செங்கொடி ஏந்திய
தீரர்களே...
செங்குருதி சிந்திய
தியாகிகளே...
வீரவணக்கம் செய்கின்றோம்!
அன்று...
இழப்பதற்கு ஏதுமில்லை
உங்களிடம் எஞ்சிநின்ற
உயிரைத் தவிர....
ஆனாலும்...
வெல்வதற்கோர் பொன்னுலகம்
காத்துக்கிடக்கிறதென
காண்பித்துச் சென்றீர்கள்....
அதற்கு...
கூலிகள் வேலிகளாய்
மாறிட வேண்டுமென
கற்பித்தும் சென்றீர்கள்...
உம் உடல்கள்
கருகிச் சாம்பலாகின
உண்மையே...
உங்கள் உதிரம்
வெந்து மாய்ந்து போனது
உண்மையே....
கண்டுணர்ந்தோம்
கற்றுக் கொண்டோம்
களம் பயின்றோம்
கருத்தால் இணைந்தோம்
இதோ!
உங்கள் சாம்பல்
காற்றில் கலந்து
தேசம் முழுதும்
பரவிடக் கண்டாயா!
உங்கள் உதிரம்
உழைப்பவர் உளத்தில்
உணர்வாய் பொங்கிடக்
கண்டாயா!
ஆம்!
ரத்தம் தோய்ந்த
50000 பாதங்கள்
மகாராட்டிர மண்ணில்
பதித்த தடம் பார்...
அதில் தெரிகிறது
உங்கள் குருதி நெடி...
தலைநகர் தில்லியில்
விவசாயி
விவசாயத் தொழிலாளி
தொழிலாளியின்
அணிவகுப்பைப் பார்...
அதில் தெரியும்
உங்கள் செங்கொடி வல்லமை
விவசாயம் காக்க
வீழ்ந்த பெரு வேலிகளே!
உங்களுக்கு எந்தன்
வீர வணக்கம்!
நிச்சயம் உலகம்
வெகுண்டு ஒருநாள்
செய்யும் உமக்கு
வெற்றி வணக்கம்!
-நா.சுரேஷ்குமார், மதுரை