அடக்குமுறைகளை எதிர்கொள்வோம்: ஜாக்டோ-ஜியோ
தமிழகத்தில் உள்ள 10 லட்சம் அரசு ஊழியர்கள் செவ்வாயன்று (ஆக.22) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைந்து 8வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்; அதுவரை 1.1.2016 முதல் 20விழுக்காடு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை, தொகுப்பு, மதிப்பூதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.இதுதொடர்பாக 80 அமைப்புகளை உள்ளடக்கிய ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஜெ.கணேசன் திங்களன்று (ஆக.21) சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது வருமாறு:அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன்காக்கும் வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி ஆக.22 ஆம் தேதி நடக்கும். இதில் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர். 2003ம் ஆண்டு நடைபெற்ற போராட் டத்தில் பணிநீக்கம், 8 மாதம் ஊதியம் பறிப்பு உள்ளிட்ட அடக்குமுறைகள் ஏவப்பட்டது. அதனையே எதிர்கொண்டோம்.
வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் தொகுப்பூதியம் போன்ற நிலைகளில் உள்ள ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தலைமைச் செயலாளர் எச்சரித்துள் ளார். அதனையும் எதிர்கொள் வோம்.அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு, முன்னாள் முதலமைச் சர் ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோருகிறோம். புதிய கோரிக்கை எவற்றையும் எழுப்பவில்லை. கோரிக்கைகளில் உடன்பாடு உள்ள அனைத்து ஊழியர்களும் கலந்து கொள்வார்கள். அரசு அலுவலகங்கள், பள்ளிகள் முடங்கும். ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்துப்பேசி கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் நவ.7 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும்.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். தலைமைச்செயலாளர், நிதித்துறைச் செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர் போன்றோர் கூட்டமைப்பை அழைத்துப் பேசுவதற்கு தயங்குவது ஏன்? வேலை நிறுத் தத்தையொட்டி சென்னையில் டிபிஐ வளாகத்திலும், மாவட் டங்களில் வட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இச்சந்திப்பின் போது தமிழ் நாடு தலைமை செயலக சங்க செயலாளர் கு.வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் மு.அன்பரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஓய்வூதியர்கள் கண்டனம்
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத் தலைவர் நெ.இல.சீதரன், பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக அரசு ஜாக்டோ -ஜியோ தலைவர்களை அழைத்து பேசாமல், தலைமைச்செயலாளர் மூலமாக மிரட்டுகின்ற போக்கை வன்மையாக கண்டிப்பதாகவும், ஆக.22 அன்று நடைபெறும் வேலைநிறுத்தம் முழு வெற்றி பெற அனைத்து வகையான உதவிகளையும் செய்வோம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாக்டோ -ஜியோ போராட்டம் வெற்றி பெற BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்!