Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, April 8, 2018

அரை நூற்றாண்டு கடந்த அர்ப்பணிப்பும் ஈடுபாடும்




தொழிலாளர் கோரிக்கை களுக்காகவும் அரசியல் - சமூக மாற்றத்திற் காகவும் போராடுகிற, அகில இந்திய அளவில் போர்க்குணத்தோடு செயல்படுகிற தொழிற்சங்கங்களில் ஒன்று தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம். முன்பு மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறைக்குள் செயல்பட்டு வந்த அந்த நிறுவனம் தற்போது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாக்கப்பட்டுள்ள பிஎஸ்என்எல் நிறுவனமாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஒரு ஊழியராகவும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் பணி யாற்றியவர் ஜே.ஆர். என்றழைக்கப்படும் தோழர் ஜே. ரங்கநாதன். 1939ல் கர்நாடக மாநிலம், ``ஹூப்ளி யில் பிறந்தவர் ரங்கநாதன். இவரது தந்தை ஒரு ரயில்வே தொழிலாளி. பல மாநிலங்களில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த தந்தையும், தாயும் கர்நாடகத்தின் `ஹூப்ளி நகரில் இருந்தபோது அங்கு பிறந்தார் ரங்கநாதன். உடன் பிறந்தவர்கள் 7 பேர். இக்குடும்பத்தின் பூர்வீகம் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம், அரசூர் கிராமம். தந்தை வெளி மாநிலங்களில் வேலை செய்ய வேண்டியிருந்த சூழலில் இயல்பாக கிராமத்தோடு தொடர்பு அறுந்தது. தங்கள் மகன் உயர்கல்வி படிக்க வேண்டுமென்பது பெற்றோர் விருப்பம். ஆனால் அவ்வகைப் படிப்பில் ஆர்வம் இல்லாத ரங்கநாதன் எஸ்.எஸ்.எல்.சி. முடித்து பாலிக்டெக்னிக்கில் சேர்ந்தார், அங்கேயும் பாதியில் நின்றுவிட்டார். படிக்கிறபோதே இவருக்கு நாடகத்தில் ஆர்வம் இருந்தது. பாடப்புத்தகங்களில்தான் நாட்டமற்றவராக இருந்தாரேயன்றி மற்ற பல புத்தகங்களை விரும்பி வாசித்தார். கலை ஈடுபாட்டுடன் சிறு ஓரங்க நாடகங்களை எழுதி தானே நடிக்கவும் செய்தார். நண்பர்களோடு சேர்ந்து ‘நல்வழி நாடக மன்றம்’ என்ற ஒரு குழுவை உருவாக்கி ‘நீங்கள் தீர்ப்பு கூறுங்கள்’ என்ற நாடகத்தை ரங்கநாதன் அரங்கேற்றினார். தானும் அந்த நாடகத்தில் நடித்தார். அது ஒரு சமூகப் பிரச்சனையை மையமாகக் கொண்ட நாடகம்.அப்போது சென்னையில் ‘ஜனசக்தி’ ஏட்டின் ஆசிரியராக இருந்த, விடுதலைப் போராட்ட வீரர் தோழர் ஐ. மாயாண்டி பாரதி அந்த நாடகத்தைப் பார்த்துப் பாராட்டியதுடன் பத்திரிகையிலும் சிறப்பாக அறிமுகப்படுத்தி எழுதினார். “எதையும் எளிமையாக விளக்கும் திறன் பெற்றிருந்த ஐ.மா.பா.வுடன் ஏற்பட்ட தொடர்பினால் பொதுவுடைமைதான் சிறந்த கொள்கை என்ற உணர்வு என் மனதில் உருவானது. சோவியத் யூனியன் ஸ்புட்னிக் ராக்கெட் செலுத்தியது, சோவியத் தலைவர் குருசேவ், சீனத் தலைவர் சூ யென்லாய் ஆகியோர் இந்தியாவுக்கு வந்தது போன்ற நிகழ்ச்சிகள் என்னுள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின,” என்கிறார் ஜே.ஆர்.1959ல் டெலிகாம் மெக்கானிக் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதைத் தொடர்ந்து தொலைபேசித் துறையில் ஒரு பயிற்சியாளராகச் சேர்ந்தார். 1960ம் ஆண்டு பயிற்சியில் இருந்தபோது இவரையும் சேர்த்து நான்கு பேரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தபால் அலுவலக வேலையில் சேருமாறு தபால் தந்தி நிர்வாகம் தகவல் அனுப்பியது. அங்கே சென்றபோது அலுவலகத்தைச் சுற்றிலும் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. மறுநாளிலிருந்து நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தபால் தந்தி ஊழியர்கள் தொடங்க இருந்தார்கள். ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கவிருந்த நிலையில் நால்வரும் வேலையில் சேர்வது நியாயமாகாது என்று சங்கத் தலைவர்கள் கூறியதால் ரங்கநாதனும், அவர்களது கருத்தை ஏற்று இதர மூன்றுபேரும் வீடு திரும்பிவிட்டனர்! தகவலறிந்து போராட்டத் தலைவர்கள் ரங்கநாதனை வெகுவாகப் பாராட்டினார்கள். நான்கு நாட்கள் நடைபெற்ற அந்தப் போராட்டம், கோரிக்கைகள் ஏற்கப்பட்டு வெற்றிகரமாக முடிந்தது.

குறிப்பிட்ட தேதியில் வேலையில் சேராததால் இந்த நான்கு பேரின் பயிற்சி தடைபட்டது. சங்கத் தலைவர்கள் தலையிட்டு வாதாடி, பயிற்சியை முழுமையாக முடிப்பதற்கு வழி செய்தனர். 1961ம் ஆண்டு ராமநாதபுரம் தபால் நிலையத்தில் ரங்கநாதன் வேலையில் சேர்ந்தார். அதற்கு அடுத்த ஆண்டிலேயே, ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாததை எதிர்த்துத் தபால் தந்தி தொழிலாளர்கள் நாடு தழுவிய ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் ரங்கநாதன் உற்சாகமாகக் கலந்துகொண்டார்.1968ம் ஆண்டு தபால் தந்தித் துறையினர் உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்களின் போராட்டம் நடந்தது. நாடு தழுவிய அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு மத்திய அரசு மோசமான அடக்குமுறையில் ஈடுபட்டது. பஞ்சாப் மாநிலத்தின் பதான் கோட் உள்ளிட்ட நான்கு இடங்களில் போராடும் ஊழியர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். அதில் 13 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். போராட்டத்தை ஒடுக்கிட மத்திய அரசு இப்படிப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளை எடுத்தாலும் போராட்டம் பின்வாங்காமல் வெற்றிகரமாக நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் ஒரு ஊழியராகப் பங்கேற்றது மட்டுமல்லாமல், போராட்டக் களத்தில் நின்றும் சுறுசுறுப்பாகப் பணியாற்றினார் ரங்கநாதன்.அந்தப் போராட்டத்திற்குப் பிறகுதான் ரங்கநாதன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார்.“எப்படி கட்சிக்குள் வந்தீர்கள்,” என்று கேட்டதற்கு, “அப்போது எல்லாப் பத்திரிகைகளும் மத்திய அரசு ஊழியர்களின் போராட்டத்தை விமர்சித்துதான் செய்தியை வெளியிட்டன. சில நாளேடுகள் போராட்டத்தைக் கண்டித்தன, ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு எதிராகவே எழுதின. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் ‘தீக்கதிர்’ மட்டும்தான் எங்கள் போராட்டம் பற்றிய முழுமையான செய்திகளை வெளியிட்டதோடு, அந்தப் போராட்டம் ஏன் என்பதற்கான விளக்கத்தையும் அளித்து ஆதரவாக எழுதியது.‘ தீக்கதிர்’ படிகளை போராடும் ஊழியர்களுக்குக் கொண்டு சேர்த்தோம், அவர்களுடைய போராடும் உறுதி மேலும் வலுவடைந்தது, நான் கம்யூனிஸ்ட்டாக மாறுவதற்கும் கட்சியில் இணைவதற்கும் ‘தீக்கதிர்’ ஒரு முக்கியமான காரணம்,” என கூறினார்.தபால் - தந்தி துறை ஊழியர்களின் தலைவர்களாக இருந்த சி.எஸ். பஞ்சாபகேசன், டி.வி. சுப்பிரமணியம், காரைக்குடி ராமகிருஷ்ணன், மதுரை ஆர். ராமச்சந்திரன், சென்னை எஸ். சந்திரசேகர் ஆகியோரோடு ஏற்பட்ட தொடர்பும் இவர் கட்சியில் உறுப்பினராக இணைந்து செயல்படத் தூண்டுகோலாக இருந்திருக்கிறது.சங்கத்திலும், கட்சியிலும் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றினார் ஜே.ஆர். மாநிலத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவிலும் சங்க நிர்வாகியாகப் பங்களித்திருக்கிறார். குறிப்பிடத்தக்க ஒரு பணியாக, சங்கம் நடத்தி வரும் ‘உழைக்கும் வர்க்கம்’ பத்திரிகையின் ஆசிரியராகப் பல ஆண்டுகள் ரங்கநாதன் பணியாற்றியிருக்கிறார். ஊழியர்கள் சந்திக்கிற துறை சார்ந்த பிரச்சனைகள் மட்டுமல்லாது நாட்டின் அரசியல். சமூக நிகழ்வுப்போக்குகள் குறித்தும் வெளிச்சம் பாய்ச்சிடும் இப்பத்திரிகைப் பணியைச் செவ்வனே செய்வதற்காக என்றே, துறையிலிருந்து ஓய்வுபெற 5 ஆண்டுகள் இருந்த நிலையில் தன் விருப்ப ஓய்வு பெற்று இதழியல் பணியை ஓய்வின்றித் தொடர்ந்தார். சங்கப் பணிகளை நிறைவேற்றுவதிலும் கட்சிப் பணிகளை மேற்கொள்வதிலும் சென்னையில் பி.ஆர். பரமேஸ்வரன், வே. மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட தோழர்கள் வழிகாட்டியதை நெகிழ்வோடு நினைவுகூர்கிறார்.

அகில இந்திய அளவில் பி.டி. ரணதிவே, எம்.கே. பாந்தே, இ. பாலானந்தன் ஆகியோரின் வழிகாட்டல் கிடைத்ததையும் பெருமையாகக் குறிப்பிடுகிறார்.தோழர் ரங்கநாதன் சென்னை தொலைபேசி நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும், அகில இந்திய சங்கத்தின் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டு பல ஆண்டுகள் தமது வழிகாட்டல்களை வழங்கியிருக்கிறார். தொலைபேசித் துறையில் எல்லா பிரிவு சங்கங்களும் அங்கம் வகிக்கிற ‘பிராந்திய ஜாயின்ட் கவுன்சில்’ அமைப்பின் செயலாளராகவும் செயல்பட்டு இருக்கிறார். நாடு தழுவிய அளவிலும், தமிழகத்திலும் சங்கத்தின் பல போராட்டங்களில் ரங்கநாதன் முன்னணிப் பங்காற்றியிருக்கிறார். தற்போது இச்சங்கம் அங்கீகாரம் பெற்ற முதன்மைச் சங்கமாக செயல்பட்டு வருகிறது. அக்காலத்தில் ஜே.ஆர். போன்ற தோழர்கள் ஆற்றிய பணிதான் இதற்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது. இவருடைய துணைவியார் சியாமளா மாநில அரசு ஊழியராக பணியாற்றியவர். 1989ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் தோழர் வி.பி. சிந்தன் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கியபோது அவருக்கு ஆதரவு திரட்ட இவரது மகள் சித்ரா பிரச்சாரத்திற்குச் சென்றதையும், மகள் ஆற்றிய தேர்தல் பணியைப் பாராட்டி தோழர் வி.பி.சி கடிதம் எழுதியிருந்ததையும் கூறிப் பெருமைப்பட்டார். தேர்தல் பணிகளில் இவரும், துணைவியாரும் முனைப்போடு ஈடுபட்டிருக்கிறார்கள். இவருடைய மகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படித்தார். அங்கு தன்னோடு படித்த ஒரு மாணவரைக் காதலித்தார். ஆந்திராவைச் சேர்ந்த அந்த மாணவருடைய பெற்றோர் துவக்கத்தில் இவர்களின் காதலை ஏற்கத் தயங்கினார்கள். பிறகு ஏற்றார்கள். ஏற்க வைக்க முயற்சிகள் மேற்கொண்ட ரங்கநாதனும், சியாமளாவும் தங்களுடைய மகளுக்கு மகிழ்ச்சியோடு சாதி மறுப்புத் திருமணத்தை செய்துவைத்தார்கள். மகளும் மருமகனும் தற்போது அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.தொலைபேசி துறை ஊழியர்கள் நலன்களுக்காக மட்டுமல்ல, பொதுவாக தொழிலாளர்கள், நடுத்தர ஊழியர்கள் போராட்டங்களை ஆதரித்து தொலைபேசி ஊழியர்கள் சங்கம் பல ஆதரவு இயக்கங்களை நடத்தியிருக்கிறது. சென்னையில் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டத்தை ஆதரித்து தொலைபேசி தொழிற்சங்கத்தின் சார்பாக ஒரு நாள் தர்ணா போராட்டம் நடந்திருக்கிறது. ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறை கைது செய்து 15 நாட்கள் சிறையில் அடைத்தது.சங்கத்தினுடைய முக்கியப் பொறுப்பில் இருந்த ரங்கநாதனை ஊக்கமிழக்கச் செய்வது போல் அவர் மீது நிர்வாகம் பல வழக்குகளைத் தொடுத்தது. ஊதிய வெட்டும், பதவி உயர்வு நிறுத்தத்தையும் இவர் சந்திக்க நேர்ந்தது. ஆனால் இவரது போராட்ட ஊக்கத்தில் கொஞ்சமும் பின்னடைவு ஏற்பட்டதில்லை.இவருடைய இளைய சகோதரர் பி.இ. முடித்து தொலைபேசித் துறையில் வேலையில் சேர்ந்து பெரிய அதிகாரியாகிவிட்டார். ஒருமுறை ஹைதராபாத்தில் தொலைபேசி ஊழியர் சங்க ஆந்திர மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டு அழைப்பிதழில் வாழ்த்துரையாற்றுவோர் பட்டியலில் ரங்கநாதன் பெயரும் இருந்தது. நிறுவனத்தின் மாநில முதன்மைப் பொதுமேலாளர் என்ற முறையில் இளைய சகோதரரும் அழைக்கப்பட்டிருந்தார். தன்னுடைய அண்ணன் ரங்கநாதன் மாநாட்டில் கலந்து கொள்ளவிருப்பதால் அதில் கலந்துகொள்வதை சகோதரர் தவிர்த்து விட்டார். தொழிற்சங்கத் தலைவர்களுக்கு இப்படியான சூழல்களும் ஏற்படுகின்றன!இந்த 2018 ஏப்ரல் 30ஆம் தேதி 79 வயதை நிறைவு செய்கிறார் ஜே.ஆர். அவருடைய சங்கப் பணிக்கும், கட்சிப் பணிக்கும் அவருடைய துணைவியாரும், மகளும் பக்கபலமாக இருந்திருக்கிறார்கள். குடும்பத்தினரின் இந்த மனமுவந்த ஒத்துழைப்பு இல்லையென்றால் இயக்கப் பணியை நிறைவாகச் செய்திருக்க முடியாது என்கிறார். தற்போது தோழர் ரெங்கநாதன் சென்னை, கொளத்தூரில் வசித்து வருகிறார். கட்சியின் வடசென்னை மாவட்டக்குழுவிற்கு உட்பட்ட ஒரு கட்சி கிளையில் உறுப்பினராக இருந்துகொண்டு தன்னால் இயன்ற பணியை செய்து வருகிறார். தபால் தந்தி துறையில் வேலையில் சேர்ந்ததில் இருந்து 50 ஆண்டு காலமாக அர்ப்பணிப்போடு இவர் ஆற்றி வரும் இயக்கப்பணி பாராட்டத்தக்கது - பின்பற்றத்தக்கது.


தோழர் ஜி. ராமகிருஷ்ணன், 
அரசியல் தலைமைக்குழு, சிபிஎம்

களப்பணியில் கம்யூனிஸ்டுகள்
Image result for theekkathir