ஜாக்டோ ஜியோ தலைவர்கள் அறிவிப்பு
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதாக செப்.6ந் தேதிக்குள் தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிக்கவில்லையெனில் திட்டமிட்டபடி செப்.7ந் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கும் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் ஜாக்டோ-ஜியோ தலைவர்களுடன் திங்களன்று (செப்.4) தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். நிதித்துறைச் செயலாளர் சண்முகம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர் சொர்ணா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. ஆனால், முடிவு எதுவும் எட்டப்படவில்லை.இதனையடுத்து ஜாக்டோ-ஜியோ தலைவர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். பின்னர் இக்கூட்டத்தின் முடிவுகளை விளக்கி செய்தியாளர்களிடம் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஜெ.கணேசன் கூறியது வருமாறு:-
அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஒருமித்து வலியுறுத்தினோம். இதுகுறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி அறிவிப்பதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கான களப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.புதிய பென்சன் திட்டம் ரத்து குறித்து தமிழக அரசு முடிவான, தெளிவான அறிவிப்பை செப்.6 ஆம் தேதிக்குள் வெளியிட்டால், அன்று மாலையே ஜாக்டோ-ஜியோ கூடி வேலைநிறுத்தம் குறித்து பரிசீலிக்கும்.
ஊழியர்களுக்கு சாதகமாக அறிவிக்காத நிலையில் காலவரையற்ற வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி தொடங்கும்.அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஊதியமாற்றத்திற்கான குழுவின் அறிக்கையை 30-09-2017க்குள் பெற்று திருத்தப்பட்ட ஊதிய விகிதம் நடைமுறைப்படுத்தப்படும். ஒருவேளை திருத்திய ஊதிய விகிதம் அறிவிக்க காலதாமதம் ஏற்பட்டால் 20 விழுக்காடு இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர். அதனை ஜாக்டோ ஜியோ முழு மனதோடு வரவேற்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.