Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, April 3, 2017

நாளை கோட்டை முற்றுகை!



மத்திய அரசின் நடவடிக்கைகளால் தமிழகம் பெரும் பாதிப்புக்குள்ளான போதும் மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கவோ அல்லது தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தவோ துணிவற்ற நிலையில் இருப்பதன் மூலம் தமிழக நலனை காவு கொடுத்துள்ளது.



தமிழக தொழிற்சங்க வரலாற்றில் இதுவரை நடந்திராத பிரம்மாண்டமான அணிவகுப்பை இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) ஏப்ரல் 4(செவ்வாய்) நடத்த இருக்கிறது.

மத்தியில் மோடி அரசு வந்த பிறகு காங்கிரஸ் அரசின் நாசகர பொருளாதாரக் கொள்கைகளை அது கைவிடவில்லை. மூர்க்க

த்தனமாக அமலாக்கி வருவதை 34 மாதங்களில் கண்கூடாக பார்த்து வருகிறோம். நரசிம்மராவும், மன்மோகன்சிங்கும் சிதம்பர மும் தூக்கிப் பிடித்த அந்தக் கொள்கைகளின் நாசத்தன்மை இப்போதும் தொடர்கிறது.

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய - உள்நாட்டு கார்ப்பரேட்டுகளை அனுமதிப்போம் என்று கூறுவதும், தவறான பென்சன் திட்டத்தை திணித்ததும், பொதுத்துறையில் பல தொழில்களை சீரழிப்பதும், சிறு-குறுந்தொழில்களின் பாதுகாப்பை தகர்ப்பதும், பாரம்பரியத் தொழில்களின் அழிவை வேடிக்கை பார்ப்பதும், மோட்டார் வாகன தொழிலை நிர்மூலமாக்கும் வகையில் அனைத்துவிதமான கட்டணங்களை உயர்த்தியும், போராடிப்பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மாற்ற முயற்சிப்பதும், அந்நிய கம்பெனிகளையும், மூலதனங்களையும் வேட்டை நாயாய் உள்ளேவிட்டி ருப்பதும் எனப் பல கேடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இது நமது பொருளா தாரத்தில், தொழில்துறையில் ஏற்பட்டுள்ள அழிவு. இதை எதிர்த்துப் போராட வேண்டிய தமிழக ஆட்சியாளர்கள், இந்த நாசகரக் கொள்கைகளை வெண்சாமரம் வீசி வரவேற்று அமலாக்கும் கொடுமை.

உலகவங்கி, ஐஎம்எப் கட்டளையின் பேரில் மத்திய அரசு பின்பற்றும் பிற்போக்கான பொருளாதாரக் கொள்கை தொழிலாளர்களின் - விவசாயிகளின்-உழைக்கும் மக்கள் அனைவரின் வாழ்விலும் தொடர்ந்து மிகப்பெரும் தாக்குதலைத் தொடுத்துள்ளது.

இந்த படுமோசமான கொள்கை நாட்டின் எந்தத் தரப்பு மக்களையும் விட்டுவைக்கவில்லை. உழைப்பாளி மக்கள் நீண்டகாலம் உழைத்து உருவாக்கிய தொழில்கள், நிர்மாணித்த கட்டமைப்பு வசதிகள், நிதி நிறுவனங்கள் அனைத்தும் சீரழிக்கப்பட்டு, பொருளாதார வாழ்வின் நாடி நரம்பாக இருக்கும் பொதுத்துறையும் சிறுகச் சிறுக கலைக்கப்பட்டும், விலக்கப்பட்டும் வருவது வேதனையளிக்கிறது.

ஒருபுறம் இந்த படுபயங்கரமான கொள்கைகள் அமலாக்கப்பட்டாலும், மறுபுறம் இதுவரை இல்லாத அளவில் மக்கள் சக்தி திரட்டப்பட்டு வருகிறது. இந்தாண்டு துவக்கத்திலேயே ‘‘வாடிவாசல் திறக்கும்வரை, வீடு வாசல் செல்ல மாட்டோம்’’ என சென்னை மெரினாவில் துவங்கி தமிழகம் முழுவதும் எதிரொலித்த போராட்டம், ‘‘ஹைட்ரோ கார்பனை’’ அனுமதிக்க மாட்டோம் என நெடுவாசல் போராட்டம், தலைநகர் தில்லியில் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம், கடந்த 12 நாட்களாக நடைபெற்ற போக்குவரத்து ஓய்வூதியர் போராட்டம் என தொழிலாளரும், விவசாயிகளும் விவசாயத் தொழிலாளரும் மகளிரும் மாணவர்களும் இளைஞர்களும் போராடி வரும்போது தன்னிறைவு, பொதுத்துறை பாதுகாப்பு, நாட்டின் இறையாண்மையைக் காக்கவும் தற்போதைய கழிசடைக் கொள்கைகளை நீக்கவும் தொழிற்சங்கங்கள் போராடும் காட்சியையும் காண்கிறோம்.

உலக முதலாளிகளிடம் இந்தியாவையே விற்க முயற்சி நடக்கும்போது இந்த கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை யும் வலுவாக நடத்த வேண்டியுள்ளது. இந்த ஒன்றுபட்ட கிளர்ச்சிகளில் முக்கிய பாத்திரம் வகிப்பது சிஐடியு என்று நெஞ்சுயர்த்தி நாம் முழக்கமிட முடியும்.

மக்களுக்கு நலன் பயக்கும் எந்தத் திட்டமும் மத்திய-மாநில அரசுகளிடம் இல்லை. விவசாயத்திற்கான, கல்விக்கான, உணவுக்கான, மானியம் வெட்டப்படுகிறது, சுருக்கப்படுகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உருப்படியான நடவடிக்கை இல்லை. பெட்ரோல்-டீசல் விலை உயர்வு பயமுறுத்திக்கொண்டே இருக்கிறது. தேர்தல் காலத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் ஓராண்டுக்கு2 கோடி பேருக்கு வேலை என்ற வாக்குறுதி ஏட்டளவிலேயே உள்ளது. பொருளாதாரத்தின் நாடித் துடிப்பாக இருக்கும் துறைகள் பன்னாட்டுக் கம்பெனிகளின் கொள்கைக்கு திறந்துவிடப்படுகிறது. இறக்குமதி தீர்வைகள் வெட்டப்பட்டு அந்நியப் பொருட்கள் குவிக்கப்படுகின்றன. சர்வதேச அரங்கிலும், உலக வர்த்தக அமைப்பிலும் ஆதிக்கம் செலுத்தும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து தொழிற்சங்க உரிமைகளும், ஜனநாயக இயக்கங்களின் உரிமைகளும் வெட்டப்படுகின்றன. கல்வி-குடிநீர் வியாபாரமாக்கப்படுகிறது. சுகாதார நடவடிக்கைகளும் மற்ற சமூக நலத் திட்டங்களும் வெட்டப்படுகின்றன.

மக்களுக்கு அளித்த வாக்குறுதியிலிருந்து தடம் புரண்டு செல்லும் மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோத-தொழிலாளர் விரோத கொள்கைகளை தடுத்து நிறுத்த வேண்டிய மகத்தான கடமை உழைக்கும் வர்க்கத்துக்கும், விவசாயிகளுக்கும், தொழிலாளருக்கும் உண்டு. ஏனெனில் முந்தைய ஐக்கிய முன்னணி ஆட்சியை மாற்றுவதற்கு கட்டியம் கூறியது தொழிலாளர் போராட்டங்கள்தான். அதிகாரத் தரகர்கள், ஊழல்பேர்வழிகள் ஒருபுறமும், பிரிவினைவாதிகள், வகுப்புவாதிகள் மறுபுறமும் இன்று நாட்டை நாசகரப்பாதைக்கு இட்டுச்செல்லமுயலும்போது இந்த இருதரப்பையும் ஒன்றுசேர நின்று எதிர்ப்பதன் மூலம்தான் அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி நிர்ப்பந்திக்க முடியும்.

வறட்சிதமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடும் வறட்சி ஏற்பட்டு, விவசாயம் முற்றிலுமாக பொய்த்துவிட்டது. ஆற்றுப்பாசனம், கண்மாய்பாசனம், கிணற்று ப்பாசனம், மானாவாரி என அனைத்துமே விவசாயிகளை கைவிட்டுவிட்டன.

கடந்த காலங்களில் தஞ்சாவூர், திருவாரூர், நாகையை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் ‘‘சோறுடைத்த சோழநாடு’’ என பெயர் பெற்றது. முப்போகம் விளையும் பூமியில் இந்தாண்டு ஒரு போகம் கூட விளையவில்லை. கடைசி யாக பயிரிடப்பட்டிருந்த சம்பாவும் முழுமையாக கருகிவிட்டது. கடன் வாங்கி பயிரிடப்பட்டிருந்த விவசாயிகள், சாகுபடி பொய்த்துப் போனதால் வயலிலேயே விஷம் குடித்தும், தூக்குமாட்டியும் தற்கொலை செய்து கொண்டனர். பலர் கருகிய பயிரைப்பார்த்துக்கொண்டே அதிர்ச்சியில் உயிரை விட்டனர்.

மத்திய அரசு துரோகம்: மாநிலங்களுக் கிடையிலான நிதி பகிர்வதில் மத்திய அரசின் அணுகுமுறையால் தமிழக அரசு வேறு எந்த மாநிலத்தையும் விட மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள உதய் மின் திட்டத்தில் தமிழக அரசும் இணைந்துள்ளதால் தமிழக அரசின் கடன் சுமை மேலும் அதிகரித்துள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை தமிழகம் நடைமுறைப்படுத்துவதன் மூலம் கூடுதலாக ஆண்டுக்கு ரூ. 2730 கோடி செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசின் நடவடிக்கைகளால் தமிழகம் பெரும் பாதிப்புக்குள்ளான போதும் மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கவோ அல்லது தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தவோ துணிவற்ற நிலையில் இருப்பதன் மூலம் தமிழக நலனை காவு கொடுத்துள்ளது.

காலிப்பணியிடங்கள்: 

வேலையற்றோர் எண்ணிக்கை அனுதினமும் அதிகரித்துக் கொண்டுள்ள நிலையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்கள் ஏதும் இல்லை. தமிழக அரசில் 3 லட்சம் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதன் மூலம் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்கிட இயலும்.

ஊழல்: 

ஊழல்முறைகேடுகளில் தமிழகம் கொடிகட்டிப் பறக்கிறது. அரசுக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி கைதாகி இருப்பதும், ஊழல் முறைகேடுகளை தடுத்திட அரசின் உயர்மட்டத்தில் உள்ள முதலமைச்சர் முதல் அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டவர்கள் மீதான ஊழலால் தமிழகமே நாறிக்கிடக்கிறது.

நலவாரியம்: 

ஆட்சியாளர்களின் அலங்கோலத்தால் நலவாரியங்கள் செயலற்றுக் கிடக்கின்றன. கட்டுமானம் மற்றும் முறைசாரா நலவாரியத்தில் 67 லட்சம் பேர் வரை பதிவு செய்துள்ளனர். பல லட்சக்கணக்கானவர்களுக்கு பணப்பலன் கிட்டவில்லை. தேவையின்றி தொழிலாளர்களை அலைக்கழிப்பது, கிடைக்க வேண்டிய சலுகைகள் லஞ்சம் கொடுத்தால் தான் கிடைக்கும் என்கிறநிலை. தொழிற்சங் கங்களை மதிக்காத போக்கு. இத்தனை அவலங்களையும் களைய வேண்டியுள்ளது.

தொழில்துறை பாதிப்பு: 

2016 நவம்பர் 8 அன்று மோடி அரசின் உயர்மதிப்பு நோட்டுக்கள் செல்லாது என்கிற எதேச்சதி காரமான அறிவிப்பால் தமிழகத்தில் சிறு-குறுந்தொழில்கள், தேயிலை-முந்திரி, கட்டுமானத் தொழில்கள் பெரிதும் பாதிப்படைந்து லட்சக்கணக்கான தொழி லாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

உழைப்பு சுரண்டல்: 

அங்கன்வாடி-டாஸ்மாக்-உள்ளாட்சி-மெட்ரோ வாட்டர் போன்ற துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தொகுப்பூதியம் என்ற பெயரில் ரூ. 3000, ரூ. 4000 கொடுத்து சுரண்டல் பெருமளவில் நடைபெறும் கூடாரமாக மாறியுள்ளது.

ஒப்பந்தமுறை: 

அரசு நிறுவனங்களில், நிறுவனப்படுத்தப்பட்ட தொழில்களில் பெருமளவு புகுத்தப்படுகிறது. நிரந்தரத்தன்மை வாய்ந்த பணிகள் முழுவதும் ஒப்பந்த முறையில் மேற்கொள்ளப்படுகிறது. பல இடங்களில் அவுட்சோர்சிங் காவும் நடைபெறுகிறது. இத்தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுக்கப்படுவதோடு, சமூக பாதுகாப்புத் திட்டங்கள் எதுவும் அமலாவதில்லை.

இந்த பின்னணியில் 2016 செப்டம்பரில் தூத்துக்குடியில் நடைபெற்ற சிஐடியுவின் 13வது தமிழ் மாநில மாநாட்டில்,

l விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து!

2 விவசாயத்தை பாதுகாத்திடு! இறந்து போன விவசாயிகள் குடும்பங்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்கு!

3 சமவேலைக்கு சம ஊதியம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனே அமலாக்கு!

4 அங்கன்வாடி - டாஸ்மாக்-உள்ளாட்சி-குடிநீர் போன்ற துறைகளில் தொகுப்பூதியம் - மதிப்பூதியம் பெறும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கு!

5 முறைசாரா தொழிலாளருக்கு வாரிய பலன்களை இரட்டிப்பாக்கு! வாரியத்தை முறைப்படுத்து!

6 குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18,000 வழங்கு!

7 காலி இடங்களை நிரப்பு, புதிய வேலைவாய்ப்பை உருவாக்கு!

8 அனைவருக்கும் குறைந்தபட்ச பென்சன் ரூ. 4000/- வழங்கு! புதிய பென்சன் திட்டத்தை கைவிடு! பழைய பென்சனை நடைமுறைப்படுத்து! ஓய்வூதிய பலன்களை காலதாமதமின்றி வழங்கு!

9 தொழிற்சங்க அங்கீகார சட்டத்தை நிறைவேற்று!

10 பொதுத்துறைகளை தனியார்மயமாக்கும் முயற்சிகளை கைவிடு!

11 உயர்த்தப்பட்ட வாகன பதிவு புதுப்பித்தல் கட்டணங்களை வாபஸ் வாங்கு!

12 பணமில்லா பரிவர்த்தனையை திணிக்காதே!

13 பணியிடங்களில் பாலியல் வன்முறையை தடுத்திடு!

என 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக ஏப்ரல் 4 அன்று முற்றுகைப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

முடிவின் அடிப்படையில் தமிழகத்தின் அனைத்து திசைகளிலிருந்தும் ஆயிரம் ஆயிரமாய் அணிதிரண்டு சென்னையைசெங்கடலாக்க தமிழக உழைப்பாளிகள் திட்டமிட்டுள்ளார்கள். இப்போராட்டத்திற் கான பணி கடந்த 3 மாத காலமாக வீரியத் தோடு நடைபெற்று வருகிறது. ஆயிர க்கணக்கான தெருமுனைக் கூட்டங்கள், ஆலை வாயிற்கூட்டங்கள், குடியிருப்புகளில் தொழிலாளர்களை சந்திப்பது, நடைபயணம், வாகன பிரச்சாரம் என பல்வேறு வடிவங்களில் மக்களை சந்தித்துள்ளனர்.

தமிழக தொழிற்சங்க வரலாற்றில் 2017 ஏப்ரல் 4 என்பது மறக்கமுடியாத, என்றும் நினைவில் கொள்ளத்தக்க தாக மாறும் - போராட்டம் நிச்சயம் வெல்லும்.



வி.குமார்
கட்டுரையாளர்: சிஐடியு-மாநில துணை பொதுச் செயலாளர்