உடனடியாக பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்யுமாறு மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சருக்கு டி.கே.ரங்கராஜன், MP கடிதம்
தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டார பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கூலி வழங்காதது குறித்து மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சருக்கு டி.கே.ரங்கராஜன் கடிதம் எழுதியுள்ளார்.அதன் விவரம் வருமாறு:-தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டாரத்தில் அலுவலக பராமரிப்புப் பணிகள் வாடிக்கையாளர் சேவையில் எழுத்தர் பணி, ஓட்டுநர்கள், நிலத்தடி தரைவழி தொலைபேசி பராமரிப்பு, அகண்ட அலைவரிசை பராமரிப்பு, கோபுர பராமரிப்பு, கேபிள் பராமரிப்பு போன்ற பணிகளில் 6000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் மூலம் இவர்கள் பணிபுரிகிறார்கள். இந்த அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் தில்லியிலுள்ள பிஎஸ்என்எல் கார்ப்பரேட் அலுவலகத்திலிருந்து தங்களுக்கு தேவையான நிதி கிடைத்த பிறகு ஒப்பந்த ஊழியர்களுக்கான கூலியை தருகிறார்கள்.
தில்லியிலுள்ள பிஎஸ்என்எல் கார்ப்பரேட் அலுவலகம் தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டாரத்திற்கு நிதி ஒதுக்காததால் தமிழ்நாடு வட்டாரத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கூலி தரப்படவில்லை என்ற விவரத்தை எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.டிசம்பர் 2018, ஜனவரி மற்றும் பிப்ரவரி 2019 ஆகிய மூன்று மாதங்களுக் கான கூலி இதுநாள் வரை பெரும் பான்மையான ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு, தமிழ்நாடு வட்டாரத்திற்கு சேர வேண்டிய தொகையினை விரைந்து அனுப்பி உதவிடவும், அதன் மூலம் இங்குள்ள ஒப்பந்த ஊழியர்கள் உரிய நேரத்தில் தங்கள் மாதாந்திர கூலியை பெற்று உற்சாகமாக பணிபுரியச் செய்யவும் வேண்டுகிறேன்.இவ்வாறு ரங்கராஜன் தெரிவித்திருக்கிறார்.