தமிழக வீராங்கனை கோமதிக்கு தங்கம்
23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது.மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை கோமதி பந்தய தூரத்தை 2 நிமிடம் 2:70 வினாடியில் கடந்து தங்கப்பதக்கத்தை முத்தமிட்டார்.இந்த ஓட்டப்பந்தயத்தின் பெரும்பாலான நேரங்களில் 3-ஆம் இடத்திலிருந்த கோமதி கடைசி 100 மீட்டரில் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி தங்கம் வென்றுள்ளார்.இந்த தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கம் இதுவாகும். தங்கப்பதக்கம் வென்ற கோமதி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
சோகத்தை வென்ற கோமதி
திருச்சியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 2013-ஆம் ஆண்டு புனேயில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் முதல் முறையாகக் கலந்து கொண்டு 800 மீ ஓட்டத்தில் 7-வது இடம் பிடித்தார்.அடுத்து வரும் சர்வதேச தொடரில் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, கோமதியை சில சோக நிகழ்வுகள் முன்னேற விடாமல் தடைக் கற்களாய் தடுத்தது. 2016-ல் புற்றுநோய் காரணமாகக் கோமதியின் தந்தை இறந்தார்.அடுத்த சில மாதங்களில் பயிற்சியாளர் காந்தியும் இறந்து போகச் சோகத்தில் சுருண்ட கோமதியால் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட முடியாமல் போனது. இரு வருடங்கள் சரியான மனநிலையில் இல்லாதபோதும் மீண்டும் ஓடவேண்டும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் துளியளவும் குறையவில்லை.மீண்டும் தீவிர பயிற்சியில் களமிறங்கி தற்போது தோஹாவில் நடைபெற்று வரும் 23-வது ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். கோமதி மாரிமுத்து தற்போது பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.