BSNL நிதி ஆதாரம் சம்மந்தமாக நமது மத்திய சங்கம், ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ள தகவல்கள்
BSNL கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது என்பது உண்மை. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தான் மாத மாதம் சம்பளம் பட்டுவாடா செய்யப்படுகிறது. மருத்துவ மற்றும் பிற பில்கள் பட்டுவாடா செய்ய நிதி ஒதுக்க முடியவில்லை. நிதி நிலைமை காரணமாக, மாதா மாதம் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது என்பது கடுமையான காலதாமதத்தை சந்திக்க நேரிடுகிறது.
இந்த விஷயங்களை சுட்டிக்காட்டி, சில விஷமிகள் பொய்யான பல தகவல்களை ஊழியர்கள் மத்தியில் பரப்பி குழப்பம் ஏற்படுத்துகிறார்கள். ஊழியர்களுக்கு சில தெளிவான விவரங்களை தெரிவிப்பது என்பது, BSNLEU சங்கத்தின் கடமை என கருதி இந்த விவரங்களை வெளியிடுகிறோம்.
2016 செப்டம்பர் முதல் ரிலையன்ஸ் ஜியோ துவங்கிய கட்டண தாக்குதல்தான், BSNL நிதி ஆதாரம் பாதிக்கப்படுவதற்கு அடிப்படை காரணம். BSNL மட்டுமல்ல, ஏர்டெல், வோடாபோன், ஐடியா ஆகிய நிறுவனங்களும் நட்டத்திற்கு சென்றுவிட்டது. இந்திய தொலைத்தொடர்பு தொழில் கடும் நெருக்கடியில் உள்ளது. மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடுகையில், BSNL நிலைமை சற்றே மேம்பட்டதாக உள்ளது.
ஏர்டெல், வோடாபோன், ஐடியா என எல்லா தனியார் நிறுவனங்களும் பெரும் கடன் சுமையில் உள்ளது. உதாரணத்திற்கு, ஏர்டெல் 95,000 கோடி ரூபாய் கடனில் உள்ளது. வோடாபோன் 1,20,000 கோடி ரூபாய் கடனில் உள்ளது. ஆனால், நமது BSNL நிறுவனம் சில ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தான் உள்ளது என்பது, ஒப்பிட்டு அளவில் ஆறுதலான விஷயம்.
ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின்பும், புதிய சந்தாதாரர்களை அதிகமாக நாம் பிடித்துள்ளோம். 2017ல் ஏர்டெல், வோடாபோன், ஐடியா நிறுவனங்களை விட நாம் அதிகமான சந்தாதாரர்களை பிடித்துள்ளோம். நாம் 11.50% சந்தாதார்களை அதிகமாக்கியுள்ளோம். ஆனால், ஏர்டெல் 9.13%, வோடாபோன் 3.83%, ஐடியா 3.14% தான் அதிகரித்துள்ளது.
BSNL சந்திக்கும் ஒரே பிரச்சனை, வருவாய் இழப்பு மட்டும்தான். தொலைத்தொடர்பு வல்லுநர்கள் கூற்று படி, இந்த பிரச்சனை மார்ச் 2019க்குள் ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக, கட்டணங்கள் உயரும் என கணிக்கிறார்கள். அதன் மூலம், வருவாய் உயரும்.
AUAB கூட்டமைப்பின், தொடர் இயக்கங்கள் காரணமாக, BSNL விரைவில் 4G அலைக்கற்றையை பெற்று விடும். அலைக்கற்றை ஒதுக்கி, ஆறு மாதங்களுக்குள், அனைத்து மாநிலங்களிலும் நாம் சேவை கொடுக்க துவங்கிவிடுவோம். "BSNL உங்கள் இல்லம் தேடி", உள்ளிட்ட பல இயக்கங்களை நாம் நடத்துவதால், அதிலும் வருவாய் அதிகரிப்புக்கான வாய்ப்புகள் உள்ளது. தேவையற்ற செலவுகளை குறைக்க, AUAB கூட்டமைப்பு, ஏற்கனவே, நிர்வாகத்தை கடுமையாக வலியுறுத்தியுள்ளது.
எனவே, BSNL நிதி நெருக்கடி விரைவில் முடிவுக்கு வரும் என அங்கீகரிக்கப்பட்ட முதன்மை சங்கமான BSNLEU கருதுகிறது. BSNLக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது.
பொய்யும், புரட்டும் பேசுபவர்களை புறம் தள்ளுவோம்!.
நம்பிக்கையுடன் முன்னேறுவோம்!!
எதிர்காலம் நமதே!!!
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்