திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் (என்சிஎல்டி) ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம் மனுத்தாக்கல் செய்துள்ள தாக ஊடங்கங்களில் செய்தி வெளியாகி யுள்ளது.தமிழகத்தில் சிவசங்கரன் என்பவரால் கடந்த 1999 -ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனம் தொடங்கப்பட்டது. சந்தையில் செல்போன் அறிமுகமாகும்போதே ஏர்செல் நிறுவனம் தொடங்கப்பட்டதால், மக்கள் மத்தியில் இந்த நிறுவனத்துக்கு அதிக வரவேற்பு இருந்தது. தொலைத்தொடர்பு சந்தையில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஏர்செல் நிறுவனமும் இடம் பெற்றது.கடந்த டிசம்பர் மாதம்வரை ஏர்செல் நிறுவனம் 8.5 கோடி வாடிக்கையாளர் களுடன் 6-வது இடத்தில் இருந்தது. ஆனால், மத்திய அரசு ஸ்பெக்ட்ராம் விலையைக் குறைத்ததும், அதிகமான நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறைகளில் வந்ததும் போட்டியை அதிகரித்தன. இதனால், சந்தையில் போட்டியைச் சமாளிக்க முடியாமல் ஏர்செல் நிறுவனம் திணறியது.இந்நிலையில், கடந்த புதன்கிழமை முதல் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு சிக்னல் பிரச்சனை ஏற்பட்டு அழைப்புகளும் செல்லவில்லை, யாருடைய அழைப்புகளையும் ஏற்கவும் முடியவில்லை. இதனால், ஆத்திர மடைந்த ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஏர்செல் நிறுவனங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.இந்நிலையில், ஏர்செல்லின் சிக்னல் கோபுரங்களை வைத்திருக்கும் ஏஜென்சிகளுக்கு வாடகைக் கட்டணம் செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால், சிக்னல் தடைபட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும், ஏர்செல் நிறுவனத்தின் 9 ஆயிரம் டவர்களில் 7 ஆயிரம் டவர் களில் சிக்னல் நிறுத்தப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.அதுமட்டுமல்லாமல் இந்த சிக்னல் குறைபாட்டால், ஏர்செல் நிறுவனத்தின் சேவை குறைபாட்டை காரணம் காட்டி எம்என்பி மூலம் வேறு நிறுவனத்துக்கும் வாடிக்கையாளர்களால் மாற முடிய வில்லை.இதனால்,நீண்ட காலமாக வைத் திருந்த செல்போன் எண்ணை மாற்றிவிட்டு புதிய எண்ணை வேறு நிறுவனத்தில் இருந்து பெறுவதா, அல்லது, பொறுமையாக இருந்து எம்என்பி மூலம் மாறுவதா என வாடிக்கையாளர்கள் குழம்பினர்.மேலும், வங்கி பரிவர்த்தனை, வியாபார தொடர்புகளுக்கும் நீண்ட காலமாக ஏர்செல் எண்ணை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்களும் பெரிய சிரமத்துக்கு ஆளாகினர்.இந்நிலையில், ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் சேவையில் வியாழனன்று மீண்டும் பாதிப்பு ஏற்படலாம் என்று அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் ஏர்செல் தொடர்பு நிறுவனம் தங்கள் நிறுவனத்தை திவால் என அறிவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.ஏர்செல் நிறுவனத்துக்கு ஏறக்குறையரூ.15,500 கோடி கடன் இருப்பதால், அதைசெலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ள தால், தீர்ப்பாயத்தை அந்த நிறுவனம் அணுகி இருக்கிறதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வடமாநிலங்களில் 6 மண்டலங்களில் தனது சேவையை ஏர்செல் நிறுவனம் நிறுத்திக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.அடுத்து என்ன நடக்கும்?தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் ஏர்செல் நிறுவனத்தின் திவால் மனு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், ஏர்செல் நிறுவனத்தின் கடனை அடைக்கும் செயல்திட்டம் குறித்து தீர்ப்பாயம் 270 நாட்களுக்குள் ஆய்வு செய்யும். அந்த ஆய்வின் முடிவில் ஏர்செல் நிறுவனம் உண்மையிலேயே கடனை செலுத்த முடியாத நிலையில் இருக்கிறது, அல்லது செயல்திட்டம் ஏதும் இல்லை என்று தெரியவந்தால், ஏர்செல் நிறுவனம் திவால் என அறிவிக்கப்படும்.