ஜனவரி 8,9 வேலை நிறுத்தத்திற்கான ஆயத்தப்பணிகளில் ஒட்டு மொத்த இந்திய தொழிற்சங்கஇயக்கமும் மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் 12 அம்ச கோரிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோரிக்கையும் இந்திய நாட்டில் இன்று ஜனநாயகமும், இறையாண்மையும், சுய சார்பும் சீர்குலைந்து போயுள்ளன என்பதை பிரதிபலிக்கின்றது.
செல்வாதாரங்களில் உள்ள சமத்துவத்தின் அடிப்படையில் பார்க்கும்போது மொத்தமுள்ள 152 நாடுகளில் இந்தியா 132வது இடத்தில் இருப்பதாக சர்வதேச நிதி அபிவிருத்தி அறிக்கை குறிப்பிடுகிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் இதுவரைஇல்லாத அளவிற்கு செல்வந்தர்களும் பெரும் வர்த்தகர்களும் நாடாளுமன்றங்களில் இடம் பிடித்துள்ளனர். மக்களவையில் கிட்டத்தட்ட 450 பேரும், மாநிலங்களவையில் கிட்டத்தட்ட 90 சதவீதம்பேரும், மந்திரி சபையில் உள்ள 78 மந்திரிகளில் 72 பேரும் கோடீஸ்வரர்களாவர். அதே நேரம் தொழிலாளி வர்க்கத்தில் 90 சதமானம் பேர் மாதம் ரூ. 10000-க்கும் கீழ் மட்டுமே சம்பாதிப்பவர்களாக உள்ளனர். தேசிய வளத்தில் 52 சதவீதத்தைஉயர்தட்டு 1 சதவீத மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
* உலக அளவில் பசித்திருப்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மொத்தமுள்ள 119 நாடுகளில் இந்தியா 103வது இடத்தில் இருக்கிறது. எனவே தான் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, ரேசன் விநியோகத்தை சீர்படுத்து, அத்தியாவசியப் பொருட்களில் ஊக வணிகத்தை கட்டுப்படுத்து என்ற கோரிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதே போல இன்னொரு கோரிக்கைஅனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்து என்பதாகும்.
* உலக அளவில் பசித்திருப்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மொத்தமுள்ள 119 நாடுகளில் இந்தியா 103வது இடத்தில் இருக்கிறது. எனவே தான் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, ரேசன் விநியோகத்தை சீர்படுத்து, அத்தியாவசியப் பொருட்களில் ஊக வணிகத்தை கட்டுப்படுத்து என்ற கோரிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதே போல இன்னொரு கோரிக்கைஅனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்து என்பதாகும்.
* பாலின சமத்துவத்தில் 188 நாடுகளில் 125வது இடத்தைப் பிடித்துள்ளது. பாலின சமத்துவம் என்பது பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது. குறிப்பாக பெண்கள் இந்த சமூகத்தில் நடத்தப்படும் விதம் மட்டுமின்றி அவர்களது பொருளாதார சுதந்திரம், அவர்களதுஉரிமைகள் மனித உரிமைகளாக மதிக்கப்படுகின்றனவா என்பது உட்பட அரசாங்கம் அவர்களுக்காக செயல்படுத்தும் திட்டங்கள், பொருளாதாரத்தில் அவர்களின் பங்கு என அனைத்தும் சேர்ந்து தான் பாலின சமத்துவத்தை தீர்மானிக்கும். இதில் இந்தியப் பெண்களின் நிலை படுமோசமாக உள்ளது.
* மனித வள மேம்பாட்டில் 180 நாடுகளில் 130வதுஇடத்தில் இருக்கிறது. பொதுவாக ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கு மனித வள மேம்பாடு என்பது மிக முக்கியமான சொத்தாகும். இந்திய நாட்டை பொறுத்தவரையில் இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகமாகும். இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான இளைஞர்கள் 25 வயதிற்குக் கீழானவர்கள். 35 வயதிற்குக் கீழானவர்கள் 65 சதவீதம். 2020ல் இந்திய நாட்டின் சராசரி வயது என்பது 29 வயதாக இருக்கும். சீனாவிற்குகூட இது 37 ஆக, ஜப்பானுக்கு 48 ஆக தான் இருக்கும்என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அப்படிப்பட்ட இளைய இந்திய நாட்டில் மனித வள மேம்பாட்டில் எத்தனை பின்தங்கியுள்ளோம் என்பது கவலைப்படவேண்டிய அம்சமாகும். எனவே தான் கண்ணியமான வேலைகளை உருவாக்கு என்ற கோரிக்கையையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தினை அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் மற்றும் நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்து என்ற கோரிக்கையையும், ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிடு மற்றும் சம வேலைக்குசம கூலி கொடு என்பது போன்ற கோரிக்கைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
* சமீபத்திய சிஎம்ஐஇ அறிக்கையின்படி,அக்டோபர் 2018ல் நாட்டின் வேலையின்மை என்பது 6.9 சதவீதம்அளவிற்கு உயர்ந்துள்ளது. ஜுலை 2017ல் 140 லட்சமாக இருந்த வேலை தேடிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அக்டோபர் 2018ல் 295 லட்சமாக உயர்ந்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.
* சர்வதேச தொழிலாளர் அமைப்பு இந்திய தொழிலாளர் சந்தையில் குத்தகைதாரர்களின் எண்ணிக்கையும், கேசுவல் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்று கூறுகிறது. ஒரு புறம் வேலைவாய்ப்புகள் சுருங்கி, உள்ளதும் பறிக்கப்படுகிறது என்றால், மறுபுறம் இந்தியாவில் மொத்தஉள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.07 சதவீதம் தான்சமூகப் பாதுகாப்பிற்கென ஒதுக்கப்படுகிறது. ஆனால் பிரான்சில் இது 11.5 சதவீதமாகும். ஜெர்மனியில் இது 8.5சதவீதமாகும். ஒருவேளை அனைவருக்கும் மாதம் ரூ.3000வீதம் பென்சன் வழங்குவது என்று முடிவெடுத்தால் கூடமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 2 சதவீதத்திற்கும் கீழ் தான் செலவாகும் என்று புள்ளியலாளர்கள் கூறுகின்றனர். அதே நேரம் இந்தியாவில் ஆண்டுதோறும் கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படும் வரி விலக்கு மட்டுமே 5 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
எனவே, சமூகப் பாதுகாப்பு என்பது மனித உரிமைகளுடன் சம்பந்தப்பட்டது; உயிர் வாழும் உரிமையை அடிப்படை உரிமையாக்கியுள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21 உச்சநீதி மன்றத்தால் பல வழக்குகளில் வெறுமனே உயிர் வாழ்வது என்பதல்ல, கண்ணியமாய் வாழ்வதற்கான உரிமை என்று விளக்கமளித்திருப்பதை உரத்து முழங்குகிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 39, அரசு அனைத்து குடிமக்களுக்கும் போதுமான வாழ்வாதார உரிமைகளை அளிக்கவேண்டும் என்று வழி காட்டியுள்ளது. பிரிவு 41 அனைவருக்கும் வேலைகொடுக்க வேண்டும், கல்வி கற்பிக்கவேண்டும், வயதான காலத்தில் பொது உதவி (பென்சன்)பெற மற்றும் நோய்வாய்ப்பட்ட காலங்களில் பொது நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் வழிகாட்டுகிறது. எனவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள இந்திய அரசின் கடமைகளைச் செய் என்றுதான் தொழிலாளி வர்க்கம் முழங்குகிறது.
இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் வரவுசெலவு பற்றாக்குறையை சரி செய்யலாம்; விலை வாசி உயர்வை கட்டுப்படுத்துவதன் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்தலாம்; செல்வங்களின் மீது வரி போடுவதன்மூலம் பொது மக்களுக்கான அரசின் செலவினங்களை அதிகப்படுத்தலாம்; இந்தியாவை விட்டு வெளியேறும் நிதிமூலதனங்களை கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம் நிதி நெருக்கடியை சமாளிக்கலாம்; இதையெல்லாம் செய்யும் போது தான் மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும். மக்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.அதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும். மக்களின் கைகளில் பணம் புரளும். பணம் புரளும் போதுதான் மக்களின் வாங்கும் சக்தி உயரும். பொருளாதாரம் சுய சார்பு பெறும். ஆனால், இதையெல்லாம் நவீனதாராளமயக் கொள்கைகள் செய்யவிடாது. எனவே தான் ஜனவரி 8,9 நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளை தடுத்து நிறுத்து என்ற கோரிக்கையை மையமாக வைத்து இரண்டு நாள் வேலை நிறுத்தம் மாபெரும் போராட்டமாக எழுகிறது.
ஆர்.எஸ்.செண்பகம்
கட்டுரையாளர்: சிஐடியு, மாநிலச் செயலாளர்