சேலம் உருக்காலையை விற்க டெண்டர் விடுவது என்ற மத்தியபாஜக அரசின் முடிவிற்கு சேலம் உருக் காலை தொழிலாளர் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அடுத்தகட்ட போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளனர்.சேலம் உருக்காலை 4 ஆயிரம் ஏக்கர்பரப்பளவில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்புடைய பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை விரிவாக்கம் செய்யாமல் நஷ்டத்தில் இருப்பதாக கூறி தனியாருக்கு விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்பிரச்சனையில் சேலம் உருக் காலை தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு சேலம்உருக்காலையை விற்க புதிய டெண்டர்அறிவித்துள்ளது. இதில் மூன்று ஆலோசகர் அடிப்படையில் அமைக்கப்பட்டுள் ளது. முதலில் சட்ட ஆலோசகர், இரண்டாவது சொத்து மதிப்பீட்டாளர், மூன்றாவது தனியார் மயத்திற்கான ஆலோசர் என திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதனன்றுஉருக்காலை பாதுகாப்பு கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, "அரசின் இந்த முடிவு தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரானது. சேலம் உருக்காலை ஆரம்பிக்கும் போது இருந்த ரூ.181கோடி மதிப்பு தற்போது 15மடங்கு உயர்ந்துள்ளது. சேலம் உருக் காலையின் உற்பத்தி அதிகமாக உள் ளது. ஆலை வளாகத்தில் துணை மின் திட்டம், சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட சில அம்சங்களை கொண்டு வந்தால் தற்போது ஏற்படும் நஷ்டத்தை குறைத்து அதிக லாபம் ஈட்ட முடியும் என்று கூறினர்.
செய்தியாளர் சந்திப்பில் ஒருங்கிணைப்பாளர் கே.பி.சுரேஷ்குமார், துணை ஒருங்கிணைப்பாளர் பி.பன்னீர் செல்வம், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே.தியாகராஜன், ஐன்டியுசி சார்பில் டி.தேவராஜூ, பிடிஎஸ் எஸ்.முருகன், சேலம் உருக்காலை நிலம் கொடுத்தோர் சங்கம் சார்பில் நாகராஜ், எஸ்சிஎஸ்டி சங்கத்தின் சார்பில் ஏசு, மாணிக்கம்,ஓபிசி சங்கம் சார்பில் குமார், அண்ணா தொழிற்சங்கம் சார்பில் முருகேசன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மத்திய அரசின் டெண்டர் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொதுத்துறையை பாதுகாக்கவும் மார்ச் 13ம் தேதிசேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்திட திட்டமிட்டுள்ளனர். மேலும் மார்ச்மூன்றாம் வாரத்தில் மறியல் போராட்டத்தையும், டெண்டர் திறக்கப்படும் ஏப்ரல்3 அன்று வேலைநிறுத்த போராட்டத்தை நடத்திடவும் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.