BSNLல் விருப்ப ஓய்வு திட்டத்தை அமலாக்க மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெற, தொலை தொடர்பு துறை தேர்தல் ஆணையத்தை அணுகும் என பத்திரிக்கை செய்திகள் வெளி வந்துள்ளன. தொலை தொடர்பு துறையின் இந்த முயற்சியினை BSNL ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது.
அதிகப்படியான ஊழியர்களால் தான் BSNL பொருளாதார நெருக்கடியை சந்திக்கிறது என தொலை தொடர்பு துறை ஒரு சித்திரம் வரைய முயற்சிக்கிறது. உண்மையென்னவென்றால், அரசாங்கத்தின் ஜியோ ஆதரவு BSNL விரோத கொள்கைகள் தான் BSNLன் நெருக்கடிக்கு காரணம். தற்போது இருப்பதை விட ஒரு லட்சம் ஊழியர்கள் அதிகமாக இருந்த 2004ஆம் ஆண்டில், இதே BSNL, 10,000 கோடி ரூபாய்களை நிகர லாபமாக பெற்றது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே ஊழியர்களின் எண்ணிக்கை என்பது உண்மையான பிரச்சனை இல்லை.
எதார்த்தத்தில், 2014ஆம் ஆண்டிலேயே BSNL மீண்டெழத் துவங்கியது. 2014-15, 2015-16 மற்றும் 2016-17ஆம் ஆண்டுகளில் அது செயல்பாட்டு லாபத்தை சம்பாதித்தது. 2016, செப்டம்பரில் ரிலையன்ஸ் ஜியோ தனது சேவையை துவங்கிய பின்புதான் பிரச்சனை உருவானது. தனது பொருளாதார பலத்தைக் கொண்டு, கழுத்தறுப்பு விலை குறைப்பின் மூலம் தனது போட்டியாளர்களை அழிக்க முயற்சித்தது. ரிலையன்ஸ் ஜியோவின் கழுத்தறுப்புக்கு எதிராக இருந்த ஒரே காரணத்திற்காக, அப்பொழுது தொலை தொடர்பு துறையின் செயலாளராக இருந்த J.S.தீபக் அவர்கள் அசாதரணமான முறையில் அந்த பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்..
ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் பெரிய அளவில் உதவி புரிந்தது. முதலில், கழுத்தறுப்பு விலை குறைப்பு தொடர்பாக தான் 2003, மே மாதத்தில் தெரிவித்த விளக்கத்தை அதுவே மாற்றியது. இரண்டாவதாக 2017 அக்டோபர் மாதத்தில் IUC கட்டணத்தை குறைத்ததன் மூலம் ரிலையன்ஸ் ஜியோவிற்கு 1000 கோடி ரூபாய் அளவிற்கு ஆதாயத்தை கொடுத்ததோடு மட்டுமல்லாமல், பழைய தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு கடுமையான வருவாய் இழப்பை ஏற்படுத்தியது.
BSNL நிறுவனத்தை உருவாக்கும் போது, BSNLன் நிதி ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படும் என மத்திய அமைச்சரவை உறுதி அளித்திருந்தது. ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால், அரசாங்கம் சிற்றன்னை மனப்பாங்குடன் தான் BSNLஐ நடத்துகிறது. BSNLன் வளர்ச்சியை மிகப்பெரிய அளவில் பாதிக்கக் கூடிய வகையில் இன்று வரை அதற்கு 4G அலைக்கற்றை வழங்கப்படாததே மிகச் சிறந்த உதாரணம்.
2018, ஜனவரி மாதத்தில் மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா அவர்கள் BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படும் என BSNLன் அனைத்து சங்கங்களிடம் உறுதி அளித்தார். ஆனால் உறுதி மொழி கொடுத்து ஒரு ஆண்டு காலத்திற்கு மேலாகியும், இந்நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படாதது என்பது பொதுத்துறை நிறுவனமான BSNLன் சிறகுகளை வெட்டும் அரசின் திட்டமிட்ட சதி.
13,000 கோடி ரூபாய்கள் அளவிற்கு தான் BSNLன் கடன் என்பது உள்ளது. உண்மையில் ஒட்டு மொத்த தொலை தொடர்பு தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களிலேயே BSNLதான் குறைந்த கடன் உள்ள நிறுவனமாகும். ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஒரு லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல் கடன் வைத்துள்ளன. அப்படி இருந்த போதும், வங்கிகளிடம் இருந்து கடனை பெற BSNLக்கு தொலை தொடர்பு துறை தடை விதிக்கிறது. இதுவும் BSNLன் வளர்ச்சியை தடுப்பதற்கான அரசின் தெளிவான நடவடிக்கைகளின் ஒன்று.
சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை காப்பாற்ற அரசாங்கம் எவ்வளவு வேகமாக செயல்பட்டது என்பதை நாடே பார்த்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை காப்பாற்ற பாரத ஸ்டேட் வங்கி தலைமை தாங்கும் வங்கிகளை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு 1,500 கோடி ரூபாய்களை கொட்டி கொடுக்க மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உத்தரவிட்டார். இத்தகைய கருணையை அரசுக்கு முழுமையாக சொந்தமான BSNLன் மேல் இவர்கள் காட்ட வில்லை. கடந்த 18 ஆண்டுகாலமாக BSNL நிறுவனத்தின் இருத்தலுக்காக அரசாங்கம் ஒரு நயா பைசா கூட உதவவில்லை என்ற விஷயம் அனைவருக்கும் ஆச்சரியம் தரும் உண்மையாகும்.
MTNL நிறுவனத்தில் இரண்டு முறை விருப்ப ஓய்வு திட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. ஆனால் அது MTNLன் பொருளாதார புத்தாக்கத்திற்கு எந்த வகையிலும் பயன் தரவில்லை. அந்நிறுவனத்தின் பொருளாதார நெருக்கடி அதன் கழுத்துவரை உள்ளது. எனவே BSNLன் பொருளாதார மீட்சிக்கு விருப்ப ஓய்வு திட்டம் பயன் எதுவும் தராது.
அரசாங்கம் உண்மையில் BSNLன் பொருளாதார மீட்சியை உறுதி செய்ய விரும்பினால், உடனடியாக அதற்கு 4G அலைக்கற்றையை ஒதுக்க வேண்டும். தனது வலைத்தளங்களை விரிவாக்கம் செய்யவும், நவீனப்படுத்தவும் தேவையான மிதமான வட்டியுடன் கூடிய கடனை BSNLக்கு வழங்கி பொருளாதார உதவி செய்ய வேண்டும். தனது காலியிடங்கள் மூலமாக நிதி திரட்ட வேண்டும் என்கிற சங்கங்களின் கோரிக்கைக்கு ஒப்புதலை வழங்க வேண்டும்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய சங்கம் ஊடகங்களுக்கு வழங்கிய செய்தி குறிப்பு