பிஎஸ்என்எல் பிராண்ட் பேண்ட் சேவை தமிழ்நாடு முழுவதும் கடுமையான வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டதால் பெரும்பாலான சந்தாதாரர்களின் இணையச்சேவை ஜூலை 26 விடியற்காலையிலிருந்து முடக்கப்பட்டது. இப்பாதிப்பிலிருந்து மீட்டெடுத்து மீண்டும் பிராட்பேண்ட் சேவையை புதுப்பித்து அதிவேக இணையச் சேவையை வழங்குவதற்குரிய தொழில்நுட்ப பணிகளை தமிழ்நாடு முழுவதும் அந்தந்த தொலைத் தொடர்பு மாவட்டங்களில் பணியாற்றும் பிஎஸ்என்எல் பொறியாளர்கள் திறம்பட செய்தனர்.
சென்னை, கோவையிலுள்ள மின்னணு கணினி பொறியாளர்கள் பலர் இது சந்தேகமில்லாமல் ஒரு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வைரஸ் கட்டளை தாக்குதல்தான் என்றனர்.சமீபகாலமாக இந்திய தொலைத்தொடர்பு துறையில் கடுமையான போட்டி நிலவுகிறது. ஏகபோகமாக யார் மாறுவது என்ற டேட்டா மற்றும் வாய்ஸ் பனிப்போர் நடைபெற்று கொண்டிருக்கும் இச்சமயத்தில் இச்சவாலை நேருக்கு நேர் நம்பகத்தன்மையுடன் திறம்பட பிஎஸ்என்எல் நிறுவனம் சந்தித்து வருகிறது.
நேரிடையான உயிரோட்டமுள்ள தொடர்பும் தரமான சேவையின் காரணமாக பிஎஸ்என்எல்-க்கு தரைவழி சந்தாதாரர்கள் மற்றும் சிம் (மொபைல்) சந்தாதாரர்கள் பெருகி வருகிறார்கள். பிஎஸ்என்எல்- பிராண்ட்டின் உண்மையான வேகம் மற்றும் திட்ட கட்டணங்கள் இந்திய வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்து அதன் சந்தாதாரர் தளம் விரிவடைந்து வருகிறது. இதை சகித்துக்கொள்ள முடியாத சக்திகளின் திட்டமிட்ட தாக்குதல்தான் இது என பல மின்னணு கணினி மற்றும் இணைய நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இந்த வைரஸ் கட்டளைகள் வாடிக்கையாளரின் தகவல் மாற்றி (பிராண்ட் பேண்ட் மோடம்) சாதனத்தின் மென்பொருளுக்குள் ஊடுருவி சிதைத்து இணையத்தொடர்பு கொள்ள முடியாமல் தடுத்து விடுகிறது. இது பற்றி பிஎஸ்என்எல்-இன் தஞ்சாவூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தின் பொது மேலாளர் வினோத்- அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த பாதிப்பு சந்தேகமின்றி இது ஒரு உளவு வைரஸ் மூலமான தாக்குதல் தான் என்றார். அவர் மேலும், எங்கள் பொறியாளர்கள் மிகக்குறுகிய நேரத்தில் பாதிக்கப்பட்ட தகவல் மாற்றி சாதனத்தை மறு அமைப்பு ( ரீசெட்) செய்து சரி செய்து விடுவார்கள் . இந்த பணி மாநிலம் முழுவதும் இப்போது நி்றைவேற்றப்பட்டிருக்கிறது என்றார். சமமில்லாத வணிக பேராசைக்கு தனியாரை அனுமதித்தால் மக்களுக்கு இந்த பாதிப்புகள் ஏற்படும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்தான்.
- சுஜித் அச்சுக்குட்டன்