் சோசலிசப் புரட்சி வெற்றி பெற்றது. தொழிலாளர்கள் தலைமையில், விவசாயிகளும் பங்கு பெறக் கூடிய ஆட்சி லெனின் தலைமையில் அமைந்தது.
சரி, மார்ச் 8 ஒரு நாள் மகளிரை கொண்டாடினால் போதுமா?.. இல்லை. உடலியல் ரீதியான வேறுபாடு ஒன்றை தவிர, ஆணும் பெண்ணும் ஒன்று தான் . அறிவும், சிந்தனையும்,வலியும். வேதனையும் இரு பாலருக்கும் பொதுவானதுதான். அப்படி இருக்கும் போது பாகுபாடு எதற்கு? இதை போக்கி, சமத்துவ சமுதாயம் மலர செய்வது தான் உண்மையான கொண்டாட்டமாக இருக்கும்.
விண்ணில் பறக்கும் விமானத்திலிருந்து, மண்ணில் நடக்கும் விவசாயம் வரை பெண்கள் தடம் பதிக்காத துறைகளை இல்லை. நமது BSNL நிறுவனத்தில் கூட, உயர் அதிகாரிகள் துவங்கி ஒப்பந்த ஊழியர் வரை பல்லாயிரக்கணக்கான பெண்கள் சிறப்பாக பணியாற்றி வருவதோடு, போராட்டங்கள், இயக்கங்கள் என அனைத்திலும் தனி முத்திரை பதித்து வருகிறார்கள்.
சமத்துவ சமுதாயம் மலர்வதற்கான முயற்சிகள் வெற்றி பெற, அமைப்பு ரீதியாக திட்டமிடப்பட்டு, அணி திரட்டப்பட்டு, பெண்களின் உரிமைகளுக்காகவும் பணியிட சம சூழலுக்காகவும், வர்க்க மேம்பாட்டிற்காகவும், அயராது போராட வேண்டும். அதற்கு இந்நாளில் சபதமேற்போம்.
நம் முன் உள்ள சவால்களை கூட்டாக எதிர்கொண்டு, வெற்றி பெறுவோம்.
" சூரியன் இன்றி, பூமி சுழலாது!
பெண்கள் இன்றி இப்பூவுலகம் இயங்காது!!
அனைவருக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்