Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, March 23, 2021

தனிச்சிறப்புமிக்க புரட்சியாளர் பகத்சிங்


“விழிப்படைந்து வந்த  மக்களுடன்  இப்படிப்பட்ட ஆழமான தொடர்பை மற்ற எந்த  ஒரு புரட்சியாளரும் வைத்திருக்கவில்லை. பகத்சிங் போல வேறு எவரும் பொது மக்களுக்கும் இளைஞர்களுக்கும் அன்புக்குரியவர்களாக இல்லை. தில்லி மத்திய சட்டசபையில்  ஒரு குண்டை வீசிய பிறகு  அவர் எழுப்பிய முழக்கத்தால் அவர் தனது போராட்டத்தை அடையாளப்படுத்தினார். ‘புரட்சி ஓங்குக’ என்ற முழக்கம் இந்திய மக்களுக்குஅந்த நேரத்தில் அறிமுகம் இல்லாத ஒன்றாக இருந்தது. சந்தேகத்திற்கு இடமின்றி கம்யூனிஸ்ட் தலைமை சிறிது காலம் முன்பே இம்முழக்கத்தை எழுப்பியது. ஆனால் மக்களைச் சென்றடையவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியின் மீதான வெறுப்பை, மிகப்பெரிய தனிநபர் துணிகரச் செய்கையுடன் பகத்சிங் இணைத்தார். போராடும் தேசத்தின் அடையாளமாகவும், அந்நிய ஆட்சிக்கு எதிரான அதன் வெறுப்பின் வடிவமாகவும் மாறினார்.”

பகத்சிங் குறித்த கம்யூனிஸ்ட் தலைவர் பி.டி.ரணதிவேவின் அனுமானம் சரியானதென்பதை காலம் கணித்தது. பகத்சிங் முன்வைத்த முழக்கமான ‘இன்குலாப் ஜிந்தாபாத்’  (புரட்சி ஓங்குக) என்பது சுதந்திரப் போராட்டத்தின்போது எழுப்பப்பட்ட பலவிதமான முழக்கங்களுள் நிலைத்து நின்ற  ஒரு முழக்கமாக நீடித்தது தற்செயலானதல்ல. இன்றளவும் நாட்டில் அனைத்து அரசியல் கூட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் இந்த முழக்கத்துடன் துவங்குகிறது-முடிகிறது.இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு சங்கம் (எச்.எஸ்.ஆர்.ஏ.) துவக்கப்பட்டபோது 1928 செப்டம்பர் 8 அன்று தில்லியில் ஃபெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இரகசிய கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. மக்களுடன் அடையாளப்படுத்திக் கொள்ளும் பேராவல்  இவற்றில் உறுதிப்படுத்தப்பட்டது. புதிய அமைப்பு தத்துவார்த்த ரீதியில் சோஷலிசத்தின் இலக்கைப் பின்பற்றியது. கூட்டுத் தலைமை ஒன்றையும் உருவாக்க முடிவுசெய்தது. தனிநபர் சாகசவாதத்தை மேற்கொள்ளாது என்றும்  ஆனால் அரசியல் ரீதியாக மக்களைத் தூண்டும் செயல்களை மட்டும் மேற்கொள்ளும் என்றும் தீர்மானித்தது.

பகத்சிங்கால் வழிநடத்தப்பட்ட எச்.எஸ்.ஆர்.ஏ.உணர்ந்த புரட்சியின் நோக்கத்தைப் பொறுத்தவரையில் ‘ஏ சர்வாதிகாரமே எச்சரிக்கை’ என்ற துண்டுப்பிரசுரம் பின்வருவனவற்றைத் தெள்ளத் தெளிவாகக் காட்டியது. “ஒரு மனிதனின் ரத்த சிந்துதல்களுக்கு வருந்துகிறோம். ஆனால் மனிதன் மனிதனால் சுரண்டப்படுவதை முடியாமல் செய்து அனைவருக்கும் சுதந்திரத்தைக் கொண்டு வரும் புரட்சியின் பலி பீடத்தில் தனி தனிநபர்களின் தியாகங்கள் தவிர்க்க முடியாதது”.“செவிடர்களைக் கேட்கச் செய்வதற்காக” என்று சொல்லப்பட்ட துண்டுப்பிரசுரங்களை பகத்சிங்கும்பி.கே.தத்தும் மத்திய சட்டசபையில் 1929 ஏப்ரல் 8 அன்று குண்டுகளுடன் வீசினர்.

“குண்டுகளை எறிவதென்பது எவரையும் கொல்லவோ அல்லது காயப்படுத்தவோ உத்தேசிக்கப்பட்டதல்ல; இது எந்த ஒரு தனி மனிதருக்கு எதிராகவும் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. ஆனால்  ஒரு நிறுவனத்திற்கெதிரானது “. இதுபொதுவாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அடிப்படையில் வேறானது. 1929 ஜுன் 6 அன்று செஷன்ஸ் கோர்ட்டில் பகத்சிங்கால் தயாரிக்கப்பட்டு, அவரது வக்கீல் ஆசப் அலியால் படிக்கப்பட்ட, பகத்சிங்கும் பி.கே.தத்தும் கொடுத்த வாக்குமூலங்கள், புரட்சி யின்மீது அவரது கருத்தை இன்னும் தெளிவாக்கியது.

பகத்சிங் தமது வாக்குமூலத்தில் ஏகாதிபத்திய சட்டத்தின் இரண்டு அருவெறுப்பான பகுதிகளான பொதுப்பாதுகாப்பு மசோதா மற்றும் தொழில் தகராறு மசோதா  ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிட்டார். மற்றொரு முக்கியமான ஆதாரமாக கம்யூனிஸ்ட் மூன்றாம் அகிலத்திற்கு அனுப்பப்பட்ட தந்தி வாசகம்  இருந்தது.”லெனின் தினத்தன்று, மகத்தான லெனினின் கருத்துக்களை முன்னே கொண்டு செல்ல சிலவற்றை செய்யும் அனைவருக்கும் நாங்கள்  இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ரஷ்யா நிறைவேற்றிக் கொண்டிருக்கும் பெரிய சோதனைகள் வெற்றி பெற வாழ்த்துகிறோம். நாங்கள் எங்கள் குரலையும் அகில உலக தொழிலாளர் வர்க்க இயக்கத்துடன் இணைக்கிறோம்.பாட்டாளி வர்க்கம் வெல்லும்; முதலாளித்துவம் தோற்கடிக்கப்படும்; ஏகாதிபத்தியத்திற்கு மரணம்.”

மேலும் பகத்சிங் தமது கடிதத்தில் “புரட்சி என்பது நடைமுறையில் இருக்கும் சமூக அமைப்பை முற்றிலுமாக தூக்கி எறிவதும் அதற்குப் பதிலாக சோஷலிஸ்ட் அதிகாரத்தை வைப்பதுமாகும். அந்தநோக்கத்திற்காக அதிகாரத்தைப் பெறுவது என்பதேநமது  உடனடி குறிக்கோள். அது நமது உயர்  லட்சியத்தை நிறைவுறச் செய்வதற்காக அதாவது ஒரு புதிய மார்க்சிய அடிப்படையிலான சமூக மறு கட்டுமானத்துக்காக  அவசியம்.” எனக் குறிப்பிட்டார்.1931 மார்ச் 23ல் தூக்கிலிடப்பட்டதற்குப் பிறகுநாடு முழுவதும் 3 நாட்கள் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் ஆகிய 3 தியாகிகளுக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் வீதம் எதிர்ப்பு வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

பகத்சிங் தூக்குக்குப் பழிவாங்க தேசியப் புரட்சிகர  இயக்கத்திற்குத் தொடர்பில்லாத பெயர்தெரியாத இளைஞர்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளையும் அப்ரூவர்களையும் 12 இடங்களில் சுட்டனர். 2வது லாகூர் வழக்கில் முக்கியமான சாட்சியாக மாறிய பனீந்திர நாத்கோஷ் என்பவர் பீகாரின்பேட்டியாவில் கொல்லப்பட்டார். கராச்சி காங்கிரஸ் கூட்டத் தொடருக்கு காந்தி சென்றபோது லாகூருக்கும் கராச்சிக்குமிடையே ஒவ்வொரு பெரிய ரயில்வே நிலையத்திலும் கருப்புக் கொடிகளுடன் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு முன் தேசப்பிதா  என்று வாழ்த்திய அதே மக்கள் தான் இதையும் செய்தனர்.தேசியப் புரட்சியாளர்களைப் பொறுத்தவரையில் இந்த  இயக்கப் போக்கை அப்போது மிகச்சிறந்த முறையில் அடையாளப்படுத்தியவரும், குறிக்கோள்களைத் தெளிவாக இணைத்தவரும் பகத்சிங்தான். அதனால்தான்  அவர் வெறும் தனிநபராக  இருந்து விடாமல் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தவராக உருவானார்.பகத்சிங்கின் தனிச்சிறப்பு அர்ப்பணிப்பு மிக்க புரட்சி வாழ்க்கையின் உச்சம். இன்றைய இளைஞர்கள் அவரின் அடியொற்றி ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுடன் சோஷலிச இலக்கை நோக்கிப் பயணிக்க உறுதி ஏற்க வேண்டியது காலத்தின் அவசியம்.

பெரணமல்லூர் சேகரன் 

22.03.2021 பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாள்