07.08.2019, புதன்கிழமை, சேலம் PGM அலுவலகம், மதியம் 12.30மணி
சென்னை கூட்டுறவு சங்கத்தில் நடைபெறும் முறைகேடுகள் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. உறுப்பினர்களின் உதிரத்தில், வியர்வையில் விளைந்த சொசைட்டி, இன்று சில கயவர்களின் பிடியில் சிக்கியுள்ளது. சாதாரண கடனுக்காக, விண்ணப்பித்து பல மாதங்கள் காத்திருந்தாலும், கடன் வழங்க படுவது கிடையாது. சரி, வேறு எங்காவது கடன் வாங்கலாம் என்பதற்காக கணக்கை முடிக்க விண்ணப்பித்தால் அதுவும் கணக்கு வழக்கு இல்லாமல் கால தாமதம் செய்யப்படுகிறது. அதனால், வேறு இடங்களில் கடனும் வாங்க முடியாமல் நமது ஊழியர்கள் சந்திக்கும் அவலங்கள் கொடுமையிலும் கொடுமை.
இதையெல்லாம் பொறுத்து கொள்ள முடியாமல், இறக்க நேரிட்டால் கூட, இறந்த உறுப்பினர் வாரிசுகளுக்கு பணப்பலன் கொடுக்காமல் அந்த குடும்பத்தையும் அவரின் அப்பாவி பார்ட்னரையும் படுத்தும் பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல. குருவி சேர்ப்பது போல், நாம் சேமித்து வைத்திருந்த டெபாசிட் தொகையை மொத்தமாக அள்ளி வாங்கப்பட்ட வெள்ளானுர் நிலம், "வடிவேல் கிணறு" போல் காணாமல் போய்விட்டதாக சொல்கிறார்கள். ஓய்வு பெற்றாலும் சொசைட்டி கிளைக்கு அலையும் நிலைக்கு ஓய்வு இல்லை.
இந்த அவலங்களையெல்லாம் எதிர்த்து 09.05.2019 அன்று நமது BSNLEU சங்கம் அறைகூவல்படி, மாநிலம் முழுவதுமுள்ள சொசைட்டி கிளைகளை நாம் முற்றுகையிட்டோம். கூட்டுறவு சங்க செயலருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. நிலைமையில் முன்னேற்றங்கள் காண பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது. இருப்பினும், மூன்று மாதம் கடந்தும் முன்னேற்றம் இல்லை. இவ்வளவு கொடுமைகளை கண்டும் ஒரே சங்கத்தை சேர்ந்த ஒட்டுமொத்த இயக்குனர் குழுவும் ஒரு நடவடிக்கையும் எடுக்காதது,உறுப்பினர்களுக்கு பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இனியும் பொறுக்க முடியாது என மீண்டும் போராட்ட களம் காண்கிறோம். தமிழ் மாநில BSNLEU சங்கம், சென்னை தொலைபேசி BSNLEU சங்கத்துடன், இணைந்து கூட்டுப் போராட்ட அறைகூவலாக, 07.08.2019, புதன்கிழமை அன்று மாநிலம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் கொடுக்கப்பட்டுள்ளது. நமது மாவட்ட சூழலுக்கேற்ப, நாம், 07.08.2019 அன்று மாவட்டம் முழுவதுமுள்ள தோழர்களை மையப்படுத்தி, சேலம் PGM அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளோம். எனவே, முன்னாள், இன்னாள் சொசைட்டி தோழர்கள், நமது BSNLEU சங்க தோழர்கள், ஓய்வு பெற்ற தோழர்கள் என அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர் என தோழமையோடு அழைக்கிறோம்.
வட்டிக்கு கூட, கடன் கொடுக்க வக்கில்லாத இந்த கொடுமையை எதிர்த்து ஆர்பரிப்போம். உறுப்பினர் சொத்தான சொசைட்டியை மீட்டெடுப்போம்.
கோரிக்கைகள்
01. சாதாரண கடனுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக கடன் வழங்கு!
02. கணக்கு முடிக்க அனைவருக்கும் உடனடியாக கணக்கை முடித்து வை, பலன்களை விரைந்து வழங்கு!
03. ஓய்வு பெற்ற ஊழியர்களின் பலன்களை விரைந்து பட்டுவாடா செய்!
04. இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு காலதாமதமின்றி பணப்பலனை பட்டுவாடா செய்!
05. வெள்ளாணுர் நிலம் விற்றது எவ்வளவு? யாருக்கு விற்கப்பட்டது? எதற்காக விற்கப்பட்டது? வந்த பணம் எங்கே? விவரத்தை வெளியீடு!
06. வெள்ளனூர் நிலம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியீடு!
07. உறுப்பினர் சொத்தை கொள்ளையடிக்காதே!
08. சொசைட்டி வரவு செலவு கணக்கு எங்கே?
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்