25.11.2019 அன்று உண்ணாவிரதத்திற்கான அறிவிப்பு வெளியிட்ட சூழ்நிலையில், 22.11.2019 அன்று BSNLன் DIRECTOR (HR) திரு அர்விந்த் வட்னேர்கர் மற்றும் அந்த உண்ணாவிரத போராட்ட அறிவிப்பில் கையெழுத்திட்டிருந்த சங்கங்களான BSNLEU, BTEU, FNTO, BSNL MS, ATM மற்றும் BSNL OA சங்கங்களின் பொதுச்செயலாளர்கள்/ பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது.
அதன் விவரங்கள் வருமாறு:-
1. விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்தவர்களுக்கு COMMUTATION OF PENSION:-
விருப்ப ஓய்வு திட்டம் 2019ன்படி, அதற்கு விருப்பம் தெரிவித்தவர்களுக்கு, அவர்கள் 60 வயதை அடைந்த பின்னர் தான் ஓய்வூதிய COMMUTATION செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், தற்போதுள்ள விதிகளின் படி ஓய்வு பெற்ற ஒரு ஊழியர், அவர் ஓய்வு பெற்ற ஒரு வருட காலத்திற்குள் ஓய்வூதிய COMMUTAIONக்கு விருப்பம் கொடுக்க வேண்டும். இல்லையெனில், அவர் மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டும். அது விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்களுக்கு பல தேவையற்ற பிரச்சனைகளை உண்டு பண்ணும். மேலும் விருப்ப ஓய்வு திட்டத்தில் சென்றவர், தான் 60 வயதை அடையும் முன்னர் இறந்து விட்டார் என்றால், அவர் குடும்பத்திற்கு, COMMUTATION பலன் கிடைக்காது. இது விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவரின் குடும்பத்தாருக்கு மிகப்பெரிய இழப்பாகும். எனவே தான், விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்களின் மேலே சொல்லப்பட்ட துயரங்களை தவிர்க்கும் வண்ணம் ஓய்வூதிய விதிகளில் தேவையான திருத்தங்கள் செய்ய வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரின.
எனினும் இந்த பிரச்சனைக்கு உறுதியான தீர்வு எதனையும் நிர்வாக தரப்பில் கொடுக்க முடியவில்லை.
2. விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்களுக்கு 3வது ஊதிய மாற்றம்:-
விருப்ப ஓய்வில் சென்ற ஒரு ஊழியருக்கு, முன் தேதியிட்டு அமலாக்கப்படும் ஊதிய மாற்றம் கிடைக்காது என உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் விருப்ப ஓய்வு திட்டம்-2019ல், “இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயனகள் அனைத்தும் முழுமையனவை மற்றும் இந்த திட்டத்தின் கீழ் வருவது, வராதது உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் இறுதியான தீர்வு” என தெளிவாக கூறப்பட்டுள்ளது. VRS-2019ல் உள்ள இந்த பிரிவு, விருப்ப ஓய்வு திட்டத்தில் சென்றவர்களுக்கு 3வது ஊதிய மாற்ற பலன்கள் கிடைக்காது என தெளிவாக்குகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் VRS-2019ல் உள்ள ஷரத்துக்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, முன் தேதியிட்டு ஊதிய மாற்றம் அமலாக்கப்பட்டால், விருப்ப ஓய்வு திட்டத்தில் சென்றவர்களுக்கும் அது கிடைக்கும் என BSNL நிர்வாகம் தெளிவான உறுதி மொழி கொடுக்க வேண்டும் என சங்கங்கள் கோரியது.
ஆனால் எந்த ஒரு உறுதிமொழியையும் நிர்வாகத்தால் வழங்க இயலவில்லை.
3.ஓய்வு பெறும் வயது தொடர்பாக BSNL உருவாகும் போது அரசு கொடுத்த வாக்குறுதி:-
அரசு விதிகளின் படியே BSNLல் இணைந்துள்ள ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது இருக்கும் என BSNL உருவாகும் போது, BSNL நிர்வாகம் 02.01.2001 தேதியிட்ட தனது கடித எண் BSNL/4SR/2000 மூலம் உறுதி அளித்தது. ஆனால் இந்த உத்தரவுக்கு மாறாக, ஓய்வு பெறும் வயதை 58ஆக குறைக்கப்படும் என ஊழியர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். எனவே, இந்த உறுதி மொழி கடைபிடிக்கப்படும் என நிர்வாகம் ஒரு உத்தரவாதம் தரவேண்டும் என சங்கங்கள் கேட்டுக் கொண்டன.
ஆனால் பல்வேறு காரணங்களால், இதில் ஒரு தெளிவான உத்தரவாதம் தருவதை நிர்வாகம் தவிர்த்தது.
4.VRSக்கு பிந்தைய நிலையில், பணியிட மாற்றல் மற்றும் பணிச்சுமை சந்திப்பதற்கான திட்டம்:-
ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்லவில்லை என்றால், அவர்கள் பணியிட மாற்றலில் அனுப்பப்படுவார்கள் என உயர் அதிகாரிகள் மிரட்டுவதை சங்கங்கள் கடுமையாக குற்றஞ்சாட்டினர். இந்த மிரட்டலில் ஈடுபட்ட உயர் அதிகாரிகளின் பெயர்களை கூட சங்கங்கள் குறிப்பிட்டு, ஊழியர்கள் மாற்றப்படக்கூடாது என்பதற்கான உத்தரவாதத்தை நிர்வாகம் தரவேண்டும் என கோரிக்கை வைத்தன.
இந்த கோரிக்கையின் மீது நிர்வாகத்தின் அணுகுமுறை சாதகமாக இருந்தது.
5. ஊதிய பட்டுவாடா, பிடித்தங்கள் உரிய மட்டங்களுக்கு வழங்குவது மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய நிலுவை:-
அக்டோபர் மாத ஊதியம் உடனடியாக வழங்கப்பட வேண்டும், மே, 2019ல் இருந்து, ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை உரிய மட்டங்களுக்கு உடனடியாக செலுத்த வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு 10 மாத ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரின.
எனினும், இந்த பிரச்சனைகளில் எந்த ஒரு உறுதி மொழியையும் நிர்வாக தரப்பில் வழங்க முடியவில்லை.
6. மூன்றாவது ஊதிய மாற்றமும் ஓய்வூதிய மாற்றமும்:-
இந்த இரண்டு பிரச்சனைகளும் மேலும் காலதாமதமின்றி தீர்வு காணப்பட வேண்டும் என சங்கங்கள் கோரிக்கை வைத்தன.
இந்த இரண்டு பிரச்சனைகளும், தொலை தொடர்பு துறை செயலாளரோடு விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் என்று நிர்வாக தரப்பில் தெரிவித்ததோடு, இதற்கான ஒரு கூட்டத்தை BSNL நிர்வாகம் விரைவில் ஏற்பாடு செய்யும் என்றும் தெரிவித்தது.
7. 4G சேவைகள் துவக்கம்:-
அரசாங்கம் ஒதுக்கியுள்ள, அலைக்கற்றைகளை பயனபடுத்தி 4G சேவைகளை உடனடியாக துவக்க வேண்டும் என சங்கங்கள் கோரின.
இதற்கு பதிலளித்த நிர்வாக தரப்பு, 2020 மார்ச் 31க்கு முன் 4G சேவைகளை BSNL துவக்கும் என்று கூறியது.
விவாதம் 2 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. அந்தக் கூட்ட முடிவுகளின் மீது விவாதம் நடத்திய அந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட அனைத்து சங்க பிரதிநிதிகள், நிர்வாகத்தின் பதில் திருப்திகரமாக இல்லையென்றும், திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவது என்றும் ஏகமனதான முடிவுக்கு வந்தனர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய சங்க வலை தளம்