AUAB கூட்டமைப்பின் சார்பாக ஒற்றுமையாக நாடு முழுவதும் வெற்றிகரமாக நடந்து முடிந்த 3 நாள் உண்ணாவிரத போராட்டத்தில், நமது சேலம் மாவட்டத்தில் தனியாக போராட்டத்தை நடத்திய NFTE சங்கம், தனது சேலம் மாவட்ட இணையதளத்தில், BSNLEU சங்கத்தை விமர்சிப்பதாக நினைத்து கொண்டு, ஒட்டுமொத்த ஊழியர்கள், அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்ட ஒன்றுபட்ட போராட்டத்தை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு சங்கத்தின் தலைமையின் கீழ் நடைபெற்ற போராட்டம் என்று துவங்கியிருப்பதே முதல் தவறு. இது ஒரு கூட்டுப்போராட்டம். கூட்டுத் தலைமையின் கீழ், AUAB பதாகையின் கீழ்தான், போராட்டம் நடைபெற்றது.
அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், ஓய்வூதியர்கள் ஒன்றாக நடத்திய போராட்டம். இது தான் எங்கள் வர்க்க குணம்.
உண்ணாவிரத போராட்டமா? தர்ணா போராட்டமா என்று மாவட்ட சங்கங்கள் முடிவு எடுக்கமுடியாது. மாறாக, மத்திய சங்கங்களின் போராட்ட அறைகூவல் படி, மூன்று நாள் போராட்டத்தை இரண்டு மையங்களில் நடத்துவது என ஒரு வாரத்திற்கு முன்பு, 17.07.2018 அன்று மாவட்ட சங்கங்கள் கூட்டாக முடிவு எடுத்து, 21.07.2018 அன்று நோட்டீஸ் கூட்டாக வெளியிட்டு, அந்தந்த அமைப்புகள் மூலம் தகவல் கொடுத்ததை, NFTE அறியவில்லை போலும்.
உயரிய சித்தாந்த பின்னனியோடு, வர்க்க ஒற்றுமைக்காக எந்த ஒரு தொழிலாளி நடத்திய போராட்டத்தையும் BSNLEU விமர்சித்ததாக வரலாறு இல்லை. நடந்து முடிந்த போராட்டப்பந்தலில் கூட, இரண்டு இடங்களில் எதற்காக தனித் தனியாக போராட்டம்? என தோழர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு கூட, இரண்டு இடமாக இருந்தால் என்ன? ஒரே கோஷம், ஒரே கோரிக்கை, ஒரே பதாகை, ஒரே கொள்கை தான் என AUAB தலைவர்கள் இங்கு பேசியது அவர்களின் சிந்தனை முதிர்ச்சியை வெளிப்படுத்தியது. இரண்டு இடங்கள் என்பதால் கூடுதல் ஊழியர்கள் பங்கேற்றிருக்கிறார்கள், அதன்மூலம் கோரிக்கை நிறைய ஊழியர்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது என இங்கு பேசி, உங்களையும் உயர் நிலைக்கு கொண்டு சென்ற இந்த தலைவர்களையும், போராட்டத்தையும் இழிவாக பேசலாமா?
உழைக்கும் வர்க்க இயக்கங்கள் மிக பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், வர்க்க ஒற்றுமையை வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை! வர்க்க போராட்டங்களையும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்களையும் கொச்சை படுத்தாதீர்கள். போராடும் தொழிலாளியை பார்த்து ஏளனம் செய்வது தொழிற்சங்கத்திற்கு அழகல்ல. இது, சிறுபிள்ளைத்தனத்தின் வெளிப்பாடு.
தொழிற்சங்க கூட்டு போராட்டங்களை கொச்சைப்படுத்திய எந்த அமைப்பும், தனி மனிதனும், நிலைத்ததாக வரலாறு இல்லை. இது தான் மெய்மை என போராட்டங்கள் நிரூபிக்கும்.
திருத்தல்வாத தலைமை, தங்கள் அங்கீகார காலத்தில் கோட்டை விட்ட பல பிரச்சனைகளை BSNLEU அங்கீகாரம் பெற்ற பின் தீர்வு எட்டப்பட்டது என்றால் அதற்கு ஒன்றுபட்ட போராட்டங்களே கா ரணம். அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்க்க முடியாது என்று சொன்னவர்களையும், ஒன்றிணைத்து, போராடிய ஒற்றுமை நாயகன் தான் BSNLEU சங்கம். ஒற்றுமையை கட்டியவர்களுக்கு தான் அதனுடைய நன்மையும் தெரியும், சங்கடங்களும் புரியும்.
மெய்மை மெய் சிலிர்க்க வைத்தாலும், சில நேரங்களில் பொய்மையும் மெய் சிலிர்க்க வைப்பது வேதனையான மெய்மை.
இனையதள போரை தவிர்ப்போம்!...
வர்க்க போரை முன்னெடுத்து செல்வோம்!!
நயன்சாரா நன்மையின் நீக்கும், பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து.
- குறள்