1919 ஏப்ரல் 13 -ஆம் நாள்… உலக வரலாற்று ஏடுகளில் கறை படிந்த கருப்பு தினம் அது… ஜாலியன் வாலாபாக் படுகொலை!
கொடிய சட்டத்தை எதிர்த்து...
1919, பிப்ரவரி மாதம், பிரிட்டிஷ் அரசால்கொண்டு வரப்பட்ட ரௌலட் சட்டம் என்பதுமிகக் கொடிய சட்டம். இதன்படி, தேச விடுதலைப் போராட்ட வீரர் எனச் சந்தேகிக்கப் படும் எவரையும் எவ்வித விசாரணையும் செய்யாமல், காலவரையறை இன்றிச் சிறையில் அடைக்கலாம். இதனைஎதிர்த்து அண்ணல் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினார். இதற்குஆதரவாக, தேசமெங்கும் ஆர்ப்பாட்டங்களும் பொதுக் கூட்டங்களும் நடைபெற்றன.10-04-1919, ராம நவமியன்று, பஞ்சாப்பின் அமிர்தசரசில் சீக்கியர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கு பெற்ற மிகப்பெரிய ஓர் ஊர்வலம் நடைபெற்றது. இதனைக் கண்டு,ஆத்திரமடைந்த ஆங்கில அரசு, ஊர்வலத்தை ஏற்பாடு செய்த டாக்டர் சத்தியபால், டாக்டர் சைபுதீன் கிச்சலு ஆகியோரைக் கைது செய்தது.கைது செய்த தலைவர்களை விடுவிக்கவும் ஆங்கிலேயரின் கொடிய அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்துக் கண்டனக் குரல் கொடுப்பதற்காகவும் 1919, ஏப்ரல் மாதம்,13-ஆம் நாள், அமிர்தசரஸ், ஜாலியன் வாலாபாக் பூங்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். ஆங்கிலேய- ஜெனரல் டயர் என்பவன், 358 காவலர்களோடு அங்கு சென்று, துப்பாக்கிகளில் தோட்டாக்கள் தீரும் வரை இந்திய மக்களைச் சுட்டு வீழ்த்தினான்.அந்தப் பூங்காவுக்கு மூன்றரை அடி அகலமுள்ள ஒரே ஒரு குறுகிய வாயில் மட்டுமே உண்டு. சதுர வடிவில், சுற்றிலும் வீடுகளின் சுவர்கள், மதிற் சுவர்கள்.துப்பாக்கிகளால் சுடப்பட்ட போது மக்கள் எங்கும் ஓடமுடியவில்லை. நெரிசலிலும் அந்தப் பூங்காவின் நடுவிலிருந்த ஓர் பெரிய கிணற்றிலும் விழுந்து சிலர் மாண்டனர். அன்றைய அரசின் கணக்கின்படி, 379 பேர்மாண்டனர். 1200-க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஜாலியன் வாலாபாக்கில் உள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபியில் இந்தக் குறிப்புதான் குறிக்கப் பட்டுள்ளது. ஆனால், 1500 பேர் மாண்டதாகவும், 3000-க்கு மேற்பட்டோர் படுகாயமுற்றதாகவும் நமது தலைவர்கள் தெரிவித்தனர். பாரத மக்கள் பேரதிர்ச்சியடைந்தனர்.இப்படி ஜெனரல் டயர் செய்த கொடூரச் செயலை, பஞ்சாப் துணை ஆளுநராக இருந்தமைக்கேல் ஓ டுவையர் என்பவன் மிகப் பாராட்டி ஆதரவளித்தான்.
ரத்தம் தோய்ந்த மண்
இந்தக் கொடூரச் செய்தியைக் கேள்விப்பட்டு, 12 வயதே ஆன சிறுவன்பகத்சிங், அங்கு ஓடினான். அவன் கண்ட காட்சி… அவனது ரத்தத்தை உறைய வைத்தது… குமுறிக் குமுறி அழுது கண்ணீர்வடித்தான். அதுதான், அவன் முதலாவதாகவும் கடைசியாகவும் அழுதது… அங்கிருந்த ரத்தம் தோய்ந்த மண்ணை அள்ளிக் கொண்டு வந்து, தனது வீட்டில் வைத்து, தினமும் உறங்குவதற்கு முன்னும், காலையில் கண்விழித்த பின்னும் அந்த மண்ணைப் பார்த்து பூஜிப்பான்.இப்படிச் சிறு வயதிலேயே இந்திய விடுதலைக் கனல் அவன் நெஞ்சில் கொளுந்து விட்டு எரிந்தது. அந்த தீரச் சிறுவன் பிறந்தது- பஞ்சாப் மாநிலம், லாயல்பூர் மாவட்டம், ‘பங்கா’ என்னும் கிராமத்தில், 1907-ஆம் ஆண்டு, செப்டம்பர் 28 ஆம் நாள்…தூக்கிலிடப்பட்ட நாள்- 23 -03-1931.
அஞ்சா நெஞ்சன் உத்தம்சிங்
ஜாலியன் வாலாபாக் படுகொலையின் பேரதிர்ச்சியிலிருந்து மீள முடியாத மற்றொரு பஞ்சாப் இளைஞன் அஞ்சா நெஞ்சன் உத்தம்சிங்… இந்த இளைஞர் பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா மாவட்டத்தில் சுனம் என்னும் ஊரில் 1899-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26-ஆம் நாள் பிறந்தார். .பஞ்சாப் படுகொலைக்குப் பின், சுட்டு வீழ்த்திய ஜெனரல் டயரும், பஞ்சாப் துணை ஆளுநர் மைக்கேல் ஓ டுவையரும் லண்டன் சென்ற பின்பு, பஞ்சாப் படுகொலைக்காக அவர்களைப் பழி வாங்குவதற்காக இளைஞர் உத்தம்சிங், ‘ராம் முகமத் சிங் ஆசாத்’ என்னும் பெயருடன் லண்டன் சென்று, 21ஆண்டுகள் தலை மறைவு வாழ்வு வாழ்ந்தார்.இதற்கிடையே ஜெனரல் டயர், பக்கவாத நோய்க்கு உள்ளாகிப் பேச்சுத் திறன் இழந்து, 1927-ஆம் ஆண்டு இறந்தான். பஞ்சாப் படுகொலைக்கு ஆதரவளித்த அப்போது பஞ்சாப் துணை ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ டுவையரைத் தகுந்த சமயம் பார்த்து, உத்தம்சிங், தனது துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திப் பழி தீர்த்தார்.இந்தச் சம்பவத்திற்காகப் பிடிபட்ட உத்தம்சிங்கிற்கு பிரிட்டிஷ் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. ‘ராம் முகமத் சிங் ஆசாத்’ என்று மூன்று மதங்களின் பெயரையும் இணைத்து, லண்டனில் கொடியவர்களைப் பழிவாங்குவதற்கு மறைந்து வாழ்ந்த அந்த அஞ்சா நெஞ்சன் உத்தம்சிங் 1940-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 31 அன்று லண்டன் சிறையில் தூக்கிலிடப் பட்டார்.பஞ்சாபில் அமிர்தசரஸ்- ஜாலியன் வாலாபாக் பூங்காவில் மதம், இனம் என்று காணாத இந்தியத் தியாகிகள் சுடப்பட்டு மடிந்தநினைவு நாள்- ஏப்ரல் 13 ஆகும். அந்தப் பூங்காவில் வாழைப் பூ வடிவத்தில் சலவைக் கல்லால் ஆன மிகப் பெரிய ஒரு நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. அணையாத ஜோதி அந்த நினைவிடத்தில் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது.அந்த ஸ்தூபியின் வடிவத்தில்தான் செந்நிறத்தில் நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம் கீழவெண்மணியில், வெண்மணி தியாகிகளின் நினைவிடத்தில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது என்பதும் நினைவுகூரத்தக்கது.
ந.காவியன்