2019 பிப்ரவரி மாதத்தில் BSNL சாதனை
18.04.2019 அன்று TRAI அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரப்படி, ஜியோ நிறுவனத்திற்கு அடுத்தபடியாக, நமது நிறுவனம் மட்டும் தான், 9 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை 2019 பிப்ரவரி மாதத்தில் இணைத்துள்ளோம். வெறும் 3G தொழில்நுட்பத்தை வைத்து கொண்டு, நாம் வாடிக்கையாளர்களை கூடுதலாக இணைத்துள்ளதை, வாடிக்கையாளர்கள் மத்தியில் நமது நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. மற்ற நிறுவனங்கள் லட்ச கணக்கான வாடிக்கையாளர்களை பிப்ரவரி மாதத்தில் இழந்துள்ளனர்.
======================================================================
தனது இணையதள வேகத்தை BSNL அதிகரித்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் BSNLன் இணைய தள வேகம் 7% உயர்ந்துள்ளது என OPEN SIGNAL என்கிற நிறுவனம் 01.12.2018 முதல் 28.02.2019 வரை நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களின் வேகத்திற்கு இதனால் ஈடு கொடுக்க இயலவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையின் படி பாரதி ஏர்டெல் வேகமான வலைத்தளத்தையும், அதனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடோபோன் ஐடியா ஆகியவையும் உள்ளனவாம்.
======================================================================
தனது OFC கேபிள்களை BSNL குத்தகைக்கு விட உள்ளதாம்
தனது மிகப்பெரிய ஆப்டிக் ஃபைபர் வலைத்தளத்தை குத்தகைக்கு விட்டு அதிகப்படியான வருவாயை ஈட்ட BSNL முடிவெடுத்துள்ளதாக BSNL CMD திரு அனுபம் ஸ்ரீவாஸ்தவா பத்திரிக்கைகளுக்கு தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. அதன் படி 7.5 லட்சம் கிலோ மீட்ட ஆப்டிக் ஃபைபர் வலைத்தளத்தை BSNL வைத்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸிடம் இருந்து பெற்ற 1.78 லட்சம் கிலோமீட்டருடன் சேர்த்து 3.2 லட்சம் கிலோமீட்டர் ஆப்டிக் ஃபைபரையும், ஏர்டெல் நிறுவனம் 2.5லட்சம் கிலோ மீட்டரையும், வொடோபோன் ஐடியா நிறுவனம் 1.60 லட்சம் கிலோ மீட்டர் ஆப்டிக் ஃபைபரையும் வைத்துள்ளனவாம்.
======================================================================
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவைகளை நிறுத்தியது.
கடந்த 25 ஆண்டு காலம் சேவை கொடுத்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 17.04.2019 அன்று இரவிலிருந்து தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது. 17.04.2019 அன்று இரவு 10.30 மணிக்கு அமிர்தசரஸிலிருந்து மும்பை வழியாக டெல்லிக்கு சென்ற விமானம் தான் அதன் கடைசி பயணம். அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்களுடைய அனைத்து உள்நாட்டு வெளிநாட்டு விமான சேவைகளையும், உடனடியாக நாங்கள் நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எங்களின் கடைசி விமான சேவை இன்று செயல்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஜெட் ஏர்வேஸ் ஒவ்வொரு நாளும் 600 விமான பயணங்களை செயல்படுத்தி வந்தது என்பதை நாங்கள் நினைவு படுத்த விரும்புகிறோம். விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸுக்கு அடுத்து மூடப்படும் இரண்டாவது விமான சேவை இது என்பது குறிப்பிடத்தக்கது.
======================================================================
2016-18ல் 50 லட்சம் வேலைகள் இழப்பு ஏற்பட்டுள்ளது
பெங்களூரை சார்ந்த அசிம் ப்ரேம்ஜி பல்கலைக் கழகத்தின் STATE OF WORKING INDIA(SWI)- 2019 என்கிற அறிக்கை, இந்தியாவில் 2016-18ல் 50 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை நினைவு படுத்துகிறோம். பண மதிப்பிழப்பு நடவடிக்கை லட்சக்கணக்கான வேலை வாய்ப்புக்களை பறித்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் கூறியிருந்ததை இந்த அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது. நாடு இன்று சந்திக்கும் கடுமையான பிரச்சனைகளில் வேலையின்மை பிரதானமானது. ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என நரேந்திர மோடி கடந்த தேர்தலில் உறுதி மொழி கொடுத்திருந்தார். அந்த உறுதி மொழியை நிறைவேற்றுவதில் அவர் கடுமையான தோல்வியை சந்தித்துள்ளார்.
======================================================================
இந்த நிதிஆண்டின் இரண்டாவது பாதியில் தொலை தொடர்பு கட்டணங்கள் உயரும் என EDELWEISS நிறுவனம் கூருகிறது.
இந்த நிதியாண்டான 2019-20ன் இரண்டாவது பாதியில் இந்திய தொலைதொடர்பு கட்டணங்கள் உயரும் என EDELWEISS நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. மொபைல் ப்ராண்ட் பேண்ட் சேவைகளில் போதுமான அளவு நுழைவு என்பது ஏற்பட்டு அது ஒரு முழு நிறைவு நிலையை அடைந்து விட்டது என்பதால் இந்த விலை உயர்வு என்பது ஏற்படும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இது BSNLக்கு ஒரு நல்ல செய்தி. ரிலையன்ஸ் ஜியோவின் கழுத்தறுப்பு விலைக்குறைப்பின் காரணமாகவே BSNLன் வருவாய் கடுமையாக குறைந்து, அதன் காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டது என்பதை நாம் நினைவு படுத்த விரும்புகிறோம். கட்டணங்கள் உயர்ந்தது என்றால் BSNL ன் நிதி நிலையும் மேம்படும்.
======================================================================
2018-19ஆம் ஆண்டில் BSNLன் நஷ்டம் குறைந்துள்ளது.
கடந்த நிதியாண்டான 2018-19ல் BSNL தனது நஷ்டத்தை 7,500 கோடி ரூபாய்களாக குறைத்துள்ளது. 2017-18ஆம் ஆண்டில் இந்நிறுவனம் 7992 கோடி ரூபாய்கள் நஷ்டம் அடைந்திருந்தது. இந்த செய்தியினை BSNL CMD இன்று எகானமிக்கல் டைம்ஸ் பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளார்.
2019ஆம் நிதியாண்டில் BSNL நிறுவனம் B2B இணைப்புகள் உள்பட 91,000 புதிய ENTERPRISE வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 50% அதிக வளர்ச்சி. 2016-17ஆம் ஆண்டில் BSNLன் நஷ்டம் 4,793 கோடி ரூபாய்களாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் கடுமையாக உயர்ந்து வந்த BSNLன் நஷ்டம் இந்த ஆண்டு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒரு செய்தியாகும்.
======================================================================
BSNLக்கு பிச்சைப் பாத்திரம், ஆனால் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் கடன் தள்ளுபடி
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, தனக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என BSNL நிறுவனம், மோடி அரசாங்கத்திடம் கையேந்தி நின்றுக் கொண்டிருகிறது. BSNLன் முன்மொழிவின் படி, அலைக்கற்றைக்கான பணத்தில் 50 சதவிகிதத்தை BSNL நிறுவனம் தரும் என்றும் மீதமுள்ள 50 சதவிகிதத்தை அரசாங்கம் தனது முதலீட்டை அதிகரித்துக் கொள்வதின் மூலம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முதலீட்டை அதிகரித்துக் கொள்வது என்பது கணக்கில் செய்யப்படுமே ஒழிய அரசாங்கம் இதற்காக ஒரு நயா பைசா கூட BSNLக்கு தரவேண்டியதில்லை. பிரச்சனை இப்படியாக இருக்கும் போதும், மோடி அரசாங்கம் BSNLக்கு 4G அலைக்கற்றையை ஒதுக்கவில்லை. ஆனால் அதே சமயத்தில் மோடி அரசாங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 5.5 லட்சம் கோடி ரூபாய்கள் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக பத்திரிக்கை செய்திகள் வந்துள்ளன. இந்த 5.5 லட்சம் கோடி ரூபாய்கள் தள்ளுபடியில், பாராளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 1.56 லட்சம் கோடி ரூபாய்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளனவாம். தள்ளுபடி செய்யப்பட்ட இந்த 5.5 லட்சம் கோடி ருபாய்கள் தள்ளுபடி மூலம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பலன் பெற்றுள்ளது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இது தான் மோடி அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை. இந்திய நாட்டுமக்களுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான BSNLக்கு பிச்சைப்பாத்திரமும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் தள்ளுபடியும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய, மாநில சங்க இணையம், மற்றும் THE HINDU நாளிதழ்