ஜூலை 3ஆம் வாரத்தில் பாதுகாப்புத்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
அனைத்திந்திய பாதுகாப்புத்துறை தொழிலாளர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :
மத்திய அரசுத்துறை நிறுவனமான 41 பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனமாக மாற்றி பின்னர் தனியார்மயப்படுத்தும் நோக்கோடு கோவிட் 19 நிவாரண அறிவிப்பில் மத்திய நிதியமைச்சர் அறிவித்ததைக் கண்டித்து நாடெங்கிலும் உள்ள பாதுகாப்புத்துறை ஊழியர்கள் கோவிட். 19 ஊரடங்கிலும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
அரசின் முடிவைக் கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்து பாதுகாப்புத்துறையின் அனைத்து தொழிற்சங்கங்களும், சம்மேளனங்களும் (ஏஐடிஇஎப், ஐஎன்டியுசி, பிஎம்எஸ், தொமுச அண்ணா தொழிற்சங்கம் மற்றும் டாக்டர். அம்பேத்கர் தொழிற்சங்க அமைப்பு) அதற்கான வேலை நிறுத்த வாக்கெடுப்பு கடந்த 8-6-2020 முதல் 17-6-2020 வரை தமிழகத்தில் உள்ள 6 தொழிற்சாலைகள் உட்பட நாட்டின் 41 தொழிற்சாலைகளிலும் நடைபெற்றது.
இவ்வாக்கெடுப்பில் கலந்து கொண்டதொழிலாளர்களில், 99 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தார்கள்.
இதன் அடிப்படையில் ஜூலை 2-ஆம் வாரத்திற்குப் பிறகு காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்குவதற்கான தேதியை நிர்ணயம் செய்ய தொழிற்சங்கங்கள் முடிவெடுத்தன. மேற்கண்ட சூழ்நிலையில் தற்போது நாட்டில் உள்ள கோவிட்-19ன் தீவிரத்தன்மை பொருளாதார நெருக்கடி மற்றும் எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை கவனத்தில் எடுத்து மற்றும் நமது ராணுவத்திற்குத் தேவையான தளவாடங்களை உற்பத்தி செய்து கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளதால் மத்திய அரசு, தான் எடுத்துள்ள பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனமாக மாற்றும் முடிவை கைவிட வேண்டுமென இது குறித்து பாரதப் பிரதமருக்கும், பாதுகாப்பு அமைச்சருக்கும், பாதுகாப்புத்துறை ஊழியர்களின் அனைத்து சம்மேளனங்களின் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்யவில்லையென்றால், ஜூலை 2-ஆம் வாரத்திற்குப் பிறகு காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்குவதற்கான தேதி நிர்ணயம் செய்யப்படும் என்றும் அந்த கடிதத்தில் தொழிற்சங்கங்களும், சம்மேளனங்களும் தெரிவித்துள்ளன என்றார்.