Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, June 13, 2020

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நீதிமன்றத்தை விட வலிமையானவர்களா ?

img

சிறைக்குச் செல்ல நேரிடும் என உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை


மத்திய அரசுக்கு உரிமம் மற்றும் அலைக்கற்றை கட்டணம் செலுத்தாத தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.நீதிமன்றத்தை விட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வலிமையானவர்களா ? என கேள்வி எழுப்பியுள்ளது.

வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு சேவைநிறுவனங்கள், மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறைக்கு உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணமாக ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கியை செலுத்துமாறு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்று செயல்படுத்தவில்லை.

இதுதொடர்பாக மத்திய தொலைத் தொடர்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. அதில்,தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிலுவைத் தொகையை செலுத்த 20 ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது. தனியார் நிறுவனங்களிடம் இருந்து பாக்கித் தொகையை வசூலிக்க வலியுறுத்த வேண்டாம்என்று கூறி சுற்றறிக்கை அனுப்பிய தொலைத் தொடர்புத்துறை அதிகாரிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள்  கண்டனம் தெரிவித்தனர்.

இந்த வழக்கு வியாழனன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அப்துல் நஜீர்,எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வு முன்பு விசா ரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி அருண் மிஸ்ரா கூறுகையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை அந்த நிறுவனங்களே கணக்கிடுவது அல்லது அதனை அவர்களே மறுமதிப்பீடு செய்வதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். கடந்த ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி இந்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி அபராதத் தொகை மற்றும் அதற்கான வட்டியை சேர்த்து செலுத்த வேண்டும். மத்திய தொலைத்தொடர்புத்துறை டெலிகாம் நிறுவனங்களுக்காக 20 ஆண்டுகள் அவகாசம் கோருவது மற்றும் தாங்களே அந்த தொகையை நிர்ணயிப்பது முற்றிலும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை யாக எடுத்துக்கொள்வோம்.

இதுபோன்ற சுய நிர்ணயத்தை யார் அனுமதித்தார்கள்?. இந்த விவகாரத்தில் சி.ஏ.ஜி.அலுவலகம் தணிக்கை செய்ய வேண்டும். இது நீதிமன்றத்தின்  மாண்பு தொடர்பான விவகாரமாகும். தாங்கள் நீதிமன்றத்தை விட வலிமையானவர்கள் என்று தொலைதொடர்பு நிறுவனங்கள் கருதுகின்றனவா? தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நிர்வாகஇயக்குநர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். இந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மக்களின் பணத்தை குவித்து அந்த வருமானத்தில் இருந்து ஒரு சிறுபகுதியை கூடஅரசாங்கத்துக்கு செலுத்தக்கூடாது என்றுநினைக்கிறார்கள் என்று கடும் கண்டனம் தெரிவித்தார்.  

இந்த வழக்கின் மீதான விசாரணை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Theekkathir - Wikipedia