Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, August 22, 2017

சென்ட்ரல் ரயில் நிலையம் மக்களிடமிருந்து அபகரிப்பு!


  

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1873ல் தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதன் பின் அரசுடமையாக்கப்பட்டது. 144 ஆண்டு வரலாறுள்ள இந்த ரயில் நிலையத்தை மத்திய பாஜக அரசு கார்ப்பரேட் அதிபதிகளுக்கு ஏலம் விட்டிருக்கிறது. அரசு முன்வைத்திருக்கிற விலை 350 கோடி ரூபாய். ஏல மனுக்கள் (டெண்டர்) திங்களன்று (ஆக.21) திறக்கப்பட்டுள்ளன. எந்த கார்ப்பரேட் வசம் நிலையம் ஒப்படைக்கப்படும் என்பது இனிமேல்தான் தெரியும்.

உடனடியாக கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கப்பட உள்ள 23 நிலையங்களில் இதுவும் ஒன்று. 407 நிலையங்கள் இப்படி தனியார் பாக்கெட்டுகளுக்குள் போகின்றன.நிலையத்தின் மின்சார பராமரிப்பு, தூய்மைப் பராமரிப்பு, வாகனங்கள் நிறுத்தம், பயணியர் ஓய்வறைகள், வர்த்தக நிறுவனங்கள் என அனைத்தும், 2 ஏக்கர் நிலத்துடன் குத்தகைதாரர்களான கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கப்படும். குத்தகை எவ்வளவு காலம் தெரியுமா? 45 ஆண்டுகள்!பிளாட்பாரம் டிக்கெட் விற்பதைக் கூட தங்களிடம் விட்டுவிட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள் கார்ப்பரேட்டுகள். நிலையத்தில் செயல்படும் வர்த்தக நிறுவனங்கள் தங்களது பொருள்களை என்ன விலையில் விற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவும் விதிக்கக்கூடாது என்றும் அவர்கள் வற்புறுத்துகிறார்கள்.

உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையம் அல்லவா, ஆகவே விமான நிலைய வளாகத்துக்கு ஈடாக சென்ட்ரல் பிளாட்பார கடைகளிலும் பொருள்களின் விலை மேலே பறக்கும். இந்த இரண்டு ஏக்கர் பரப்புக்குள் அவர்கள் தனி வர்த்தக வளாகமே (மால்) கட்டிக்கொள்ளலாம். அது போதாதென்று அவர்கள் 10 ஏக்கர் நிலம் கேட்கிறார்கள்.மூன்றரை லட்சம் பயணிகள் பயன்படுத்தும் சென்ட்ரல் உள்ளூர் நிலையம் (மூர்மார்க்கெட் வளாகம்), வெளியூர் வண்டிகளுக்கான சென்ட்ரல் நிலையம் இரண்டுமே முற்றிலுமாக பிடியில் சிக்கும். கடை வைத்திருப்போர் இனிமேல் ரயில்வே நிர்வாகத்திற்கு உரிமத் தொகை செலுத்த வேண்டியதில்லை. கார்ப்பரேட் நிறுவன நிர்வாகத்திடம்தான் செலுத்துவார்கள்.

கார்ப்பரேட் நிறுவனம் ரயில்வேக்கு ஆண்டுக் குத்தகை கட்டணம் செலுத்தும்.கேரளத்தின் கண்ணனூர் ரயில் நிலையத்தைக் குத்தகை எடுத்த தனியார் நிறுவனம், ரயில்வேக்கு செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தாமல் நீதிமன்றத்தில் தடை வாங்கிக்கொண்டு, தனது வசூல்களை மட்டும் நடத்திக்கொண்டிருக்கிறது. அதே நிலைமைதான் நாளை சென்ட்ரலுக்கும் வரும். நாட்டு மக்களின் நிறுவனமான ரயில்வேக்கு வர வேண்டிய வருமானம் பறிபோகும். அதே மக்கள் ரயில் நிலையத்திற்குள் டீ, காபி உள்ளிட்ட அனைத்திற்கும் பல மடங்கு (விலை) கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.


ரயில் நிலையம் என்றால் ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதுதானே நியாயம்? 1873ல் உருவான சென்ட்ரல் ரயில் நிலையம், வெள்ளைக்கார தனியாரிடமிருந்ததை அன்றைய வெள்ளையர் அரசு அரசுடமையாக்கியது.

இன்றைய சுதேசி அரசோ தனியார் கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்கிறது!ரயில் நிலையம் மட்டுமல்ல, மத்திய பாஜக அரசு, தற்போது இருக்கும் தண்டவாளங்களிலேயே கார்ப்பரேட்டுகள் சரக்கு வண்டிகளையும் பயணிகள் வண்டிகளையும் இயக்க அனுமதிப்பதென முடிவு செய்துள்ளது. 


அதற்காக ரயில் வளர்ச்சி ஆணையம் ஒன்று இந்த மாதம் 31க்குள் அமைக்கப்படுமாம். அது அம்பானிகளையும், அதானிகளையும், அல்ஸ்தோம்களையும் இதே தண்டவாளங்களில் தங்களுடைய ரயில்களை ஓட்டிக்கொள்ள அனுமதிக்கும். இதுவரை அரசாங்க ரயில்வே ஓட்டுநர்களும் பயணச் சீட்டு விற்பனை ஊழியர்களும் பரிசோதகர்களும் இருந்த இடங்களுக்குத் தனியார் ஓட்டுநர்களும், டிக்கெட் விற்பனையாளர்களும் பரிசோதகர்களும் வந்துவிடுவார்கள். ரயில்வே தொழிலாளர்கள் கொத்துக் கொத்தாக உபரித் தொழிலாளர்களாக மாற்றப்படுவார்கள். அவர்களது ஊதியமும் ஓய்வூதியமும் பிரச்சனையாக்கப்படும். ரயில்வே வேலைவாய்ப்புக் கதவுகள் அடைக்கப்படும்.

தலித்துகள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பறிமுதலாகும். தனியார் ரயில்களின் ஒப்பந்த ஊழியர்கள் மிகக்குறைந்த ஊதியத்தில் சட்டப் பாதுகாப்புகள் ஏதுமின்றி வேலை செய்ய வேண்டியிருக்கும். ரயில் கட்டண மானியங்கள் ஒழிக்கப்படும். அடக்க விலைக்கு கட்டணம் என்ற பெயரில் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்படும்.இப்போது பயணச் செலவில் 53 விழுக்காடுதான் பயணச் சீட்டுக் கட்டணமாக உள்ளது. 47 விழுக்காடு மானியமாகத் தரப்படுகிறது. தனியார் மயமானால் மானியம் மாயமாகி கட்டணம் இரட்டிப்பாகும். அதிக கட்டண வசூலுக்காக ‘சுவிதா’ வண்டிகள்தான் எங்கும் ஓடும். லாபம் இல்லை எனக்கூறி, தற்போது ஓடிக்கொண்டிருக்கிற, எளிய மக்களின் பயணத்திற்குப் பேருதவியாக இருக்கிற 470 ‘பாசஞ்சர்’ வண்டிகளின் சக்கரங்கள் நிறுத்தப்படும்.

ஆனால் அதே கார்ப்பரேட்டுகள் தங்களது வண்டிகளில் கோளாறுகள் ஏற்பட்டால் ரயில்வே துறையின் பணிமனைகளில் பழுதுபார்த்துக் கொள்வார்களாம்! எதிர்காலத்தில் சென்னையின் ரயில்பெட்டித் தொழிற்சாலை (ஐ.சி.எப். ) உட்பட இன்ஜின், ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலைகளை தனியாரிடம் விட்டுவிட மோடி அரசு முடிவெடுத்துள்ளது.இன்று ஏற்கெனவே 7 லட்சம் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் ரயில்வேயில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமோ சட்டப் பாதுகாப்புகளோ கிடையாது. துறை சார்ந்த ஊழியர்களுக்கோ ஓய்வூதியம் தனியார்மயமாக்கப்பட்டுவிட்டது, புதிய ஓய்வூதியச் சட்டத்தின் மூலம். 6 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் புதிய ஓய்வூதியத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டனர்.

ரயில்வே தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய உயர்வு, பல்வேறு படிகள் நிலுவை ஆகியவற்றை வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வீட்டு வாடகைப்படியை வெட்டிக் குறைத்துவிட்டது.ஏர் இந்தியா நட்டத்தில் ஓட வழி செய்து, பின்னர் மொத்தமாகத் தனியாரிடம் விடப்படுவது போல் பாரம்பரியமிக்க இந்திய ரயில்வே நட்டத்தில் ஓட வழி செய்யப்பட்டுள்ளது. பின்னர் மொத்த ரயில்வேயும் தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டும்.மக்களின் உடைமையை அபகரிக்கிற இந்த சென்ட்ரல் ரயில் நிலைய தனியார்மயத்துக்கு எதிராக ரயில்வே தொழிற்சங்கங்களும் மக்களும் இணைந்த போராட்டம் இன்றைய தேவையாகியுள்ளது. அந்தக் கூட்டுப் போராட்டத்திற்குத் திட்டமிட மாநில கருத்தரங்கம் புதனன்று (ஆக.23), சென்னையில் சென்ட்ரல் அருகே உள்ள மெமோரியல் அரங்கில் நடைபெற உள்ளது.

காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்தக் கருத்தரங்கை, சிஐடியு பொதுச்செயலாளரும் டி.ஆர்.இ.யு. தலைவருமான ஜி. சுகுமாறன் தலைமையில் சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே. பத்மநாபன் தொடங்கி வைக்கிறார். சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச்செயலாளர் எம். கிருஷ்ணன் இருவரும் சிறப்புரையாற்றுகிறார்கள். ரயில்வே மத்திய சங்கங்கள், ஓட்டுநர்கள், நிலைய அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு ரயில்வே துறை சார்ந்த சங்கங்களின் தலைவர்கள் உரையாற்றுகிறார்கள். ஆம், இது சென்ட்ரல் ரயில் நிலையத்தை மட்டுமல்ல, ரயில்வேயையே தனியார் யாக நெருப்பில் தாரை வார்ப்பதைத் தடுப்பதற்கான களம்.





ஆர். இளங்கோவன்

கட்டுரையாளர் டிஆர்இயு மத்திய சங்க உதவித்தலைவர்


 Image result for theekkathir