ஊதிய மாற்றக் குழுவின் 7வது கூட்டம், நேற்று, (09.10.2018) கூட்டுக் குழுவின் தலைவர் திரு H.C.பந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிர்வாகம் மற்றும் ஊழியர் தரப்பின் அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஊதிய விகிதங்களில் NE-4 மற்றும் NE-5 ஊதிய விகிதங்களின் உயர்ந்த பட்ச நிலையை உயர்த்த வேண்டும் என்ற ஊழியர்களின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும், நிர்வாகத்தின் முன்மொழிவின் மீது உடன்பாடு ஏற்பட்டது. இதன்மூலம், ஊதிய விகிதங்கள் இறுதி படுத்தப்பட்டுவிட்டது என்பது மகிழ்ச்சியான விஷயம்.
அதன் பின் அலவன்ஸ்கள் மீதான விவாதம் துவங்கியது. முதல் ஆய்படு பொருளாக வீட்டு வாடகைப்படி மாற்றம் விவாதிக்கப்பட்டது. அதிகாரிகளுக்கான ஊதிய மாற்றம் தொடர்பாக BSNLன் இயக்குனர் குழு DOTக்கு அனுப்பிய முன்மொழிவில் வீட்டு வாடகைப்படி 31.12.2016ல் இருந்த அளவிலேயே முடக்கப்படும் என தெரிவித்துள்ளதாக நிர்வாக தரப்பில் கூறப்பட்டது. இதே தான் ஊழியர்களுக்கும் அமலாக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
வீட்டு வாடகைப்படியில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது, தற்போதுள்ள வீட்டு வாடகைப்படியே தொடரும் என்பது தான் அதன் பொருள். நிறுவனத்தின் நிதி நிலைமையை சுட்டிக் காட்டி நிர்வாகம் இதனை நியாயப்படுத்தியது. மேலும் வீட்டு வாடகைப்படி மாற்றப்பட்டதென்றால், அதனால் ஏற்படும் 570 கோடி ரூபாயை ஊதிய மாற்ற முன்மொழிவோடு சேர்த்து DOTக்கு அனுப்பப்பட்டதென்றால், ஊதிய மாற்றத்திற்கு DOT ஒப்புதல் வழங்காது எனவும் தெரிவித்தது.
வீட்டு வாடகைப்படியை விட்டுக் கொடுக்க முடியாது என ஊழியர் தரப்பு உறுதியாகவும், ஒன்றுபட்டும் நிர்வாகத்தின் இந்த முன்மொழிவை நிராகரித்தது. வீட்டு வாடகைப்படி, ஊதியத்தின் ஒரு பகுதி என்றும் அதனை விட்டுத் தர முடியாது என்றும் அவர்கள் ஒற்றைக் குரலில் தெரிவித்தனர். புதிய ஊதியத்தின் அடிப்படையில் வீட்டு வாடகைப்படி மாற்றியமைக்கப்பட வேண்டும் என உறுதியுடன் ஊழியர் தரப்பு கோரியுள்ளது.
இந்த முட்டுக் கட்டையுடன் 7வது கூட்டம் முடிவுக்கு வந்தது. அடுத்த கூட்ட தேதி அறிவிக்கப்படவில்லை.
E . கோபால்,
மாவட்ட செயலர்