Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, May 30, 2021

பணி நிறைவு பணி பாராட்டுக்கள்


நாளை, (31.05.2021) நமது மாவட்டத்தில், நமது BSNLEU இயக்கத்தை சார்ந்த 6 தோழர்கள்,  இலாக்கா பணி நிறைவு செய்கிறார்கள். ஆறு தோழர்களுமே தங்கள் இலாக்கா பணியை துவங்கிய காலம் தொட்டு, நமது KG போஸ் அணியில் திறம்பட செயல்பட்டவர்கள். கொரானா தொற்றின் கோரத்தாண்டவம் தொடர்வதால், தோழர்களே நேரில் சென்று வாழ்த்தி, கௌரவப்படுத்த முடியவில்லை. இருப்பினும், நெஞ்சில் இருக்கும் நினைவுகளை பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என்கிற அடிப்படையில்,

1. தோழர் B. சுதாகரன், OS(P)., மெய்யனுர்

1982 ல் தொலைபேசி இயக்குனராக குன்னுரில் பணியில் சேர்ந்தார். K.G. போஸ் அணியின்  இரட்டை குழல் துப்பாக்கியாக இருந்த நமது மாவட்டங்கள், குன்னுர், தர்மபுரி இரண்டிலும் பல்வேறு பொறுப்புகளை ஏற்று, தன்னை பொதுவுடைமை சித்தாந்தவாதியாக வளர்த்து கொண்டார். இலாகாவில் சேர்ந்த நாள் முதல் நடைபெறும் அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொள்ளும் தோழர் சுதாகரன், திறமையான  மேடை பேச்சாளர். ஆர்ப்பாட்ட கோஷங்கள் எழுப்புவதில் புதிய யுத்திகளை கடைபிடித்தவர்.   

தர்மபுரி மாவட்டத்தில் மாவட்ட செயலர் பொறுப்பு வரை வகித்தவர். நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ளவர். இயக்க விஷயங்களை தோழர்களிடம் பிரச்சாரம் செய்து, அவர்களை சங்கவாதியாக மாற்றுவதில் திறமை படைத்தவர். இலாக்கா பணி நிறைவு செய்தாலும், உழைக்கும் வர்க்க முன்னேற்றத்திற்காக தன் இயக்க அனுபவங்களை பகிர்ந்து, அதற்காக உழைக்க வாழ்த்துகிறோம். தோழர் சுதாகரனின் பணி நிறைவு காலம் சிறப்பாக அமைய தோழமை வாழ்த்துக்கள் .

2. தோழர் P. ரவிமணி, TT.,  நாமக்கல் 

1984ல் இலாக்காவில் பணியில் சேர்ந்த நாள் முதல், இயக்க பிடிமானம் உள்ள தோழர். அமைதியானவர் ஆனால் கொண்ட கொள்கையில் உறுதியானவர். நாமக்கல் பகுதியில் நமது இயக்கம் வளர அரும்பாடு பட்டவர். வேலை நிறுத்தம் உட்பட இயக்கம் கொடுக்கும் அனைத்து போராட்டங்களிலும், முழுமையாக கலந்து கொண்டவர். பொதுவுடைமை சித்தாந்தத்தை ஏற்றவர். BSNLEU மாவட்ட உதவி தலைவர் பொறுப்பை வகிக்க கூடிய தோழர் ரவிமணியின் பணி நிறைவு காலம் சிறப்பாக அமைய தோழமை வாழ்த்துக்கள்.

3. தோழர் N. மூர்த்தி, TT வாழப்பாடி 

1986ல் இலாக்காவில் மஸ்தூராக நுழைந்து 1992ல் நிரந்தரம் பெற்ற தோழர். திருச்செங்கோட்டில் தொழிற் சங்க பால பாடம் படித்து மஸ்தூராக இருந்த காலம் தொட்டு இயக்கம் கொடுக்கும் அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொள்ளும் துடிப்பு மிக்க தோழர். இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். உழைக்கும் வர்க முன்னேற்றத்தை கொள்கையாக கொண்டு, வர்க சிந்தனையோடு, செயல்படக்கூடிய பண்பான தோழர். ஆத்தூர் பகுதியில் நமது இயக்கம் வளர அவருக்கே உரித்தான பாணியில் இயக்க பணிகளில் பாடுபட்டவர். தோழர் மூர்த்தியின் பணி நிறைவு காலம் சிறப்பாக அமைய தோழமை வாழ்த்துக்கள்.

4. தோழர் P. கனகராஜ், TT,  நாமக்கல் 

1992ல் இலாக்காவில் நிரந்தரம் பெற்றாலும், சுமார் 10 வருடங்கள் மஸ்தூராக பணிபுரிந்தவர்.  மஸ்தூர் பணி காலம் துவங்கி, தன்னை முழுமையாக இயக்கத்தில் இணைத்து கொண்டவர். சங்க பிடிப்பு மிக்க தோழர். இயக்கம் கொடுக்கும் போராட்ட அறைகூவல்களை செம்மையாக நிறைவேற்றுவதோடு மட்டுமில்லாமல், சக தோழர்களையும்  பங்கு பெற செய்வது தோழரின் குணாம்சம். மாவட்ட சங்க நிர்வாகி உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். நீண்ட காலம் நாமக்கல் ஊரக கிளை செயலராக திறம்பட பணியாற்றியவர் . தோழர் கனகராஜின் பணி நிறைவு காலம் சிறப்பாக அமைய தோழமை வாழ்த்துக்கள்.

5. தோழர் S. சேகர், TT மெய்யனுர் 

1982ல் இலாக்காவில் லைன் ஸ்டாப் தோழராக நுழைந்தவர். அன்பானவர், அமைதியானவர், பண்பானவர். சங்கத்திற்கும், கொண்ட கொள்கைகளுக்கும் கட்டுப்பட்டவர். சேலம் நகர பகுதியில் நமது இயக்கம் வளர்வதற்கு தோழர் செய்த சத்தமில்லாத, ஆனால், சக்திமிக்க பணிகள் என்றும் நினைவு கூற தக்கவை. தற்போது மாவட்ட அமைப்பு செயலராக உள்ளார். வர்க்க குணாம்சம் கொண்ட தோழர். இயக்கம் கொடுக்கும் போராட்ட அறைகூவல்களில் முழுமையாக கலந்து கொள்பவர். 1982ல் பணி நிரந்தரம் பெற்ற தோழர்களில் கடைசியாக ஓய்வு பெறக்கூடிய ஒரு மூத்த தோழர்.  லைன் ஸ்டாப் பகுதியின் ஒரு தலைமுறையின் கடைசி தோழர். இளைய வயதில் பணி நிரந்தரம் பெற்ற தோழர். சுமார் 40 ஆண்டுகள் அவரின் சேவையை  இந்த இலாகாவின் வளர்ச்சிக்கு வழங்கியவர். தோழர் S. சேகரின் பணி நிறைவு காலம் சிறப்பாக அமைய தோழமை வாழ்த்துக்கள்.     

6. தோழர் P. செந்தமிழ்செல்வன், TT திருச்செங்கோடு 

பல ஆண்டு காலம்  மஸ்தூர் பணிக்கு பின், 1993ல் பணி நிரந்தரம் பெற்ற தோழர். பரமத்தி வேலூர் பகுதியில் பணியை துவங்கி பின்னர் திருச்செங்கோடு பகுதிக்கு வந்தவர். ஆரம்ப காலம் துவங்கி நமது இயக்கத்தில் பிடிமானம் உள்ள தோழர். தன் மனதிற்கு சரி என்று பட்ட கருத்துக்களை முன்வைப்பதில் முனைப்புடன் இருப்பவர். ஆனால், கூட்டு முடிவுக்கு கட்டுப்படுபவர். இயக்கம் கொடுக்கும் போராட்ட அறைகூவல்களில் முழுமையாக கலந்து கொள்பவர். சங்க பிடிமானம் உள்ள தோழர். தன் இலாக்கா வாழ் நாள் முழுவதும் நமது இயக்கத்தோடு பயணித்தவர். தோழர் செந்தமிழ் செல்வனின் பணி நிறைவு காலம் சிறப்பாக அமைய தோழமை வாழ்த்துக்கள்.

அனைவரின் பணி ஓய்வு காலம் சிறப்பாக அமைய, BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள்.


தோழமையுள்ள, 
E. கோபால், 
மாவட்ட செயலர்