Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, July 30, 2017

டேட்டா தான் புதிய பெட்ரோல்



ஜியோ என்பதன் அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா? துஐடீ என்ற வார்த்தைகளை அப்படியே திருப்பிப்போட்டு. அதாவது கண்ணாடிக்காட்சியாகக் கொண்டு பாருங்கள். ஆயில் (டீஐடு) என்பது போல் தெரிகிறதல்லவா. ஆம். அதுதான் அர்த்தமாகும். அதிகாரப்பூர்வமாய் இப்படி அம்பானி அறிவிக்க வில்லையெனினும், அவர் சொல்வதை வாசித்துப் பாருங்கள். அவரின் தொலைநோக்கு லாபவேட்கை உங்களுக்குப் புரியும். "ரிலையன்சைப் பொறுத்தவரை அலைக்கற்றைதான் எங்களது புதிய ஆயிலாகும்; புத்திசாலித்தனமிக்க டேட்டாதான் புதிய பெட்ரோலாகும். நான்காவது தொழிற்புரட்சிக்கு அடிப்படையாய் வித்திடப்போவது டேட்டா மற்றும் இணைய இணைப்பே ஆகும். ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தில் நாங்கள் இருக்கிறோம். இணையத்தைப் பயன்படுத்துவதில் 155வது இடத்தில் இருக்கும் இந்தியாவை உலகின் முதல் பத்து நாடுகளுக்குள் நாங்கள் உயர்த்துவோம்" என்கிறார் முகேஷ் அம்பானி.

இந்தியாவின் முதற்பெரும் பணக்காரராய் இவர் மாற ஆயில் விற்பனையே (பெட்ரோலியம்) அடிப்படைக்காரணம் ஆகும். முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் தொழிற்குழு மத்தின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்தான் இந்தியாவிலேயே அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாகும். அதன் லாபம் 2016-17ஆம் ஆண்டில் ரூ.29,901 கோடியாம். ஆனால், பொதுத்துறையில் அதிக லாபம் சம்பாதிக்கும் நிறுவனமான ஐஓசியின் லாபம் அதே ஆண்டில் ரூ.19,106.40 கோடி மட்டும்தானாம். ஓஎன்ஜிசியின் லாபம் ரூ.17,900 கோடி மட்டுமேயாகும். ஆக, டேட்டாதான் எனது புதிய பெட்ரோல் எனும் முகேஷ் அம்பானியின் வார்த்தைக்கு என்ன அர்த்தம்? இனி ஜியோதான் இந்தியாவிலேயே அதிகம் லாபம் சம்பாதிக்கும் நிறுவனமாக மாறப்போகிறது என்பதே அவரது அறிவிப்பின் அர்த்தம்.

வருடத்திற்கு குறைந்தது ரூ.30 ஆயிரம் கோடியாவது அதில் அவர் சம்பாதிக்கப்போகிறார் என அர்த்தம், டேட்டா சேவையை ஒரு வருடம் இலவசமாய் கொடுத்ததன் காரணம் இதுதானா என நீங்கள் நினைப்பது சரிதான். ஆயில் தோண்டி, கோடிகளில் கொள்ளையடித்துக் கொண்டிருந்தவர் இப்போதுடேட்டா எனும் சுரங்கத்தில் கொள்ளை லாபத்தைத் தோண்டியெடுக்கக் கிளம்பியிருக்கிறார்.

டேட்டாவை சுரங்கத்தொழிலுக்கு இணையாகக் கூறுவதும் நாமல்ல. அலைக்கற்றையே இனி புதிய இயற்கை ஆதாரம் ஆகும் எனச் சொல்லுவதும் அம்பானிதான். மாதம் ஒரு ஜிபி டேட்டா பயன்படுத்திக்கொண்டிருந்தவர்கள், இப்போது தினம் ஒரு ஜிபி டேட்டா எனப் பயன்படுத்தத் துவங்கி யிருக்கிறோம். ஒருவரை ஏமாற்றவேண்டும் என்றால், அவருக்குப் பேராசையை ஏற்படுத்தவேண்டும் என்பதுதானே நுகர்விய விற்பனையியலின் விதி.

அம்பானியின் பெரும் திட்டமிடல்

ஆம். ஏனெனில், இலவச டேட்டா எனும் ஜியோவின் வருகைக்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களில் மிக முக்கியமானது, ஆன்-லைன் பொழுதுபோக்குகளுக்கான நேரம் மற்றும் ஆர்வம் அதிகரிப்பாகும். ஏனெனில், அளவற்ற டேட்டா இருக்கையில் அதைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாக்கப்படுகிறது இல்லையா, இந்த பயன்பாட்டு எண்ணம்தான் அம்பானியின் பெரும் திட்டமிடலாகும். இலவசமாய் கிடைப்பதைப் பயன்படுத்தியே தீரவேண்டும் எனப் பேராசை கொள்ள வைப்பது நுகர்வியத்திற்கான பெரும் தந்திரமாகும். அந்தத் தந்திரத்தில் ஏற்கெனவே பெரும் வெற்றியைப் பெற்றுவிட்டவர்தான் முகேஷ் அம்பானி. அடுத்த தலைமுறைத் தொழிற்நுட்பம் என்றொரு வார்த்தையை இவர்கள் தங்களது பெரும் கண்டுபிடிப்பாக வைத்திருக்கிறார்கள். அதாவது, தொழிற்நுட்பத்தை விடவும் இந்த வார்த்தைதான் மிகவும் முக்கியம் ஆகும்.

எனவே, இந்த வார்த்தையைச் சொல்லி, அதனோடு இணைத்து ஒரு பொருளை அறிமுகப்படுத்தினால் போதும், சந்தையில் சக்கைப்போடு போடும் வியாபாரமாய் அது மாறிவிடும். அப்படியான அடுத்த தலைமுறை தொழிற்நுட்பக் கண்டுபிடிப்புகளில், 22 பில்லியன்டாலரை முதலீடு செய்து மொபைல் போன்கள், அதற்கான வன்பொருள் வடிவமைப்பு, பொழுதுபோக்கு மற்றும் தனிப்பயனர் பயன்பாட்டுமென்பொருள்களை வடிவமைக்க இப்போது தீவிரம் காட்டிக்கொண்டிருக்கும் அம்பானி இன்னும் சில மாதங்களில் அது அத்தனையையும் இந்தியச் சந்தையில் இறக்கிவிட்டுவிடுவார். தனது லாபத்தைப் பெருக்க இனி நாடெங்கும் கடை திறக்கவேண்டிய அவசியமோ அல்லது டிவிகளில் விளம்பரம் கொடுத்து கோடிகளைச் செலவழிக்க வேண்டிய அவசியமோ அவருக்கு ஏற்படப்போவதில்லை.

எப்படி என்கிறீர்களா?

இப்போது இலவச போனை அறிவித்து, எனது ஜியோ போனை டிவியோடு இணைக்கலாம் எனச்சொல்லும் இவர், நாளையே ஜியோ டிவி தயாரிப்பில் இறங்கினால் என்னாகும் என யோசித்துப் பாருங்கள். ஒரு பெரும் உலகம் உங்கள் கண்முன்னால் விரிந்துகொண்டே போவதைக் காணலாம். கொஞ்சம் தலையை உயர்த்திப் பாருங்கள், அந்த உலகம் அம்பானியின் காலடியில் கிடப்பதையும் உங்கள் கண்ணால் நீங்களே காணலாம்.ஒரு லட்சம் டிவியையும், போனையும் விற்பதற்கே விதவிதமான தந்திரங்களை சாம்சங்கும், சோனியும் கையாளவேண்டிய நேரமிது. ஆனால், போனை இலவசமாய் கொடுத்த பின்பு, எந்தத் தந்திரமும் இல்லாமல், குறைந்த பட்சம் ஒரு ஐந்து கோடி டிவியாவது உத்தரவாதமாய் விற்பனையாகும் என்ற சூழலில் ஒரு எல் இ டி டிவியை ஐந்தாயிரம் ரூபாய்க்குத் தந்து அதோடு சேர்த்து, ஜியோ வைபை வசதியும் அளிக்க அம்பானியால் முடியும் அல்லவா?

அம்பானி ஏன் இலவசமாய் அள்ளி வழங்குகிறார்?

சரி, ஏனிந்த ஜியோ வைபை, ஜியோ டேட்டா மற்றும் ஜியோதரைவழி இணைப்புகள் என எல்லாருக்கும் வழங்குகிறார்? அதன் மூலம் அளவற்ற டேட்டாவையும் ஏன் அள்ளி வழங்குகிறார் அம்பானி? வெறும் அவுட்கோயிங் கால்கள் வசதிகளுக்காக நமக்கு டேட்டா வசதியை வாரி வழங்க அம்பானி ஒன்றும் மக்கள் சேவகர் அல்லவே. புத்திசாலித் தனமான டேட்டா என்று அவர் சொல்லும் வார்த்தையையும் சேர்த்துப்பார்த்தால், மொபைல் பயன்பாடுகளைத்தான் (APPLICATIONS) அப்படிச் சொல்லுகிறார் என்று நிச்சயம் எளிதில் புரியும்.

அதாவது, ஜியோசாட் தான் அதில் இருக்கும். வாட்ஸ் அப் இருக்காது. இப்படி ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் மாற்றாக, ஜியோ பயன்பாட்டை படிப்படியாகக் கொண்டு வருவார். இப்போது மாண வர்களுக்கு இலவச வைபை வசதியைத் தரப்போகிறேன் என மத்திய மனிதவள அமைச்சகத்தில் விண்ணப்பித்துவிட்டுக் காத்திருக்கும் அம்பானி அடுத்து என்ன செய்யப் போகிறார் தெரியுமா?கல்விக்கான சில பயன்பாடுகளை வடிவமைப்பார். எந்தவொரு புத்தகத்தையும் மொபைல்வழியாய் படிக்கலாம் என கல்விக்கான தகவல்களை இலவசமாய் அளிக்கத் துவங்கினால் நாம் பயன்படுத்துவோம் தானே. ஆக இறுதியில், மாணவர்களின், பெற்றோர்களின் விருப்பமான அப்ளிகேசன்களாக ஜியோ மாறிய பின்னர், ஜியோதானே எல்லாவாகவும் மாறும்!

அதிலும் ஜியோ சினிமா, ஜியோ பொழுதுபோக்குப் பயன்பாடுகள், ஜியோ விளையாட்டுகள், ஜியோ சந்தை அப்ளிகேசன்ஸ், ஜியோ கல்விப் பயன்பாடுகள், ஜியோ பலசரக்கு, ஜியோ காய்கறி, ஜியோ வைபை மற்றும் ஜியோ டிஜிட்டல் டிவி என அனைத்தும் உள் கட்டமைப்பாக போனிலும், டிவியிலும் ( IN BUILD FACILITIES) தரப்பட்டுள்ளதெனில் என்னாகும் என சிந்தித்துப் பாருங்கள். தங்கு தடையற்ற சந்தை உருவாகப்போகிறது என அம்பானி சொன்னதன் அர்த்தம் புரியும்.ஆக, ஜியோ மொபைல் டேட்டா மற்றும் ஜியோ இணையம் மூலம் நாம் சந்தையில் வாங்கும் பொருள்களின் மொத்த வியா பாரத்தையும், அதாவது இந்தியத் தொழில்துறையின் பெரும் பகுதியைஒரு தனி மனிதரே கட்டுப்படுத்தும் நிலை வரும். உலகம் முழுவதும் பெட்ரோல் விலை குறைந்தாலும், இந்தியாவில் விலை கூடுவதற்கு எப்படி அம்பானி காரணமாக இருக்கிறாரோ, அதைப்போன்று எல்லாப்பொருள்களுக்கும் அவர் தீர்மானித்ததே விலையாக மாறும். என்ன, இன்னும் நம்ப முடியவில்லையா, உங்களால்?

சந்தை இனி எப்படி இருக்கும்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஒரு அறிக்கையை மேற்கோள்காட்டி, அதை மறைமுக ஆசி என்று வர்ணிக்கும் அம்பானி, இந்திய ஐடி துறையைப் பார்த்து என்ன சொல்கிறார் எனில், உள்நாட்டுச் சந்தையில் கவனம் செலுத்துங்கள் என்கிறார். மேலும், இந்திய மென்பொருள் சந்தையை உலகின் பெரும் சந்தையாக மாற்றும் வல்லமை தங்களுக்கு உண்டெனவும் அதில் வெற்றி பெறுவோம் எனவும் கூறுகிறார். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? சந்தை என்பதே, அதாவது விற்பனை என்பதே இனி மென்பொருளில்தான் இருக்கப்போகிறது என்பதே அர்த்தமாகும். உலகிலேயே இந்தியா தான் பெரிய சந்தை. அது மட்டுமல்ல, 25 கோடி மக்கள்நடுத்தர வர்க்கத்தினர் என உலகிலேயே பெரிய வாங்கும் திறனைக் கொண்டோரின் சந்தையாகும் நமது நாடு. அதை அயல்நாட்டு முதலாளிகளுக்கு விட்டுவிட அம்பானி சம்பாதிப்பாரா என்ன? எனவே, வீட்டிற்குத் தேவையான அரிசி முதல் கழிப்பறைத் துடைப்பம்வரையான அத்தனையையும் மென்பொருள் மூலம், அதாவது இ- ஷாப்பிங் மூலம் மக்களை வாங்கச்செய்ய வேண்டும் என்பதே அவரின் அறைகூவலாகும். அது எப்படி முடியும் என்று இப்போது எந்தத் தேசபக்தருக்கும் சந்தேகம் வராது . ஏனெனில், ஏற்கெனவே மூன்று மாற்றங்களுக்கு நாம் படிப்படியாக உட்படுத்தப்பட்டிருக்கிறோம்.

ஆன்-லைன் வர்த்தகம் என்பது அடுத்தத் தலைமுறை வர்த்தகக் கொள்கை என்பதை ஏற்றுக்கொண்டுவிட்டபடியால், இயன்றவரை ஆன்- லைனில் வாங்க ஆரம்பித்துவிட்டோம்.

பண மதிப்பிழப்பு காரணமாக, அடுத்த தலைமுறைப் பரிவர்த்தனை என்ற பெயரி ல் ஜியோ மணி, பேடி எம் என பதிவிறக்கம் செய்து பரிவர்த்தனையை பழக ஆரம்பித்துவிட்டோம். பிட் காயின் என்று சொல்லப்படும் பரிவர்த்தனையும் இனி வரும். ஆக, மொத்தச் சம்பளத்தையும் நாம் கையில் வாங்கப்போவதில்லை. மொபைலில் தான் விரைவில் வாங்கிக்கொள்ளப் போகிறோம்.

ஜிஎஸ்டி வரி என்ற பெயரில் சிறு, குறு தொழில் மற்றும் வர்த்தக ர்களை கொன்றொழிக்கும் வேலையை அரசே துவங்கிவிட்டது. முதற்கட்டமாக, பெரும் நிறுவனங்கள் மட்டும் மிஞ்சி நிற்கப்போகும் இன்றைய சந்தையானது, அதன் அடுத்த கட்டமாக மொபைல்போன் சந்தையாக மாறிவிடும். வேலைவாய்ப்பு என்பது டெலிவரியில் மட்டும்தான் பெருகப்போகிறது என்பதால் எப்படி டெலிவரி செய்வது என்பதற்கான பயிற்சிவகுப்புகளையும் பாஜக நடத்தினாலும் நடத்தலாம்.

உங்கள் நேரத்தையும், விருப்பங்களையும், பொழுதுபோக்கு களையும், ஷாப்பிங்கையும் மொத்தமாய் களவாடவோ, தீர்மானிக்கவோ ஒருவரால் மட்டுமே இனி முடியும் எனில், அது அம்பானியால் மட்டுமே முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்களின் கைவிரல் மற்றும் கண்விழிப் பார்வை பதிக்கப்பட்ட ஆதார் முதல் உங்களின் அத்தனை விபரங்களையும் தனது பிக் டேட்டாவில் வைத்திருக்கும் அம்பானிதான், உங்கள் குடும்பத்தின் தலைவிதியை தீர்மானிப்பவராய் இருப்பார் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

நவீன பண்ணையடிமைகள்

ஒரு நாடு, ஒரு வரி, ஒரே சந்தை என்பது எந்தத் தடையும் இல்லாத 130 கோடி மக்களைக் கொண்ட எல்லையற்ற சந்தையை உருவாக்கும். எந்தவிதமான தொழில், வர்த்தகம், வியாபாரமாய் இருந்தாலும் சரி அவற்றின் அடிப்படை விதிகள் அனைத்தையும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டியும் என்றென்றும் மாற்றியமைக்க வல்லதாகும் என அனில் அம்பானியும், அடுத்த நூற்றாண்டிற்கான பெரும் தொழிற்நுட்பம் மொபைல் போன் தான், எனவே உள்நாட்டுச் சந்தையில் கவனம் செலுத்துவோம் என முகேஷ் அம்பானியும் தங்களுக்கான ஆதாயம் இல்லாமல் சொல்லுவார்களா என்ன?

பண்ணையடிமை முறை கேள்விப்பட்டதுண்டா நீங்கள்? அதாவது, ஒரு முறை வாங்கிய கடனுக்காக தலைமுறை தலைமுறையாக உழைத்துக் கடனைக் கட்டும் கொத்தடிமை முறையே பண்ணையடிமை முறையாகும். அது சாதியோடு கட்டப்பட்டதாகும். அதைப்போன்றதே நமது புதிய நாகரிக வாழ்வுமுறையும். வாங்கிய சம்பளத்தை மொத்தமும் அம்பானியிடம் கொடுக்கப்போகிறோம். அவர் நமக்குக் கடன் அளிப்பார். அந்தக் கடனை வைத்துக்கொண்டு நாம் கார் வாங்கிக்கொள்ளலாம். நகைகள் வாங்கிக்கொள்ளலாம்.

அரிசி, பருப்பு, நீர் என எல்லாம் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் ஒரே நிபந்தனை, அவரிடம் மட்டும்தான் நாம் அனைத்தையும் வாங்கவேண்டும். ஏனெனில், அவரே இந்தியாவின் பெரும் வியாபாரியாய் இருப்பார். ஆக, கொடுத்தக் கடனை, அவரே பிடுங்கிக்கொள்வார். நாம் என்ன செய்யவேண்டும்? சம்பளத்தை அவரது கணக்கோடு இணைத்துவிட்டால் போதும். அவர் நமக்கு சோறு போடுவார். பண்ணையடிமைக்கும், மாதத்தவணை கட்டுதலுக்கும் என்ன வேறுபாடு?மோடி புகைப்படத்தை ஏன் அம்பானி தனது விளம்பரத்தில் போட்டார் என்பதும், அமெரிக்காவே டிஜிட்டல் அமெரிக்கா என அறிவிக்காதபோது, முக்கால்வாசி மக்களுக்கு இணைய வசதியே இல்லாத நாட்டில், டிஜிட்டல் இந்தியா என மோடி அறிவித்ததும் இப்போது புரிகிறது அல்லவா?

சரணடைவது மட்டுமே இந்த ஆட்டத்தின் விதி

ஆட்டத்தையே மாற்றியமைப்பவன் என்று இந்தியத் தொழில்துறையினரால் வர்ணிக்கப்படும் அம்பானி ஒரு துறை யினுள் நுழைந்துவிட்டால் போதும், அங்கே ஏற்கெனவே ஆடிக்கொண்டி ருக்கும் அத்தனை பேரையும் அடித்து வீழ்த்திவிடுவார் என்பதே தொழில்துறையினரின் அனுபவமாகும். யாராய் இருந்தாலும் சரி அவர்களின் நிறுவனத்தை அம்பானியோடு இணைப்பது அல்லது தொழிலை விட்டே வெளியேறுவது என்பதுதான் அவர்களுக்கிருக்கும் ஒரே வாய்ப்பாகும். எனவே, இப்போது மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வேறு வழியே இல்லை.

"12 பெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இருந்த இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், அவை 5 நிறுவனங்களாக சுருங்கிப்போயுள்ளன. மூன்று அல்லது நான்கு நிறுவனங்கள் மட்டுமே ஜியோவுடன் இனி இப்போட்டியில் ஈடுபடமுடியும், மற்றவர்கள் இணைத்துவிட்டுச் செல்லவேண்டும் அல்லது தொழிலைவிட்டே வெளியேறவேண்டும், வேறுவழியே இல்லை"இப்படிச் சொல்லும் ராஜன் மத்தேயு யார் தெரியுமா?இந்திய தொலைபேசி ஆப்ரேட்டர்கள் அமைப்பின் தலைமை நிர்வாக இயக்குநர் ஆவார் இவர். இந்தியத் தொலைபேசி ஒழுங்கு முறை ஆணையத்துக்கு வெளிப்படையாய் இவர் எழுதியுள்ள கடிதத்தில் ஜியோவைப் பற்றி என்ன எழுதியுள்ளார் தெரியுமா? "பின்வாசற்கதவு வழியாக வரும் நிறுவனம் ஜியோ" என்கிறார்.

பிஎஸ்என்எல் என்னாகும்?

விற்பனைக்குத் தயாராய் இருக்கிறதென டாடாவே அறிவித்துவிட்ட பின்பு, மற்ற நிறுவனங்கள் எல்லாம் எம்மாத்திரம்? ஏர்டெல்லின் நிகர லாபம் 2017-18 ஆம் முதல் காலாண்டில், வெறும் ரூ.367 கோடியாம், அதாவது லாபம் கடந்த ஆண்டைவிட 75 சதவீதம் குறைந்துள்ளதாம். அப்படியெனில், தரைவழி இணைப்புகளையும் ஜியோ கொடுக்க ஆரம்பித்த பின்னர் இந்தியாவின் மூத்த ஆனால் லாபம் குறைந்த, ஐந்தாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் என்னாகும்? ஜியோ போனையே டிவியோடு இணைக்கலாம் எனில், ஜியோ வைபை கொண்டு பல கம்யூட்டர்களையும் இணைக்கலாம் எனில், பிஎஸ்என்எல் இணைய வசதியால் தாக்குப்பிடிக்க முடியுமா? படிப்படியாக பங்குகளை விற்பது என அரசே முடிவெடுத்துவிட்டதால், ஒரு கட்டத்தில் அரசின் கட்டுப்பாடே இல்லாத துறையாக பிஎஸ்என்எல் மாறிவிடும். ஆக, ஏற்கெனவே ஐந்தாவதாய் உள்ள நிறுவனம் அப்புறம் காணாமல் போகவேண்டியதுதான். எப்படியோ, உலகத்தின் இரண்டாவது மிகப்பெரும் தொலைத்தொடர்பு வட்டமான இந்தியத் தொலைத்தொடர்பு வட்டம் இனி அம்பானியின் வசமாகப்போகிறது.

அப்படியெனில், டிஜிட்டல் இந்தியா யாரின் கட்டுப்பாட்டில் இருக்கும்? அம்பானியின் கைகளில்தான் இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ. ஆகவே தான், தனது வியாபார அமைப்பிற்குள் அனைத்து மக்களையும் உள்ளடக்கிவிடவேண்டும் என்பதால் இலவச போன் அளிக்கும் திட்டத்தை வரும் ஆகஸ்டில் துவங்கப்போகிறார் அம்பானி. இது அம்பானியின் சாதாரணத் திட்டமிடல் அல்ல. ஏனெனில், உலக மொபைல் காங்கிரசில் பங்கேற்ற, எரிக்சன் நிறுவனத்தின் தலைமைத் தொழிற்நுட்ப அலுவலர் உல்ப் எவால்ட்சன் அங்கு சொன்ன வார்த்தைகள்; "தொலைத்தொடர்பு என்பது புதிய எண்ணெய்யைப் போல்" என்பதாகும். தொலைத்தொடர்பு தொழில் அமைப்பின் சிஇஒ ஸ்காட் பெல்ச்சர் இன்னும் ஒரு படி மேலே போய் என்ன சொல்கிறார் தெரியுமா? "அலைக்கற்றை தான் புதிய ஆயில், புதிய நீர்" என்கிறார்.

அதாவது, ஆயிலைப் போல லாபம் கொழிக்கும் என்பதால், நீர் வியாபாரத்துக்கும் இப்படித்தான் திட்டமிட்டோம். இப்போது காசு கொடுத்து நீர் வாங்க வைத்துவிட்டோம். அதில் லாபம் சம்பாதிப்பதைப்போல் அலைக்கற்றையிலும் லாபம் சம்பாதிப்போம் என்கிறார். இதையெல்லாம் தெரிந்து 2010லேயே இன்போ டெல் தொலைத்தொடர்பு நிறுவனத்தை விலைக்கு வாங்கி தனது ஆட்டத்தைத் துவங்கி யிருக்கிறார் அம்பானி. 

ஆனால், வருமானம் இல்லை என்று சொல்லி, வரி மேல் வரி விதி த்துக் கொள்ளையடிக்கும் மோடி அரசோ, பிஎஸ்என்எல்லின் லாபத்தைப் பெருக்கும் வழிமுறைகளைக் கண்டறியாது, உள்ளதையும் கெடுக்கப் பார்க்கிறது.மோடியை தேசபக்தர் எனச்சொல்லு வதற்கு உங்கள் மனம் சம்மதிக்கிறதா?

Image result for theekkathir