Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, August 22, 2017

இன்று வங்கி வேலைநிறுத்தம்,ஏன்?


 அனைத்து வங்கிகளின் கணக்கிடப்படாத வட்டியை சேர்த்து வராக் கடன் சுமார் 11 லட்சம் கோடி ரூபாய். இதில் 88 சதவீதம் வராக் கடன் 5 கோடிக்கு மேல் கடன் பெற்றவர் களால் உருவானது. தற்போது ரிசர்வ்வங்கி வெளி யிட்டுள்ள 12 பெரிய கம்பெனிகளின் வராக் கடன் மட்டும் ரூ.2.53 லட்சம் கோடி.



மொத்த வராக்கடனில் 88 சதவீத வராக்கடனை உருவாக்கியுள்ள பெருநிறுவனங்களிடமிருந்து வராக்கடனை முழுமையாக வசூல் செய்ய வேண்டும்என்றும் அவற்றை எக்காரணம் கொண்டும் தள்ளுபடிசெய்யக் கூடாது என்றும் வலியுறுத்தி இன்று (ஆகஸ்ட் 22 ) பத்து லட்சம் வங்கி ஊழியர்களும் அதிகாரிகளும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்தியாவில் 5 அல்லது 6 வங்கிகள் இருந்தால் போதும்!

பொதுத்துறை வங்கிகள் ஒன்றோடொன்று இணைக்கப்படும்!

ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.5000/- தேவை! இல்லையென்றால் மாதம்ரூ.100 அபராதம்!

வங்கிகளில் ஜூலை 1ஆம் தேதி முதல் சேவைக் கட்டணம் அதிகரிப்பு!

வங்கிகளின் சேமிப்பு கணக்கிற்கு வட்டி குறைப்பு!

மறுபுறம் பெரு முதலாளிகளுக்கு ரூ.81,000 கோடி வராக் கடன் தள்ளுபடி!

சிறிய வங்கிகள், பேமண்ட் வங்கிகள் துவங்க தனியாருக்கு அனுமதி!

வராக் கடன் அதிகரிப்பால் வங்கிகள் பெரும் நஷ்டம்!- பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் கடந்த 3 ஆண்டுகளாக தினசரி பத்திரிகைகளில் வெளிவருகின்ற செய்திகள்தாம் இவை. ஏன் இந்த அறிவிப்புகள்?

பொதுத்துறை வங்கிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற தனது தணியாத தாகத்தைதீர்த்துக் கொள்ள மோடி தலைமையிலான அரசுமேற்கொண்டிருக்கும் கொள்கையின் விளைவாகத்தான் இத்தகைய அறிவிப்புகள்.


பொதுத்துறை வங்கிகள் காணாமல் போகும்

கடந்த ஜூன் 14ஆம் தேதி மத்திய நிதித் தீர்ப்பாயம் மற்றும் வைப்புக் காப்பீடு (Financial Resolution and Deposit Insurance FRDI) மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஆகஸ்ட் 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தால் பொதுத்துறை வங்கிகள் காணாமல் போகும். வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கு பாதுகாப்பு இருக்காது. ஊழியர்-அதிகாரிகளின் பணிப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். FRDI மசோதா ஒரு நிதி தீர்ப்பாய ஆணையம் (Financial

Resolution Commission) உருவாக வழிவகை செய்கிறது. இந்த ஆணையத்தில் இயக்குநர் குழுஅமைக்கப்பட்டு அதற்கு உச்சபட்ச அதிகாரங்கள் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஆணையம் வங்கிகளின் (Viability) நிதி ஆரோக்கிய நிலைமையை பரிசீலித்து முடிவெடுக்கும். வங்கிகளை/இன்சூரன்ஸ் நிறுவனங்களை தொடர்ந்து நடத்துவதற்கு ஆபத்து என்று இந்த இயக்குநர் குழு கருதினால், நிதித்துறைநிறுவனங்களை வேறொரு நிதித்துறை நிறுவனத்தோடு இணைக்கவும் அல்லது திவால் என அறிவித்து இழுத்து மூடவும் இந்த இயக்குநர் குழுவிற்கு உரிமை உண்டு. அந்த நிறுவனத்தின் ஊழியர்/அதிகாரிகளை பணியிலிருந்து வெளியே அனுப்பவும் இதற்கு அதிகாரம் உண்டு.

பெருகி வரும் வராக் கடன்

அனைத்து வங்கிகளின் கணக்கிடப்படாத வட்டியை சேர்த்து வராக் கடன் சுமார் 11 லட்சம் கோடிரூபாய். இதில் 88 சதவீதம் வராக் கடன் 5 கோடிக்கு மேல்கடன் பெற்றவர்களால் உருவானது. தற்போது ரிசர்வ்வங்கி வெளியிட்டுள்ள 12 பெரிய கம்பெனிகளின் வராக் கடன் மட்டும் ரூ.2.53 லட்சம் கோடி. இந்த கடன்கள்அனைத்தும் வங்கிகளின் உயர்மட்ட இயக்குநர் குழுவால் வழங்கப்பட்டவை. கடனைத் திருப்பி செலுத்தாதவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்ற வேண்டும்;

மேலும் இந்தகடன்களை அனுமதித்த வங்கிகளின் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட இயக்குநர் குழு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்ய மத்திய அரசு தயாராக இல்லை. மாறாக, இந்த பெருநிறுவனங்களின் வராக் கடனை பல லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யவும், அதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் வங்கி உயர் அதிகாரிகளை லஞ்சத் தடுப்பு சட்டத்திலிருந்து விலக்களிக்கவும் ஆலோசித்து வருகிறது மத்திய அரசு.உலகின் எல்லா நாடுகளும் கைவிட்ட, எந்தப்பலனுமளிக்காத ‘பண மதிப்பு நீக்க’ (Demonetisation) நடவடிக்கையை பிரதமர் கடந்த வருடம் நவம்பர் மாதம் அறிவித்தார்.

விளைவு? வங்கிகளுக்கு ரூ.30,000 கோடி தான் செலவு; 4 லட்சம் சிறு/குறுதொழில்கள் முடக்கம்; 4 கோடிப் பேருக்கு வேலைஇழப்பு; கறுப்புப் பணமும் ஒழியவில்லை; கள்ளநோட்டும் கண்டுபிடிக்கப்படவில்லை; ஊழலும் ஒழியவில்லை; தீவிரவாத இயக்கத்திற்கு செல்லும் பணமும்கட்டுப்படுத்தப்படவில்லை. இந்த கூடுதல் செலவை ஈடுகட்டத்தான் மக்கள் தலையில் சுமையேற்றவும், வங்கி சேவை வரி உயர்வு, சேமிப்பில் குறைந்தபட்ச தொகை அதிகரிப்பு, சேமிப்புக்கு வட்டி குறைப்பு உள்ளிட்ட அறிவிப்புகள்.

பொதுத்துறை முடக்கம்; தனியாருக்கு தாராளம்

பொதுத்துறை வங்கிகளுக்கு தேவையான மூலதனம் ரூ.1.80 லட்சம் கோடி என்று சொல்கிறது மத்திய அரசு. அளிக்கப்பட்ட மூலதனமோ வெறும்34,000 கோடி ரூபாய்தான். இரண்டாவது தவணையாக அளிக்கப்பட்ட சுமார் 9,000 கோடி ரூபாய்க்கு11 வங்கிகள் மறுசீரமைப்பு திட்டத்தில் ஊழியர்கள்/அதிகாரிகள் சங்கங்கள் கையெழுத்திட வேண்டுமென்று நிர்ப்பந்திக்கின்றன. இந்த ஒப்பந்தத்தில்,

1.வரும் மூன்று வருடங்களுக்கு புதிய கிளைகள் திறக்கப்படாது.

2. நஷ்டமடைந்த கிளைகள் இழுத்து மூடப்படும்.

3. விவசாயம், சிறு/குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிகமான கடன் வழங்க வேண்டும்; ஆனால், ஊழியர்களின் எண்ணிக்கை இருக்கும் எண்ணிக்கையிலேயே மட்டுப்படுத்தப்படும்.

4. வங்கிகளின் வராக் கடனை சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்திற்கு விற்பதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.

5. தேசிய கம்பெனிச் சட்டத் தீர்ப்பாயத்திற்கு (National Company Law Tribunal) எடுத்துச் செல்லப்படும் பெரு நிறுவனங்களின் கடனுக்காக முழுமையாக ஒதுக்கீடு செய்யப்படும் (அப்படியென்றால் எதுவும் வசூலாக வாய்ப்பில்லை என்று அர்த்தம்).

6. பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசின்பங்குகள் தனியாருக்கு விற்கப்படும்.

-என்பன போன்ற பல மோசமான நிபந்தனைகள் திணிக்கப்படுகின்றன.பொதுத்துறை வங்கிகளுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கும் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தனியார் வங்கிகளுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல், நூற்றுக்கணக்கில் கிளை திறக்கவோ, ஆயிரக்கணக்கான கடைகளை திறக்கவோ அனுமதி வழங்குகின்றன.ஆட்சிப் பொறுப்பில் உள்ள மத்திய அரசாங்கம் பொதுத்துறை வங்கிகளை தனியமார்மயமாக்கவும், முடக்கவும், இழுத்து மூடவுமான மக்கள் விரோதச் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. வங்கித் துறை மட்டுமல்ல, மற்ற துறைகளிலும் இத்தகைய தாக்குதல் தொடர்கிறது.

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை, தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ தனியார்மயமாக்குவதற்கான முயற்சி தீவிரமாக நடைபெறுகிறது. அரசாங்க மருத்துவமனை, ரயில்வே, பாதுகாப்பு, இன்சூரன்ஸ், துறைமுகம், நிலக்கரி சுரங்கம், உருக்கு போன்ற அனைத்து கேந்திரமான அரசுத் துறைகளை தனியார்மயமாக்குவதற்காக தொடர் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.மத்திய அரசு, இந்த முயற்சியில் வெற்றி பெறுமானால், சாதாரண மக்கள் சொல்லொண்ணாத் துயரத்திற்கு உள்ளாவார்கள். இவ்வனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண, இத்தகைய நிலைமைகளுக்கு காரணமாக இருக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த கொள்கைகளை எதிர்த்து ஒன்றுபட்டுபோராடுவதுதான் ஒரே தீர்வு.

அந்த திசை வழியில்தான் பொதுத்துறை நிறுவனஊழியர் அமைப்புகளின் கூட்டமைப்பு (யுஎப்பியு) அறைகூவலுக்கு இணங்க 2017 ஆகஸ்ட் 22 நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.யுஎப்பியு அறைகூவலுக்கு இணங்க 2017 செப்டம்பர் 15 அன்று லட்சக்கணக்கான வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் இணைந்து தலைநகர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட உள்ளனர்.வங்கித் துறையை பாதுகாக்க பல்வேறு போராட்டஇயக்கங்களைக் கண்ட வங்கி ஊழியர் இயக்கம் இந்த புதிய சூழ்நிலையையும் எதிர்கொண்டு வெற்றிச்சரித்திரம் படைக்கும். இந்த தேசபக்த போராட்டத்திற்கு பொதுமக்கள் முழு ஆதரவு நல்க வேண்டும் என்று கோருகிறோம்.வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்! பொதுமக்கள் சேமிப்பை பாதுகாப்போம்! நாட்டின் நலன் காப்போம்!

கட்டுரையாளர் : பொதுச் செயலாளர்,

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்-தமிழ்நாடு,


 Image result for theekkathir