Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, January 25, 2018

என் அம்மா ‘காம்ரேட்’ மைதிலி சிவராமன்



எங்கள் குடும்பம் மற்றவரின் குடும்பத்தைபோன்று எப்போதும் இருந்ததில்லை. இதற்கு காரணம் என் அம்மா “காம்ரேட்’ மைதிலி சிவராமன் தான். என் அம்மாவைப் பற்றிய எனது குழந்தைப் பருவ ஞாபகமேஅவரது டைப்ரைட்டரும் என்னைத் தாலாட்டும்அதன் இசையும் தான். என்னைப் பொருத்தவரை அம்மாவின் இயல்பு என்பது கட்டுரைகள்எழுதுவதும், டைப் செய்வதும், செய்தித்தாளிலிருந்து தினமும் குறிப்பெடுப்பதும், பொதுக் கூட்டங்களில் பேசுவதும், வீட்டிற்கு வந்த நண்பர்களுடன் ஆவேசமாக அரசியல் விவாதிப்பதும் தான். சமையல் கரண்டியுடன் அம்மாவை நான் பார்த்ததே இல்லை.எங்கள் வீடு ஒரு திறந்தவெளி. அம்மாவின் இளையத் தோழர்கள் இரவு நேரத்திலும் வீட்டிற்குவருவார்கள். காலையில் தூங்கி எழுந்தவுடன் தான், நான் அவர்களைப் பார்ப்பேன். எங்கள் வீட்டு சோபாவில் தூங்கிக் கொண்டிருப்பார்கள்.

ஒரே குழந்தையான எனக்குப் பல அன்பு அக்காக்களும், அண்ணன்களும்.அம்மா வளர்ந்ததெல்லாம் சென்னை தான்.அம்மாவின் அப்பா சிவராமன் சென்னை மாநகராட்சியில் என்ஜினீயராக பணிபுரிந்ததார். என்பாட்டியால் ஒன்பதாம் வகுப்பு வரை தான் படிக்கமுடிந்தது. அம்மா சென்னையில் பி.ஏ. படித்தபிறகு படிப்புதவி தொகை பெற்று அமெரிக்காவில் முதுகலை பட்டம் பெற்றார். ஐக்கியசபையில் சில ஆண்டுகள் வேலை செய்த பிறகுஇந்தியாவிற்குத் திரும்பினார். கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு தொழிற்சங்கம் மற்றும் மாதர் சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார்.அம்மாவின் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாதர்சங்க ஈடுபாடு எங்கள் வீட்டின் வாசல் வரை தான்என்று ஒருபோதும் இருந்ததில்லை. எனக்கு இரண்டு மூன்று வயது இருக்கும்போது தஞ்சைகீழ்வெண்மணியில் கூலி விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் எரித்துசாம்பலாக்கப்பட்ட சம்பவத்தை அம்மா எனக்குப்பலமுறை சொல்லியிருக்கிறார். பாட்டி எனக்கு இராமாயணம், மகாபாரதம் சொன்ன அதேப் பருவத்தில் தான், அம்மா “பொல்லாத பண்ணையாறு’’ கதையைச் சொன்னார். நமக்கான கதைகள் ஒரு சில கதைகள் தானா? வீரம், அநீதி, அரக்கர்களுக்கு எதிரான போராட்டங்கள் பற்றியகதைகள் பல உண்டு என்று அம்மா எப்போதும்நம்பினார்.இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்தி ஆங்கிலேயரை 1930-இல் எதிர்த்தகல்பனா தத் என்னும் மேற்கு வங்கத்தைச் சார்ந்தவீராங்கனையின் நினைவில் தான் கல்பனா என்றுஅம்மா எனக்குப் பெயரிட்டார்.

சிறுவயதிலிருந்து செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை எனக்கு உருவாக்க வேண்டும் என்று அம்மா மிகவும்விரும்பினார். இதற்காக அம்மாவும், அப்பாவும் செய்தித்தாளிலிருந்து தினமும் சுவாரசியமான இரண்டு செய்திகளையாவது கண்டுபிடித்து “அம்மா நியூஸ்’, “அப்பா நியூஸ்’ என்று படித்துசொல்வார்கள்.அம்மா ஒரு வித்தியாசமான மனுஷி என்பதைஅவர் வெளி உலகில் செய்த வேலை மட்டும்எனக்கு உணர்த்தவில்லை. எந்தக் குடும்பவிசேஷத்துக்கும் அம்மா பட்டு உடுத்தியதில்லை. ஒரு சின்ன தங்க நகைக்கூட அணிந்ததில்லை. சடங்கு முறைப்படி தனது திருமணம் நடக்காததால் தாலி செயினும் கிடையாது. தன்சொந்த அக்கா மகள் கல்யாணத்திலும், மாதர் சங்க மாநாட்டிலும் உடுத்தும் சேலைகள் ஒன்றாகத்தான் இருக்கும்.அம்மாவின் வேலை ஏதோ அலுவலகத்திற்குச் சென்று செய்யும் வேலையாக நான் ஒருபோதும் பார்த்ததில்லை. ஒருநாள் காலை தூங்கிஎழுந்தவுடன் பக்கத்து வீட்டிலிருந்த என் நெருங்கிய தோழியின் குரல் ஓங்கி ஒலித்தது. “எல்லாரும் வாங்க! மைதிலி ஆண்டி மைக்குல பேசுறாங்க!”என்று சத்தம் போட்டு ஊரைக் கூட்டினாள். எங்கள் வீட்டிற்கு முன்னால் இருந்தஆட்டோ ஸ்டாண்டில் ஆடிக்கொண்டே இருந்தஇரண்டு டிரம்மின் மீது ஏறி நின்று அம்மா முழங்கிக் கொண்டிருந்தார். அப்போது தான்எனக்குப் புரிந்தது அன்று மே 1 - தொழிலாளர் தினம் என்று. வாயைப் பிளந்து கொண்டு, எங்கள்காம்பவுண்டில் இருந்த அனைத்து குடும்பங்களும் அந்த வினோதக் காட்சியைப் பார்க்க, அம்மாகீழே விழுந்து என் மானத்தை வாங்கக் கூடாதுஎன்று நான் வேண்டியது ஞாபகத்தில் நிற்கிறது.மற்றொரு நாள் காலை திடீரென்று ஏதோசத்தம். அருகிலிருந்த குடிசைப் பகுதியிலிருந்து பெண்கள் காலி குடங்களைத் தூக்கிக்கொண்டு தெருவில் கூடியிருந்தனர்.

பள்ளிக்கு என்னைத்தயாராக்கிக் கொண்டிருந்த அம்மா, அடுத்த நொடியே வெளியே ஓடிப்போய் அவர்களைப் பார்த்து, “அங்கயே உட்காருங்க! பஸ்ஸ போகவிடாதீங்க! கலையாதீங்க!” என்று தண்ணீருக்கான அந்தக் கூட்டத்தை மறியல் போராட்டமாக மாற்றும் முயற்சியில் இறங்கிவிட்டார். என் முடியை சீவிப் பின்னிக்கொண்டிருந்த அம்மா சீப்பை வீசிவிட்டு மாதர் சங்கத் தலைவியாக சட்டென்று உருமாறியது எனக்கு எந்த அதிர்ச்சியையும் தரவில்லை. ஏனென்றால் அதுதான் அம்மாவின் இயல்பு.பல நாட்கள் நள்ளிரவிலும் பிரச்சனையில் சிக்கியப் பெண்கள் அம்மாவைத் தேடி எங்கள் வீட்டிற்கு வருவார்கள். தூக்கக் கலக்கத்தில் இருக்கும் எனக்கு அம்மாவின் குரல் கேட்கும். ஏதோ போலீஸ் அதிகாரியை “சாயங்காலம் ஆறுமணிக்கு மேல ஒரு பொண்ண போலீஸ் ஸ்டேஷன்ல வைக்கக்கூடாதுனு தெரியாது உங்களுக்கு’’ என்று திட்டிக் கொண்டிருப்பார்.நான் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தபோது அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றஎந்த நிர்பந்தமும் என்மீது இல்லை. பள்ளிபடிப்பிற்கு அப்பாற்பட்ட எனது ஈடுபாடுகளையும்அம்மா முழுமனதோடு வரவேற்பார். சேர்ந்திசைகுழு ஒன்றில் என்னை அம்மா இணைத்திருந்தார்.எம்.பி.ஸ்ரீனிவாசன் என்ற பிரபல சேர்ந்திசை கலைஞரிடம் பயிற்சி எடுத்தவர் தான் எங்கள்குழுவின் ஆசிரியை. பல நாட்கள் மாலையிலும் இரவிலும் நடக்கும் பொதுக் கூட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட பிறகு வீடு திரும்புவேன்.அப்போது நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன். என் அத்தை ஒருமுறை அம்மாவிடம் “இந்த வருஷம் ஏன் இதெல்லாம்? பப்ளிக் எக்ஸாம் வேற’’ என்றார். என் அம்மாவின் பதில் பளிச்சென்று ஞாபகத்தில் இன்னும் நிற்கிறது.“பப்ளிக் எக்ஸாம் கல்பனாவுக்கு எந்த அளவு முக்கியமோ அந்த அளவு இதுவும் முக்கியம்’’ என்றார். எனது பள்ளி, அக்கம்பக்கத்து நண்பர்கள் போன்ற எனக்குப் பழக்கமான உலகையும்சமூகச் சூழலையும் தாண்டி ஒரு புதிய உலகைஇந்த சேர்ந்திசை அனுபவம் எனக்குக் கொடுத்தது. வாழ்க்கை என்பது இதுதானே தவிர,மதிப்பெண் பின் செல்வது கிடையாது என்று அம்மா உறுதியாக நம்பினார்.

இந்த படிப்பு தான் படிக்க வேண்டும் என்றவிதிகள் எப்படி இல்லையோ, அப்படியே திருமணம் மற்றும் உறவுகள் சம்பந்தப்பட்ட விதிமுறைகளும் கிடையாது. திருமணம் பற்றி ஒருவிஷயம் அம்மா என்னிடம் பலமுறை தெளிவாகசொல்லியிருக்கிறார். “திருமணம் செய்வதெல்லாம் உன் விருப்பம். ஒரு துணை வேண்டும் என்றுநீ நினைத்தால், உன் கணவரை நீ தேர்வு செய்துக்கொள். உனக்கு கணவர் தேடும் வேலையை நான் செய்ய மாட்டேன். என் கணவரை நான் தேடியது போல உன் துணையைநீ தேடு’’. ஓர் ஆலோசனை மட்டும் கொடுத்தார்.“கணவன், மனைவி இருவருக்கும் கருத்தொற்றுமைமுக்கியம். காலையில் செய்தித்தாளில் வரும் முக்கியச் செய்திகளைப் படிக்கும்போது உங்களுக்குள்அடிதடி வரக் கூடாது!’’ என்பார்.என் அம்மாவின் திருமண வாழ்க்கை என்பதுதோழமையும், நட்பும் கலந்த வாழ்க்கை. என் பெற்றோரை பார்த்து நான் கற்றுக் கொண்ட முக்கியப் பாடம், ஒரு பெண் பொது வாழ்வில் பிரகாசிக்கும் நட்சத்திரமாக இருக்க முடியும் என்றும்,அவளை வியந்து பாராட்டியே ஒரு ஆண் எந்த ஈகோவும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் அவளைப்போற்றி வாழ முடியும் என்பதே ஆகும்.அம்மா அப்பா இருவருமே நாத்திகர்கள். எங்களுடனே இருந்த என் பாட்டி கடவுள் நம்பிக்கை கொண்டவர். சிறுமியாக இருந்தபோது நானும் பாட்டியைப் போல் கடவுள் நம்பிக்கைக்கொண்டிருந்தேன். “ஐ லவ் காட்’ (i டடிஎந படின)என்று பாத்ரூம் சுவரிலெல்லாம் எழுதி வைப்பேன்.இதனால் அம்மாவுக்கு சிறிதளவு கூட எரிச்சலோ ஏமாற்றமோ எற்பட்டதில்லை. அம்மா அப்பா இருவருமே எந்த தத்துவத்தையும் என் மீது சுமத்தியதில்லை. எப்படி வாழ்க்கை அமைய வேண்டும் என்றுநினைத்தார்களோ, அப்படியே வாழ்ந்து காட்டினார்கள். என் வாழ்க்கையைத் தீர்மானிப்பது எனது உரிமை மட்டுமல்ல எனது கடமையும் தான் என்பதை எனக்கு உணர்த்தினார்கள்.

அம்மா பத்தாண்டு காலமாக “அல்ஸைமர்’’ (ஹடணாநiஅநச‘ள னுளைநயளந) என்னும்தீவிர ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். என்னையும், அப்பாவையும், ஏன் தன்னையுமே மறந்திருக்கிறார். ஆனால் மறக்க முடியாத ஞாபகங்களையும், இலட்சியங்களையும் எங்களுக்குக் கொடுத்திருக்கிறார். குடும்பம், குழந்தை, இயக்கம், பொதுவெளி என்பதற்கெல்லாம் இடையே மனிதர்கள் பொதுவாக அமைக்கும் சுவர்களை உடைத்தெறிந்து வாழ்ந்த“காம்ரேடு’ மைதிலி எனக்கு அம்மாவாக கிடைத்ததுஎனது பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

நன்றி: தினமணி - மகளிர் மணி, ஜனவரி 24,2018 கட்டுரையாளர்: சென்னை ஐஐடி, சமூகவியல் துறையில் 7 ஆண்டுகளாக துணைப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் இந்தத் துறையில் ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். ஜனநாயக மாதர் சங்கத்தின் மகத்தான முன்னோடி களில் ஒருவராம் மைதிலி சிவராமனின் மகள்)

Image result for theekkathir