Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, January 22, 2018

கட்டண உயர்வை தவிர்த்திருக்க முடியும்


தமிழக அரசை விளாசுகிறார் அ.சவுந்தரராசன்


போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் தரவேண்டியிருக்கிறது என்பது உள்ளிட்ட சொத்தையான காரணங்களை முன்வைத்து, வரலாறு காணாத அளவிற்கு பஸ் கட்டண உயர்வை அமலாக்கி, தமிழக மக்களை துயரத்தின் - கொதிப்பின் உச்சத்திற்கு தள்ளியிருக்கிற அதிமுக அரசை கடுமையாக விமர்சிக்கிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டத்தின் கள நாயகனாக திகழ்ந்தவரும், சிஐடியு மாநிலத் தலைவருமான அ.சவுந்தரராசன்.“தமிழக அரசு போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. 

போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கின்றன என்பதை தொடர்ந்து அரசின் கவனத்திற்கு தொழிற்சங்கங்களும் எடுத்துரைத்து வந்துள்ளன. தமிழக அரசும், நீதிமன்றத்திலேயே போக்குவரத்து கழகங்கள் நிதி நெருக்கடியில் இருக்கிறது என்று தெளிவுபடுத்தி உள்ளது.இந்த நிதி நெருக்கடியை தமிழக அரசு சீர் செய்திருக்க வேண்டும். ஆனால் எங்கிருந்து பணம் எடுத்து இதனை சீர் செய்வது என்ற அடிப்படையிலான கேள்வி எழுகிறது”. எனக்குறிப்பிட்ட அ.சவுந்தரராசன், அதற்கான தீர்வையும் முன்வைக்கிறார்:

இந்தியாவில் எங்குமில்லாத அளவிற்கு தமிழக கிராமப்புற பகுதிகளில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. நல்ல விஷயம் தான். ஆனால், போக்குவரத்துக் கழகங்கள் வருமானமற்ற வழித்தடங்களில் பாதிக்கும் மேற்பட்ட பேருந்துக்களை இயக்கி வருகின்றன. இதனால் போக்குவரத்துக் கழகங்கள் தெரிந்தே பேரிழப்பை சந்திக்கின்றன. ஆகவே, அரசு இதற்கான இழப்பீட்டை சமூக நோக்குடன் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கிட வேண்டும்.

படிக்கும் மாணவர்களின் நலன் கருதி, அவர்களில் சுமார் 30 லட்சம் பேருக்கும் மேல் இலவச பயண வசதி செய்யப்பட்டு வருகிறது. இது தமிழகத்தின் கல்வித் துறையில் பெரும் வளர்ச்சி ஏற்பட மிக முக்கிய காரணியாக அமைந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. இது மிகவும் அவசியமானதாகும். இதற்கான செலவினத்தை போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு தருவதில்லை.

அதிகாரிகளின் அளவுக்கு அதிகமான முறைகேடுகள், ஊழல்கள் போன்ற பல காரணிகளும் நட்டத்திற்கு காரணமாக இருக்கின்றன. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒவ்வொரு ஆண்டும் இந்த தொகை யினை அரசு ஈடுகட்டியிருந்தால் இப்போது இந்த நெருக்கடி நிலை வந்திருக்க வாய்ப்பில்லை. ஏற்கெனவே கடும் வாழ்க்கை நெருக்கடியில் உள்ள ஏழை எளிய மக்கள் மீது இவ்வளவு பெரும் கட்டண சுமையை ஏற்ற வேண்டிய அவசியமும் இருந்திருக்காது.

இந்திய அரசு மூர்க்கத்தனமாக நியாயமற்ற முறையில் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோத கொள்கைகளும் இந்த கட்டண உயர்விற்கு வித்திடுகிறது.

போக்குவரத்துக் கழகங்களுக்கு மாநில அரசு ஆண்டுதோறும் பட்ஜெட்டில் 2 ஆயிரம் கோடியில் இருந்து 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஒதுக்கினால் இந்த கட்டண உயர்வை தவிர்க்கலாம். ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடுகின்ற இந்த அரசுக்கு இது ஒரு பெரிய விஷயமே அல்ல.

போக்குவரத்துக் கழகங்கள் தமிழக பொருளாதார மேம்பாட்டிலும், ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பிற்கும், தனிநபர் சராசரி வருமானத்திற்கும், கல்வி, சுகாதாரம் போன்ற மனிதவள குறியீடுகளுக்கும் அளப்பரிய பங்களிப்பை செய்து வருகிறது. சமூகத்திற்கு போக்குவரத்துக் கழகங்க ளால் கிடைக்கிற இந்த வகையான லாபம் எந்த பண மதிப்பை கொண்டும் அளவிட முடியாது.

எவ்வளவோ சலுகைகளை தருகிற மாநில அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, நாளும் பயணம் செய்கிற இரண்டு கோடி மக்களுக்கு மலிவு கட்டணத்தில் பயண வசதி செய்து கொடுப்பது எந்த வகை யிலும் தவறல்ல. இது ஒரு கட்ட மைப்பு சேவையாகும்.

தொழிற்சங்கங்கள் கடந்த பத்தாண்டுகளாக மாநில அரசை போக்கு வரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டியநிதியினை வழங்க வலியுறுத்தி வருகின்றன. இந்த அரசு எம்எல்ஏக்களுக்கு ஊதியத்தை ஒரு லட்ச மாக உயர்த்தியுள்ளது. மற்ற துறையின

ருக்கும் ஊதிய உயர்வு வழங்கியுள்ளது. உழைக்கின்ற தொழி லாளர்களுக்கு அரைகுறை ஊதிய உயர்வை வழங்கிவிட்டு, கட்டண உயர்வுக்கு காரணமாக இதை காட்டுவது அரசின் தவறான அணுகு முறையாகும்.

அரசின் இந்த பஸ் கட்டண உயர்வு மக்களுக்கு பெரும் சுமையை, நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக, பணிபுரியும் தளங்களுக்கு தினமும் பஸ் பயணத்தை மட்டுமே நம்பி இருக்கும் மக்களை திண்டாட வைத்திருக்கிறது. இந்த பஸ் கட்டண உயர்வு, மக்கள் தலையில் விழுந்த ஓர் பேரிடி என்று தான் சொல்ல வேண்டும்.

எனவே, தமிழக அரசு 60 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரை பஸ் கட்டணம் உயர்த்தியிருப்பதை கைவிட்டு, மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதோடு இனி வரும் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் தனியாக நிதி ஒதுக்கீடு செய்து போக்குவரத்து கழகங்களை மேலும் செழுமைப்படுத்த வேண்டும்.

Image result for theekkathir