Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, April 22, 2021

வரலாற்று சாதனை!


ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை தொகையில், மொத்தமாக இதுவரை  34.98 கோடி ரூபாய்கள்  பட்டு வாடா செய்யப்பட்டது.


BSNL நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற பெயரில், உழைப்பு சுரண்டல் கடுமையாக நடைபெற்று வந்துக் கொண்டிருக்கிறது. சுரண்டப்பட்டு வரும் அந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தர வேண்டிய ஊதியத்தையும் வருடக்கணக்கில், நிர்வாகம் கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டு வருகிறது. ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ் நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கமும், BSNL ஊழியர் சங்கமும் இணைந்து நடத்திய போராட்டம் ஏராளம்.. ஏராளம்...

ஆனாலும் நிர்வாகம் அசைய மறுத்தது. வேறு வழியின்றி நீதி மன்றத்தை நாடுவது என்று முடிவு செய்யப்பட்டது. உழைக்கும் மக்கள் நீதியை பெறுவது கூட அசாதாரனமானது என்பதை புரிந்துக் கொண்ட நமது சங்கங்கள், உழைக்கும் மக்களின் சிரமங்களை முழுமையாக புரிந்துக் கொண்ட ஒரு வழக்கறிஞர், அதுவும் ஒரு மூத்த வழக்கறிஞர் தேவை என்பதை உணர்ந்து, பிரபல வழக்கறிஞர் தோழர் N.G.R.பிரசாத் அவர்களை உரிய முறையில் அணுகினோம். அவர் ஒரு பைசா கூட முன்பணம் வாங்காமல் ஏற்றுக் கொண்டு திறம்பட வாதாடினார். அவரது வாத திறமையால் இன்று நமது நெடு நாளைய காத்திருப்பு ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

முதல் கட்டமாக 1857 ஒப்பந்த தொழிலாளிக்கு 6.10 கோடி ரூபாயும், இரண்டாம் கட்டமாக 2902 ஒப்பந்த தொழிலாளிக்கு 8.40 கோடி ரூபாயும், மூன்றாவது கட்டமாக 20.04.2021 முதல்  4668 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20.47 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 34.98 கோடி ரூபாய் நீதி மன்ற உத்தரவு மூலம் பெற்றுள்ளோம். மொத்தத்தில் 4759 ஒப்பந்த தொழிலாளிகளுக்கு சுமார் 34.98 கோடி ரூபாயை ஒப்பந்தகாரர்களுக்கு பதிலாக மத்திய தொழிலாளர் நல அதிகாரிகள் மூலம் பெற்று சரித்திர சாதனை படைத்து விட்டோம்.

இது சாதாரண நிகழ்வு அல்ல.

தமிழகத்தின் அனைத்து தொழிற்சங்க வரலாற்றில் முக்கியமான சாதனை. BSNL-லில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத வெற்றி. வழக்கு மன்றத்தில் நமக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் மரியாதைக்குரிய திரு N.G. R பிரசாத் மற்றும் வழக்கறிஞர்கள் சதீஸ்குமார், ராம் சித்தார்த் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். நமக்காக உழைத்திட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கும் நமது நன்றிகளும், வாழ்த்துக்களும்.

நமக்கு மிகச்சரியாக வழிகாட்டிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்னாள் தலைவர் தோழர் P.சம்பத் அவர்களுக்கும், BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்களுக்கும், BSNLCCWF பொதுச்செயலர் தோழர் அனிமேஷ் மித்ரா அவர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்.

நமது சங்கங்களின் மீது நம்பிக்கை வைத்து, கடுமையான பிரச்சனைகளை சந்தித்த போதும், உறுதியாக சங்கங்களின் பின் நின்ற அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், அவர்களுக்கு எப்போதும், ஆதரவாக அரவணைத்து நின்று வழிகாட்டிய BSNL ஊழியர் சங்கத்தின் மாவட்ட, கிளை மட்ட தலைவர்களுக்கும், உதவிக்கரம் நீட்டிய ஓய்வூதியர்களுக்கும் தமிழ் மாநில சங்கத்தின் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். அணுகு முறையில் சில பிரச்சனைகள் இருந்தாலும், இதற்கான பணியில் மாநில தலைமை பொது மேலாளர் மற்றும் மாவட்ட மட்டங்களில் கடுமையாக பணியாற்றிய ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்கள்.

வாங்கிய சம்பளத்தில் உள்ள முரண்பாடு, EPF, ESI பிரசனை ஆகியவற்றை அடுத்து சரி செய்வோம்.

நாம் தோற்றதில்லை! 

தோற்கப் போவதுமில்லை!!.

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட  செயலர், BSNLEU
M. செல்வம்,
மாவட்ட செயலர், TNTCWU 
 

தகவல்: BSNLEU / TNTCWU  மாநில சங்கங்கள்