ஜி.ராமகிருஷ்ணன்
உலக மகளிர் தினம் எல்லா நாடுகளிலும், எல்லா அமைப்புகள் சார்பாகவும், மார்ச் 8 அன்று கொண்டாடப் படுகிறது. ஏதோ பெண்களுக்கான சில சலுகைகள், அவர்களைச் சார்ந்த சில வர்த்தக ஏற்பாடுகள் என்று தான் உலக மகளிர் தினத்தைப் பலர் பார்க்கின்றனர். ஆனால் உலக மகளிர் தினத்தின் நோக்கம் என்பது வேறு. உலக மகளிர் தினத்தின் உள்ளடக்கம் புரட்சிகரமானது. உள்ளடக்கம் உருவானது எப்படி? என்று பரிசீலிக்கிற போது உலக மகளிர் தினம் மார்ச் 8 என, உருவான பின்னணியையும் சேர்த்து பரிசீலித்தால் தான் நாம் சரியான முடிவுக்கு வர முடியும். இந்த இரண்டு அம்சங்களையும் உள்ளடக்கி எண்பது பக்கங்களைக் கொண்ட, மகளிர் தினம் உண்மை வரலாறு என்ற நூலைப் பத்திரிகையாளர் இரா. ஜவகர் எழுதியுள்ளார். கடந்த டிசம்பர் 17, 2016 அன்று பாரதி புத்தகாலயத்தால் அந்த நூல் வெளியிடப்பட்டது. உலகமகளிர் தினம் உருவானது பற்றியும், அதனுடைய புரட்சிகரமான பின்னணி பற்றியும், ஒரு நீண்ட ஆய்வுக்குப் பின்னர் தான் உண்மை வரலாறு என்ற இந்த நூலை ஜவகர் எழுதியுள்ளார். மார்ச் 8 மகளிர் தினக் கொண்டாட்டம் குறித்து பலருக்கு பலவிதமான கருத்து இருந்தது. ஐ.நா மன்றம் முடிவு செய்தது என்றும், அமெரிக்காவில் தான் முடிவெடுக்கப் பட்டது என்றும் பல்வேறு கருத்துக்கள் நிலவின.
உண்மை அதுவல்ல.
1917ஆம் ஆண்டு, ரஷ்யப் புரட்சி நடந்த பிறகு தோழர். லெனின் முயற்சியில் 1919ஆல் மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் உருவானது. 1920ஆம் ஆண்டு, கம்யூனிஸ்ட் அகிலத்தின் முன்முயற்சியில், கம்யூனிஸ்ட் பெண்களுக்கான சர்வதேச முதல் மாநாடு இனெஸ்ஸா என்ற பெண் தோழரின் முயற்சியில் நடந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்டு இனெஸ்ஸா இறந்தபோது பெண்கள் அகிலத்தின் செயலாளராக கிளாராஜெட்கின் பொறுப்பேற்றார். கம்யூனிஸ்ட் பெண்கள் அகிலத்தின் மாநாடு 1921 ஜூன் மாதம் மாஸ்கோவில் நடந்தது. இந்த மாநாட்டில் தான் உலக மகளிர் தினத்திற்கு மார்ச் 8 என்ற தேதி நிச்சயிக்கப்பட்டது. அதுவரையில் உலக மகளிர் தினம் பிப்ரவரி முதல் மே வரையிலான ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடப் பட்டு வந்தது. ஐ.நா மன்றம் 1975 மார்ச் 8 அன்று முதல் முறையாக மகளிர் தினத்தைக் கொண்டாடியது. இவற்றின் தொடர்ச்சியாகத் தான், உலக மகளிர் தினத்தை அனைத்து நாட்டு அரசுகளும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் தீர்மானத்தை ஐ.நா வின் பொதுச்சபை 1977 டிசம்பர் 16 அன்று நிறைவேற்றியது.
"ஏதேனும் ஒரு நாளை" என தீர்மானத்தில் குறிப்பிட்ட போதும், இந்திய அரசு உள்பட அனைத்து நாட்டு அரசுகளும், மார்ச் 8 அன்று உலக மகளிர் தினச் செய்தியும் வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றன. மார்ச்8 உருவான வரலாற்றுப் பின்னணி என்ன? உலக மகளிர் தினத்தின் உள்ளடக்கம் புரட்சிகரமானது என்பதன் பொருள் என்ன? இந்த இரண்டு கேள்விகளுக்கான விடையைத் தோழர். ஜவகர் தனது நூலில் தெளிவாக விளக்கி இருக்கிறார். ஜார் கால ரஷ்யாவில், பஞ்சாலைகளில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல் வேலை வாங்கப் பட்டனர். ரஷ்யாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையில் யுத்தம் நடந்து வந்த காலம், ஒரு ரொட்டித் துண்டு கூட கிடைக்காமல், தொழிலாளர்களின் வாழ்க்கை அவலமாக இருந்தது. தானும் தங்களது குழந்தைகளும், மற்றவர்களும் பசியால் துடிப்பதை இனியும் பொறுக்க முடியாது என ரஷ்யத் தலைநகர் பெட் ரோ கிராடு நகரில், பஞ்சாலைப் பெண்தொழிலாளர்கள் கொதித்து எழுந்தனர். 1917இல் மார்ச் 8 அன்று பெட் ரோ கிராடு நகரில் வைபோர்க் என்ற பகுதியில் பஞ்சாலையில் வேலை செய்த பெண்கள் வேலை நிறுத்தத்தைத் துவக்கினார்கள். வேலை நிறுத்தம் செய்த பெண் தொழிலாளர்கள் பேரணியாக வீதிக்கு வந்தனர். அருகில் இருந்த தொழிற்சாலைகளுக்குச் சென்று, ஆயிரக்கணக்கான ஆண் தொழிலாளர்களை ஆலைகளை விட்டு வெளியே வாருங்கள் என அழைத்தார்கள். நமக்கு உணவு வேண்டும், போர் நிறுத்தப் பட வேண்டும், சுதந்திரம் வேண்டும், தெருவில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. எங்களோடு சேர்ந்து போராடுங்கள் என ஆண் தொழிலாளர்களை பெண் தொழிலாளர்கள் அறைகூவி அழைத்தனர். பஞ்சாலைகளில் மட்டுமல்ல, சிகரெட் தொழிற்சாலை உள்ளிட்டு பல ஆலைத் தொழிலாளர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். ரொட்டிக் கடைகளின் முன், ரொட்டி வரும் என எதிர்பார்த்து, நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்களும் ஆவேசமாகக் கலந்து கொண்டனர். பலர் குழந்தைகளுடன் வந்தனர். சிறுவர் சிறுமியரை நடத்திக் கூட்டி வந்தனர். ஒரு பகுதி படை வீரர்களும் இப்பேரணியில் இணைந்தனர். பேரணியின் ஆவேசத்தைக் கண்டு, மாணவர்களும் அலுவலக ஊழியர்களும் கூட இணைந்தனர். இவ்வாறு பல சிற்றாறுகள் கலந்து பொங்கிப் பெருகும் பேராற்று வெள்ளம் போல், மனித வெள்ளம் முதன்மைச் சாலையை நிறைத்தது. கோரிக்கை முழக்கம் காற்றை நிறைத்தது,பதாகைகள் கண்களை நிறைத்தது", என பாட்டாளிகள் எழுச்சியை நூலாசிரியர் அழகாக விளக்கி இருக்கிறார். இப்பேரணியில் சுமார் ஒரு லட்சத்து இருபத்து எட்டாயிரம் பெண், ஆண் தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் மற்றவர்களும் கலந்து கொண்டனர்.அடுத்த நாள் இந்தப் பேரணி இரண்டு லட்சத்தைத் தாண்டியது. புதிய கோரிக்கையும் சேர்ந்து கொண்டது.
" மன்னராட்சி ஒழிக"
ஆம் புரட்சி தொடங்கி விட்டது.
இவ்வாறு 1917 மார்ச் 8 அன்று ரஷ்யாவில் பெண்கள் தொடங்கிய பெரும் புரட்சிதான், உலக மகளிர் தினம் மார்ச் 8 அன்று மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கு உண்மையான மூலகாரணம் ஆகும்.1917 மார்ச் 8 ல் ஏற்பட்ட எழுச்சி ரஷ்யாவின் முதற்கட்ட புரட்சி அதே ஆண்டு, அக்டோபர் மாதத்தில் சோசலிசப் புரட்சி வெற்றி பெற்றது. தொழிலாளர்கள் தலைமையில், விவசாயிகளும் பங்கு பெறக் கூடிய ஆட்சி லெனின் தலைமையில் அமைந்தது. லெனின் தலைமையிலான அரசு ஆண் பெண் தொழி லாளர்களுக்கு சம ஊதியம் உள்ளிட்டு, பெண் விடுதலையை உள்ளடக்கமாகக் கொண்ட பல உரிமைகளை வழங்கிடும் சட்டம் இயற்றப்பட்டது. மார்ச் 8 உலக மகளிர் தினத்தின் உள்ளடக்கம் சோசலிசப் புரட்சிக்கான எழுச்சி ஆகும். உலக மகளிர் தினத்தை கொண்டாடும் ஒவ்வொரு அமைப்பும், சோசலிசப் புரட்சி என்ற உன்னதமான உள்ளட க்கத்தை, முன்னெடுத்துச் செல்ல முழக்கமிட வேண்டும்.