வெண்மணிச் சாம்பலில்... கவிதை
(பல்லவி)
விசித்திர மானது இக்கதை…
வெண்மணி பூமியின் கொடுஞ்சிதை…
திசையெங்கும் ஓடி, செங்கொடி ஏந்தி,
தியாகப் புரட்சியை விதை,விதை !
(சரணங்கள்)
கூரிய சரித்திரம் தெளியுங்கள்…
கூலியின் போராட்டம் இதுவல்ல;
சேரிகள்,மக்களின் கைகளில்
செங்கொடி பறந்ததே காரணம் !...
செருப்பறி யாத கால்களும்
துண்டணி யாத தோள்களும்
செருக்கர் சாணிப்பால் ஊட்டலும்
சாட்டையில் வாட்டும் இழிநிலை…
செங்கொடி இயக்கத் தலைவர்கள்
சேரியில் நடத்திய எழுச்சியால்
எங்களின் மக்கள் விழித்தனர்;
இழிவினை ஒழிக்கத் திரண்டனர்!...
குடிசைகள் மீதும் செங்கொடி!
குழந்தைகள் கையிலும் செங்கொடி!
இடியென எழுந்தது புரட்சியே!
இழிமிகு ஆண்டைகள் கொதித்தனர்!
‘கொடிகளை இறக்கி வாருங்கள்;
கூலிநெல் நிறைய தருகிறேன்;
அடங்குங்கள்!’ என்றான் ஆண்டைதான்…
‘அடங்கிடோம்’ என்றனர் உழைப்பவர்…
‘மானத்தைத் தந்தது செங்கொடி!
மனிதராய்ச் செய்தது எம்கொடி!
ஈனத்தை ஒழித்தஎம் கொடிதனை
இறக்கிட மாட்டோம்!’ என்றனர்…
அறுபத்து எட்டாம் ஆண்டது
அவனியில் யேசு உதயநாள்…
எரித்தனர் ‘ராமையா குடி’லொடு
எரிந்தனர் நாற்பத்து நான்குபேர்…
கதறிய குழந்தைகள், மக்களும்
கருகிய சாம்பலாய் ஆயினர்…
சிதறிய வெண்மணிச் சாம்பலில்
எழுந்திடும் பீனிக்ஸ் பறவைகள்
- (விசித்திரமானது...)
கவிதையாளர் : ந.காவியன்